பக்கம்:1915 AD-வள்ளியம்மை சரித்திரம், வ உ சி.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14
வள்ளியம்மை சரித்திரம்.

யானுமிப்பெண் ணைக்குறித்தேன் என்னருமை வள்ளியம்மை
தானும் மொழிந்தாள் தகைமையொடு—மேன்மையுறு
நம்மரபில் சால நமக்குரிய சுற்றத்தில் [ம்
செம்மையுள துன்னில் சிறந்து. ௭௩

என்றே யிவருரைப்ப எல்லோரும் உள்மகிழ்ந்து
நன்றேயாம் என்று நவின்றனர்காண்—அன்றேயோர்
நற்றினமுந் தாங்குறித்துநண்ணினர்பெண்கேட்கமணப்
பொற்றொடியின் இல்லமே போந்து. ௭௪

மணமகட்கு முன்னுதித்த மாண்சூரி யத்தின்
கணவனாஞ் சூரியவேள் கற்றோன்—மணமகளின்
தந்தையுடை சோதரியின் தன்குமரன் பெண்கேட்க
வந்ததுகண் டுள்ளம் மகிழ்ந்து. ௭௫

அன்பின் முகமனுரைத் தன்னவர்கள் கூறியதை
இன்புடனே கேட்டுநனி யெண்ணியெலாம்—நன்கேதான்
அவ்வகையே செய்வமென்றான் ஆங்கெவருங் கூறினர்காண்
இவ்வகையே நன்றென் றெடுத்து. ௭௬

திருமணஞ்செய் நாளுடனே சீர்பெறுநல் ஓரை
அருமையுடன் தாங்குறித்தார் ஆங்கே—திருமணமும்
பெண்கிருகந் தன்னிலென்று பேசினார் பேரின்போ
டொண்குணத்தார் சால உவந்து. ௭௭

மங்கலமா நல்ல மணமகட்கு நாயகன்பேர்
அங்கெவருஞ் செப்பினார் ஆயிழையார்—மங்கலமாச்
செய்வகையெல் லாஞ்செய்தார் சீர்சேர் மணவோலை
எவ்விடமும் விட்டார் இசைந்து. ௭௮