30
வள்ளியம்மை சரித்திரம்.
இந்நங்கை மார்தம்மூர்க் கேகுங்கால் ஏந்திழையாள்
உந்நண்பை யான்மறவேன் ஓர்போதும்—இந்நகர்க்குச்
சின்னாளைக் கோர்தடவை சேயிழையீர் வந்துசெல்வீர்
பன்னாளும் என்பள் பணிந்து.
௱௬௯
தம்பதிகள் சென்றதுமத் தையலர்கள் இவ்வரியள்
நன்புகழே சொல்பல நங்கையர்க்கும்—கொம்பனையார்
நல்லாளின் செய்கையெலாம் நாளும் பயில்வரிவண்
பல்லோரும் உள்மகிழப் பார்த்து.
௱௭௰
வள்ளியம்மை நல்ல மகாராசி நன்னடைவாய்ச்
தொள்ளியரா வார் அவள்நண் புற்றபெண்கள்—வெள்ளியதாந்
தண்மதியால் அஃதனுயர் தன்மையைக் கொள்கின்ற
ஒண்மணிபோல் உள்ளம் உயர்ந்து.
௱௭௧
சாதுக்களை உபசரித்த நேர்மை.
சரியைகிரி யையோகம் சாற்றரிய ஞானம்
அருமையொடு பற்றிநிற்கும் ஆன்றோர்க்—குரிமையொடு
நந்நல்லாள் செய்செயலும் நான் தெரிந்தவாறுரைப்பேன்
நந்நல்லார் கொள்ள அவை நன்கு.
௱௭௨
பாசந் தனையகற்றிப் பல்வினைதீர்த் தாளுமெம
தீசன் தனைப்பரவி யின்புற்றே—மாசகன்ற
உள்ளம் உறுமடியார் உற்றால்தன் நாயகனோ
டுள்ளருமாண் புள்ளாள் உவந்து.
௱௭௩
சென்றெதிர்போய் அன்னார் திருவடியில் வீழ்ந்திறைஞ்சி
இன்றடிகள் இங்குறுஞ்சீர் எய்தினோம்—என்றுபகர்ந்
தன்னவர்க்கு வேண்டும் அரும்பணிகள் செய்துபின்னர்
அன்னமுணச் செய்திடுவாள் ஆங்கு.
௱௭௪