பக்கம்:1806 (ந. சஞ்சீவி).pdf/42

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

1806



ஏன்?' பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், கிழக்கிந்தியக் கம்பெனி தமிழகத்தின் தெற்கெல்லையில் தனது முழு மூச்சுடன் கொடுங்கோலாட்சி நடத்தியது; வீரத்தலைவர் பூலித்தேவரையும் வீரபாண்டியக் கட்டபொம்மனையும், அவன் அருமைத் தம்பியும் மாவீரனுமாகிய ஊமைத்துரையையும், சிவகங்கைச் சிங்கங்களாகிய சின்ன மருது, பெரிய மருது பாண்டியர்களையும் பலி கொண்டது. இச்சான்றோர்களின் தலைமையில் சுதந்தரப் போருக்கு வாளுருவி, வேலேந்தி, வளரி வீசி எழுந்த பல்லாயிரக் கணக்கான தமிழ் வீரர்களையும் அவர்கள் குடும்பங்களையும் கொன்று குவித்து நாசமாக்கியது சுருங்கச் சொன்னால், சுதந்தர வீரர்கள் வாழ்ந்த தமிழ் மண்ணை - தென்பாண்டித் திருநாட்டைச் - சுடுகாடாக்கியது எனலாம். இத்தனை கொடுமைகளையும் நிகழ்த்தி, 1801ல் ஏகாதிபத்தியமே இறுதி வெற்றி கண்டது. ஆங்கிலப் பேரரசு நடுக்கமின்றி வேர் கொள்ளத் தொடங்கியது. அந்நிலையில் தமிழகத்தின் வடவெல்லையில் குறுநில மன்னர் பலர் செங்கோலோச்சி வந்தனர். எவர்க்கும் கைகட்டி வாழாது வாழ்ந்த அவர்கள் நோக்கையும் போக்கையும் கண்டு அஞ்சிய வெள்ளை ஆட்சி, அவர்களையும் அவர்கள் உடைமைகளையும் பட்டாள பலத்தால் பாழாக்கியது. தெற்கெல்லையில் தலைநிமிர்ந்து நின்ற சுதந்தர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:1806_(ந._சஞ்சீவி).pdf/42&oldid=1138885" இலிருந்து மீள்விக்கப்பட்டது