பக்கம்:05-03-இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/116

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

எனது இனத்துக்கே மென்மை உரியதுதான். அதனிலும் எனது இனத்தில் மென்மையின் தனிச்சின்னம் அனிச்சப்பூ. புலவர்கள் இதனைச் சுட்டியே பெண்ணின் மென்மையை அளவிட்டனர். என்னை ஏன் அளவுகோலாகக் கொண்டனர் ? பரிமேலழகர் விடை தருகின்றார் :

"உலகத்தார் மென்மைக்கு எடுக்கப்பட்ட

அனிச்சப் பூவும் அன்னப்புள்ளின் சிறகும்"80 — என

விளக்கினார். அவர் இவ்வாறு விளக்க வாய்ப்பு நல்கித் திருவள்ளுவர்,


"அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்

அடிக்கு நெருஞ்சிப் பழம்'81 -என அனிச்சத்தின் மென்மையை உயர்த்தினார். "உன்னை மட்டும் உயர்த்தவில்லை. அன்னத்தின் தூவியையும் கூறியுள்ளார். உனக்கு மட்டும் எவ்வாறு உயர்வாகும்?" -என நீங்கள் வினவுவதை உணர்கின்றேன். அன்னத்தின் சிறகு எனது அணிச்சத்திற்கு அடுத்ததாகத்தான் மென்மையில் அமையும். அன்னத்தின் தூவி மோந்தால் வாடாது; கசங்காது. அனிச்சம் மோப்பக் குழையும். இதனை உளத்துக் கொண்டு தான் திருவள்ளுவர் என்னை முதலில் அமைத்தார். தென்றற்காற்று மோதினாலும் ஒரேபொழுதில் அனிச்சம் குழைந்து வாடிவிடும். அன்னத்தின் தூவியோ காதலர் இரவெல்லாம் தன் மேலே படுத்துப் புரண்ட பின்னரே கசங்கும். இதுகொண்டும் எனது அணிச்சத்தின் மென்மையை முதலாவதாகக் கொள்ள வேண்டும், முதலாவதாக மட்டுமன்று, தனிச்சிறப்புடனும் குறிக்கத்தகும் மென்மையானது. இதனால்தான், திருவள்ளுவர்,

"நன்னீரை வாழி அனிச்சமே" -என வாழ்த்துடன் அழைத்து

"நின்னினும் மென்னீரள் யாம்வீழ் பவள்"82 -என அதன் தனி மென்மையைப் புலப்படுத்தினார்.


இக்குறளில் மென்னீரள் என்றது "மென்மையான தன்மையுடையவள்" என்னும் பொருளது. இவ்வாறு தன்மையைக்குறித்ததால் உடல் மென்மை மட்டுமன்று, தன்மையின் மென்மைக்கும் நானே சான்றாகின்றேன்.


80 குறள் :1120 உரை82 குறள் : 1111

81 குறள் :1120