பக்கம்:1915 AD-வள்ளியம்மை சரித்திரம், வ உ சி.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாயகனிடத்து நடந்த நேர்மை.

21

மன்கா ரியம்நடத்தும் மாணமைச்சன் போல் தலைவன்
தன்கா ரியமெல்லாம் தான்செய்வாள்—நன்சார்பே
தான்மொழிவாள் மிக்க தகவாய தேபுரிவாள்
தேன்மொழியாள் சிந்தை தெளிந்து. ௱௧௫

மொய்யிருளைப் போக்கி முனிகதிர்போல் மூடமெனும்
பொய்யிருளைப் போக்கிடும்நல் புத்தியுளாள்—மெய்யுரையே
சாற்றுவாள் எஞ்ஞான்றும் தன்னா யகன்பதமே
போற்றுவாள் அன்பே புரிந்து. ௱௧௬

மின்னணிகள் மென்துகில்கள் மின்னாள் கணவனுனக்
கென்னவகை வேண்டும் எனவினவில்—நின்னுடைய
சிந்தைக் கிசைந்ததுவே சீரா மெனக்கென்று
பைந்தொடியும் சொல்வாள் பதில். ௱௧௭

எப்பொருளும் எப்பொழுதும் இல்லமதில் இல்லையெனாள்
கற்பகப்பூங் கொம்போர் கணவியென—இப்புவியில்
மன்னும் சிதம்பரமா வள்ளல் தனக்கிசைந்த
தென்னும் படியே யிவள். ௱௧௮

எங்கேனும் தன்கொழுநன் ஏகியொரு போதுமறந்
தங்கே யிருந்தக்கால் ஆற்றாளே—செங்கதிர் தான்
இல்லாச் செழுங்கமலம் என்ன முகம் வாடி
நல்லாள் தளர்வாள் நலிந்து. ௱௧௯

ஆங்கவன் தன் நல்வரவு கண்டால் அணிமதிகண்
டோங்குகடல் போல்உவகை யோங்குவாள்—பூங்கழல்கள்
போற்றுவாள் இன்பப் புணரியால் வெம்மையினை
ஆற்றுவாள் அன்னாள் அகத்து. ௱௨௰