பக்கம்:1915 AD-வள்ளியம்மை சரித்திரம், வ உ சி.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமணச் சிறப்பு.
15
மணமகன் தன் தந்தையொடு வந்தவரு மாங்கிவ்
வணமிசைந்து தம்பதியே மன்ன—மணமகற்குச்
செய்யிழையின் நன்மனையில் சீருடனே செய்செயல்கள்
ஐதுறவே செய்தனரிவ் வாறு. ௭௯

திருமணச் சிறப்பு.


பொன்மகள்வாழ் பீடமெனும் பொற்புடனே புங்கமுற
நன்மணமா மண்டபமும் நன்காகப்—பொன்மிகுநல்
சீர்பெறவே செய்தனரிச் செவ்விமிகு மண்டபம்போல்
பாருலகில் இன்றென்ப பார்த்து. ௮௰

விந்தையுள மீன்கணங்கள் மின்னிப் புடைசூழும்
சந்திரன்மா மண்டபமே தான்நிகராப்—பந்தரிட்டார்
வன்னமிகும் பல்குளப்பு வால்சேட்டு லஸ்டரெனும்
இன்னவெலாம் நன்கே யிசைத்து. ௮௧

பூங்கமுகு நற்கரும்பு பொற்புமிகு வாழையெலாம்
பாங்குடனே நாட்டினரிப்பந்தலெலாம்—ஆங்கெழில்சே
மங்கலநற் றோரணமுங் கட்டினார் மற்றனைத்தும் [ர்]
இங்கிதமாச் செய்தார் இனிது. ௮௨

சீர்பெறுமிம் மாமணத்தின் செவ்வியா லேநாமும்
ஏர்பெறுவோ மென்றுவிரைந் தெய்தியதொத்—தார்வமொடு
நன்மணநாள் கிட்டுதலும் நண்பார் மணமைந்தன்
தன்னையழைக் கச்சென்றார் தாம். ௮௩

பொற்றொடிநல் லாரும் புகழுடைய பல்கலையும்
கற்றுணர்நுண் கேள்விசால் காளையரும்—சிற்றிடையார்
கன்னல் மொழிபழகிக் காவில் குயில் பேசுந்
தென்னளகை யுற்றனரால் சேர்ந்து. ௮௪