20
வள்ளியம்மை சரித்திரம்
கான்சேர் தயிலமிட்டுக் காந்தணிகர் செங்கரங்கள்
தான்சோர நீர்வார்ப்பள் தன்பதிக்கு—வான்சேர்
மதிமுகத்தாள் உள்ளுள் மகிழ்ந்தெப் பணியும்
பதிதனக்குச் செய்வாள் பரிந்து.
௱௯
தோற்றமிகு தன்கொழுநன் தொட்டபல கேசுவெல்ல
ஏற்றமொடு கோர்ட்டுகளுக் கேகுங்கால்—ஏற்றஉயர்
பொற்சரிகைத் தூசுதலைப் பாகையுடுப் புப்பூட்சும்
எச்சரித்து வைப்பாள் எடுத்து.
௱௰
ஆங்குப்போய் வந்தவுடன் அன்னவையெல் லாங்களைந்து
பாங்கிலவன் போடப் பரிந்தெடுத்துப்—பூங்குழலாள்
சுத்தப் படுத்தித் துகள் துடைத்துப் பெட்டிகளில்
வைத்திடுவள் நெஞ்சம் மகிழ்ந்து.
௱௧௧
மெல்லணையில் காந்தன் விழிதுயில மென்பஞ்சி
நல்லணையை மஞ்சமிசை நன்றாக—மெல்லியலாள்
தான்விரித்துப் பட்டுத் தலையணைகள் போட்டுமலர்
மேன்மிதக்கச் செய்வள் விழைந்து.
௱௧௨
நூல்படித்த நுண்மதியால் நோக்கறிந்து தன்கணவன்
கால்பிடிப்பாள் மென்கழலக் கையால்நன்—னூல் பிடித்தே
அன்னான் செவிக்கின் பளித்தங் கவன்துயின்ற
பின்னே துயில்வாள்அப் பெண்.
௱௧௩
தன்பதிக்கு முன்னெழுந்து தக்கோன் தனக்குரிய
நன்பணியா வுஞ்செய்வாள் நன்றாக—அன்பார்
மனம்போல நல்லுடம்பும் மாசுறா தாள்வாள்
தினந்தோறும் இற்றொழில்கள் செய்து.
௱௧௪
பக்கம்:1915 AD-வள்ளியம்மை சரித்திரம், வ உ சி.pdf/36
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது