பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/6

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

ஹெர்க்குலிஸ்


சீயஸ் கடவுளின் தேவியான ஹீரா, அவருடைய ஏற்பாட்டைப்பற்றிக் கேள்வியுற்று, அவரிடம் கோபமடைந்தாள் இதனால், அல்க்மினா கருவுற்றதிலிருந்தே அவளுக்குப் பிறக்கப் போகும் குழந்தைக்குத் தன்னால் இயன்ற கேடு செய்ய வேண்டுமென்று ஹீரா தீர்மானித்துக் கொண்டு, அவ்விதமே செய்து வந்தாள்.


உரிய காலத்தில் அல்க்மினா இரட்டைக் குழந்தைகளாக இரு பையன்களைப் பெற்றாள். முதலாவது பிறந்த குழந்தைக் குச் சீயஸ் கடவுளின் விருப்பப்படி ஹெராக்கிளிஸ் என்று பெயர் வைக்கப்பெற்றது: இரண்டாவது குழந்தையின் பெயர் இபிக்ளிஸ். ‘ஹெராக்கிளிஸ்’ என்றால் கிரேக்க மொழியில் ஹீராவின் புகழ்’ என்று பொருள். ஹெராக்கிளிஸைப் பிற்காலத்தில் ரோமானியர் ஹெர்க்குலிஸ் என்று கூறி வந்தனர். அந்தப் பெயரே உலகில் அதிகமாய்ப் பரவிவிட்டது.

ஹொர்க்குலிஸுக்கு ஒரு வயது கூட நிரம்பவில்லை- ஒரு நாள் இரவில் அல்க்மினா, அவனுக்கும் அவன் தம்பிக்கும் பால் புகட்டிவிட்டு, அரண்மனையிலிருந்த வெண்கலக் கேடயம் ஒன்றில் அவர்களைப் படுக்க வைத்திருந்தாள். இரவில் நெடுநேரம்வரை அவள், தாலாட்டுப் பாடி அவர்களைத் தூங்க வைத்துவிட்டு, அவர்களுடைய அறைக்குப் பக்கத்திலிருந்த பள்ளியறைக் குச் சென்று உறங்கிக் கொண்டிருந்தாள். அரண்மனையிலும் வெளியிலும் ஒரே அமைதியாயிருந்தது. அந்த நேரத்தில் குழந்தைகள் இருந்த அறையில் எங்கிருந்தோ இரண்டு நாகங்கள் உள்ளே ஊர்ந்து வந்தன. இரண்டும் கேடயத்தின் அருகே சென்று, தங்கள் படங்களை உயரமாகத் தூக்கி விரித்து ஆடிக்கொண்டு, இரண்டு குழந்தைகளையும் கொத்துவதற்குத் தக்க தருணத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தன. அவைகளின் சீறலைக் கேட்ட பையன்கள் இருவரும் விழித்து எழுந்துவிட்டனர். ஹெர்க்குலிஸ், நிமிர்ந்து உட்கார்ந்துகொண்டு, இரண்டு கைகளாலும் மின்னல் வேகத்தில் இரண்டு பாம்புகளையும் இறுகப் பிடித்து, அவைகளின் கழுத்துகளை நெரிக்கத் தொடங்கினான். அவனுடைய பிடியினால் வேதனையுற்ற நாகங்கள் தங்கள் வால்களால் தரையில் ஓங்கி-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/6&oldid=1074292" இலிருந்து மீள்விக்கப்பட்டது