பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

கோயம்புத்தூர்ச் சிறைவாசம்




கோயமுத் தூர்சார் மாயும் சிறையுள்
சென்றதும் வந்தனன் டிப்டி ஜெயிலர்.
பாளையங் கோட்டைப் பாழ்சிறை யுடைகளை
வாங்கிக் கொண்டு வழங்கினன் அவன்சிறை
மேலுடை யிரண்டும், கீழுடை யிரண்டும்,
குல்லா ஒன்றும் கோவணம் ஒன்றும்,
கயிற்றுப்பாய் ஒன்றும், கம்பளி இரண்டும்.
உடையினை உடுத்தி நடையினில் அவனுடன்
மாதக் கைதிகள் வாழும் நான்காம்
[1]பிளாக்குச் சிறைக்குப் பெருமையொடு சென்றேன்.
கோணையன் என்ற கோணக்கால் வார்டர் பால்
என்னை ஒப் பித்தே ஏகினன் டிப்டி.
அவன் எனைச் சணல்கிழி யந்திரம் சுற்றெனச்
சுற்றினேன். என்கைத் தோலுரிந் திரத்தம்
கசிந்தது. என்னருங் கண்ணீர் பெருகவே.

 

  1. பிளாக்-அறைத்தொகுதி

114