பக்கம்:05-03-இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/43

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

$ இவ்வாறு, நனையாக, அரும்பாக, முகிழாக, மொக்காக, மொட்டாக, போதாக, பொகுட்டாக, பூவின் தரமாகப் பூத்தது மலை.

உலகில் உயர்ந்தது இமயமலை. முதன் முதலில் தோன்றிய மலை என்பர். வெண்மையான பனி படர்ந்ததால் பனிமலை-இமம் மலை (இமம்=பனி) எனப்பட்டது. சேக்கிழார் இவ்வெண்மைத் தோற்றத்தோடு மனக்கண்ணில் காண்கிறார். உவமை வாயிலாகச் சிறப்பிக்கின்றவர், "உலகம் என்னும் ஒளிமணி வல்லிமேல் மலரும் வெண்மலர் போல்வதம் மால்வரை"17 -என வெண்டாமரை மலராகப் பாடுகின்றார். உலகம் என்னும் கொடி மேல் மலர்ந்த நீர்ப் பூவாகக் கண்டு மகிழ்கின்றார்.

பூத்துமலர்ந்த மலையின் புறவிதழாக அகவிதழாக, ஞாலமும் நிலமும் விரிந்தன. இதழ்கள் விரிந்தால் மனங்கமழ வேண்டும் அன்றோ?கமழ்ந்தது. மலைஎன்னும் பூவினது இதழாம் மலையடிவார ஞாலம் மணம் பெற்றதைத் தமிழ்ப் பண்களில் தேர்ந்த பரிபாடல் என்னும் வண்டு, "மாமலை ஞாறிய (மணந்த) ஞாலம்"18 -என இசைக்கின்றது. மதுரைக் காஞ்சி என்னும் பத்துப் பாடலில் ஒரு பாடலாகப் பாடும் தேன் வண்டு, "தேன்தூங்கும் உயர்சிமைய மலைநாறிய வியன்ஞாலம்"19 -எனத் தேனையும் கூட்டி மணம் பெற்ற ஞாலமாகக் கமழ வைக்கின்றது. இவ்வாறு, மணங்கமழும் சூழலால் மலை என்னும் பூவில் பரவிய தாதுக்களின் சேர்க்கையால் ஒரறி உயிர் முதல் ஆறறி உயிர்கள் பிறந்து பெருகின. இவ்வுயிர்கள் வைகும் நிலம் விரிந்த வையத்தை நலங்கிள்ளி என்னும் மன்னன், "நிலமவர் வையத்து வலமுறை வளைஇ"20 -என வையத்தை மலராக-நிலமென்னும் மலராகக் காண்கின்றான்.


17 பெரிய : திருமலைச் சிறப்பு : 3 18 பரி :74 19 மது.கா : 3, 4 20 புறம் 225 : 4