பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புறத்தினில் ஒன்றும் புகலேன்; கேளேன்;
சிந்தையைத் திருப்பிச் செலுத்துவேன் சிலதினம்:
சிந்தைபின் திரும்பிச் செல்லுவேன் சிலதினம்:
பெருமித மின்மையே பெருமையெனக் கொள்வேன்:
அருமை யுடையவே ஆற்றுதல் புரிவேன்:
நீதியில் என்றும் நிலையுற நிற்பேன்:
ஆதி பகவனே அன்பொடு போற்றுவேன்.
மதகுல வேற்றுமை மனத்தினும் கொள்ளேன்:
நிதமும் அவையெலா நேரென மொழிவேன்:
தத்துவ நூலினும் தமிழுயர் நூலினும்
சித்தம் அமிழ்த்திச் சிந்தனை புரிவேன்.
புலவரும் உரையாப் பொற்புறு கவியின்
பலவரும் பொருள்களைப் பகர்வேன் நன்றென :
என்னுயர் குணமும் என்னுறு குற்றமும்
இன்னவை என்றியான் என்றும் உணர்வேன்:
சிறியவர் உரையினும் தெள்ளிய கண்டால்
அறிவெனக் கொள்வேன்: அவரைத் துதிப்பேன் :
பண்பும் ஆர்வமும் பலமுறச் செய்ததால்
நண்பின ராயினர் நானிலத் தறிந்தோர்.
இருபா லாரினும் எண்ணிலார் என்பால்
வருவர் இருப்பர் மருவிய மனத்தொடு.
மெய்ப்பொருள் உணர்ந்தோர், மேலறி வாளர்,
பொய்ப்பொருள் விடுத்தோர், புலவா ரிவரையான்
அவாவி நட்ட தன்றிமற் றனைவரும்
தவாதெனை நட்ட தன்மையைக் கண்டே
கேண்மை புரிந்தேன்; கிழவோன் ஆயினேன்:
ஆண்மையும் விடுத்தேன்; அடிமை யாயினேன்.
பழையராய் நின்றவர் பழைமையை மறந்து
பிழையையே இயற்றினும் பேணி அவரொடு
சொல்லிக் காட்டுவேன்; தொடர்ந்துமே லிடிப்பேன்:
நல்லியல் மொழிவேன்; நட்பினை வளர்ப்பேன்:
34