பக்கம்:1915 AD-வள்ளியம்மை சரித்திரம், வ உ சி.pdf/3

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிப்புரை.


எனது தலைவியே இச்சரித்திரத்தின் தலைவியா யமைந்ததைப்பற்றிப் பேருவகை யெய்துகின்றேன். அவளை யான் பெற்றதும், அவளோடு யான் வாழ்ந்ததும், அவளைப்பற்றிய பிறவும் இச்சரித்திரத்தில் ஒருவாறு கூறப்பட்டுள்ளன. அவளுடைய நற்குணங்களையும் நற்செயல்களையும் சரியாக எடுத்துக் கூறுதல் அரியதொரு செயலாமென்பது எனது துணிவு. இது நிற்க.


இச்சரித்திரத்தை இயற்றிய ம-௱-௱-ஸ்ரீ.சி.முத்து சுவாமிப் பிள்ளை எனது தந்தையவர்களது தங்கையின் குமாரர். அவர் எனக்கு இளையவராயினும் ஒழுக்கத்திலும் கல்வியிலும் எனக்கு மூத்தவரென்று கூறத்தக்க மேம்பாடுடையவராய் நின்று சில வருஷங்களுக்குமுன் சிவபதம் அடைந்தனர். ஒருவரால் வேண்டப்படாதும் ஒருவர் அறியாதும் அவர் இச்சரித்திரத்தை இயற்றிக்கொண்டுவந்து என்னிடம் அளித்தார். அவரது மற்றைய பாடல்களை வெளியிடுங்கால் அவரது சரித்திரத்தை வெளியிடக் கருதியுள்ளேன்.

இச்சரித்திரத்தின் முடிவில் சேர்க்கப்பட்டுள்ள "நூற்புற"த்திற் காணப்படும் கடிதங்கள் எனது மனைவியின் மரணத்திற்குப் பின்னர் எனக்கு வந்த எனது நண்பர்களின் ஆங்கிலக்கடிதங்களிற் சிலவற்றின் மொழிபெயர்ப்பு. இம்மொழிபெயர்ப்பைச் செய்து தந்தவர் எனது அந்தணநண்பர்களில் ஒருவர். அவரும் எனது இரண்டாம் மனைவியுமே இந்நூலை அச்சிடுமாறு என்னைத் தூண்டியவர். அதற்காக அவ்விருவருக்கும் யான் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன்.

திருமயிலை, சென்னை,
இராக்ஷஸ௵ ஆடி௴ ௰௬௨

வ.உ.சிதம்பரம்பிள்ளை.