பக்கம்:1806 (ந. சஞ்சீவி).pdf/9

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

1806


களில் எல்லாம் கொலையும் கொள்ளையும் வாளும் நெருப்பும் கொடுங்கூத்து நிகழ்த்தின. சில தினங்கள் முன்வரை குறுநில மன்னர்களாய்ப் பெருமையுடன் வாழ்ந்தவரெல்லாரும் கைவிலங்குகளோடு சிறைக் குகைகளிலே தள்ளப்பட்டனர். காட்டிக் கொடுத்த துரோகிகட்குப் பணமும் பதவியும் பரிசாக அளிக்கப்பட்டன. இவ்வாறு பலவகையாலும் அல்லலுற்றும் அவமானமடைந்தும் மனங்கொதித்துக்கொண்டிருக்க வடவார்க்காட்டு மாவட்டத் தமிழர்கள் நய வஞ்சக வெள்ளை நரிகளைக் கொன்று குழியில் புதைக்க என்றேனும் ஒரு நாள் வாய்க்காதா என்று ஏங்கிக் கிடந்தார்கள்.

மக்களின் ஏக்கம் தீரும் நாள் விரைந்தோடி வந்தது. பெருமை வாய்ந்த வேலூர்க் கோட்டை கொடுங்கோல் வெறியர்களின் கல்லறையாகவும் சுதந்தர வீரர்களின் பாசறையாகவும் உருக்கொண்டது. ஆங்கில ஏகாதிபத்தியத்திற்குப் பலம் பொருந்திய பகைவர்களாய் விளங்கியவர்கள் ஐதர் அலியும் அவன் வீர மைந்தன் திப்புவுமாவார்கள். ஐதர் 1782ல் காலமானான். அதற்குப்பின் அரியணை ஏறிய அவன் மகன் திப்பு, ஆங்கில ஆட்சிக்குக் கனவிலும் நனவிலும் கலக்கத்தையே விளைத்துவந்தான் வயப்புலி போலப்பதுங்குவதும் பாய்வதுமே அவன் பண்புகளாய் விளங்கின. பிரெஞ்சுக்காரர்களோடும் மாவீரன் நெப்போலியனோடும் தொடர்பு கொண்டிருந்தான் திப்பு. அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:1806_(ந._சஞ்சீவி).pdf/9&oldid=1137654" இலிருந்து மீள்விக்கப்பட்டது