பக்கம்:05-03-இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/71

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

35 வகுக்கப்பட்டது. மணமலர்களைப் பொதுவாக்கித் துய்ப்பதற்கு இலக்கணத்திலும் ஓர் இடுக்கு வைத்தனர். புறத்திணைக்கு வகுக்கப்பட்ட பூக்கள் அடையாளப் பூக்கள். இவை மணமற்றன என்று குறிக்க முடியாது என்றாலும் மணம் கருதிச் சூடப்படுவன அல்ல. இன்ன நிகழ்ச்சியைக் குறிக்க அணியப்படுவது என்ற வகையில் இவை அந்நோக்கக்தை அடையாளங்காட்டுவதால் இவை அடையாளப் பூக்கள். இவ் வடையாளம் ஒரு போர் நோக்கின் சின்னமாகையால் இவை 'சின்னப் பூ' எனப்பட்டன. ஒரு நிகழ்ச்சியின் சின்னமாக அணியப்படுவது வேறு எந்நிகழ்ச்சிக்கும் கொள்ளப்பட மாட்டாது. எடுத்துக்காட்டாக ஆநிரைகளைக் கவரச் செல்லும் நோக்கில் சூடப்படும் வெட்சிப்பூ அஃதொன்றிற்கே உரியது. இதுபோன்றே போர்ச்சின்னப் பூக்கள் யாவும் வரையறை செய்யப்பட்டன. இதுகொண்டும் தமிழர்தம் மலர்பற்றிய உணர்வை உணரலாம். புறத்திணை கண்ணில் படும் நிகழ்ச்சி. அகத்திணை கருத்தில் இழையும் உணர்ச்சி. கண்ணில் படுவதற்கு நிலை யான வரையறைவேண்டும். கருத்தலைக்கு பரவலான நோக்கமே சால்பாகும். இதற்கேற்ப அகத்திணையினர் அன்றலர்ந்து மணம் பரப்பும் மலர்களையே சூடுவர். புறத்திணையில் மலர்ந்த உண்மைப் பூக்களையே சூட வேண்டும் என்பதன்று. உரிய பூவின் படிவமாகத் துணியிலோ, உலோகத்திலோ செய்யப்பட்ட சின்னங்களையும் சூடிச்செல்வர். இச்சின்னத்தை மன்னவன் வழங்குவான். எனவே புறத்திணை நறுமலர்களின் அணிவிப்பு அன்று, அகத்திணையோ நறுமலர்களின் நுகர்ச்சிப்பாடு. புறத்தினைப்பூ சின்னங்களின் அளவேயாகும். ஆயினும், போர் நோக்கில் கொள்ளும் பொழுதுதான் இவை சின்னப்பூக்கள். பொதுவில் அழகு-ஒப்பனை கருதியாவரும் எதையும் சூடிக் கொள்வர். இதற்குத் தடை விதிக்கப்படவில்லை. இவ்வாறு அடையாளப் பூக்களாகச் 'சின்னப் பூ' போருக்கு மட்டும் அன்று. மாந்தரது தலைவனான மன்னனுக்கும் வகுக்கப்பட்டது.

மன்னர் பூ

அரசனுக்கு உரியனவாக இன்றியமையாதவற்றைப் பழந் தமிழ் இலக்கண நூல்கள் அமைத்துள்ளன. அவை யாவும்