பக்கம்:1915 AD-வள்ளியம்மை சரித்திரம், வ உ சி.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூல்.

நாட்டுச் சிறப்பு.

சந்தஞ் செறியுந் தமிழ்மலையில் தண்முகில்பெய்
துந்துந் திரையோ டுறும்பொருநை - கந்தம்
கமழ்பூந் தடமுங் கழனியுமற் றெங்கும்
அமிழ்தாம் எனப்பரவும் ஆங்கு.

செந்நெல்தீங் கன்னலாத் தீங்கன்னல் பூங்கமுகா [ன்
மன்னிவளர்ந் தோங்கும் வயல்தோறும் அன்னந்தா
மென்முட்டை யாமெனவே வெண்டரளத் தைச்சேர்க்கும்
தன்முட் டைகளோடுந் தான்.

சாந்தமுஞ்செங் குங்குமமுந் தண்பளித முங்கமழப்
பூந்தடங்கள் தோறும் புனல்தோயும் - ஏந்திழையார்
மான்கள் எனமிளிரும் வாள்விழிக்கஞ் சிக்கெண்டை
மீன்கடுள்ளி யோடும் விரைந்து.

வண்டின் னிசைபாட மாமயில்பூங் காவுதொறும்
செண்டுமுலை யார்போல் சிறந்தாடும் - கண்டுவந்து
பொன்கொடுப்பார் போல்கடுக்கைப் போதை மடமந்தி
தன்கரத்தா லேயுதிர்க்கும் தான்.

மன்றல்மிகுஞ் சாந்த மணங்கமழ்ந்து தண்பொதியத்
தென்றலசைந் தாங்கே தினமுலவும் - இன்றமிழ்த்தண்
காவுறையுங் கிள்ளை கனிந்தே நிதம்பேசும்
நாவுறையுங் கோதகல நன்கு. ௰௧

பொன்னா டெனவேபல் போகஞ் சிறந்தோங்குந்
தென்னா டிசைபெருகுஞ் செந்தமிழ்நா---டின்னாட்டுக்
கொப்பாம் வளநா டுளதோ ஒலிகடல்சூழ்
இப்பார் தனிலே யிசைந்து. ௰௨