பக்கம்:1915 AD-வள்ளியம்மை சரித்திரம், வ உ சி.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாதுக்களை உபசரித்த நேர்மை.
31
மெய்ப்பொருளைச் சிந்தித்து மேதினியைத் தாங்குமொரு
சிற்பொருளே யஃதென்றுதேர்ந்துணர்ந்திங்—கெப்பொருளும்
பற்றிடினும் எள்ளளவும் பற்றாமெய்ஞ் ஞானிகளும்
உற்றுறைவர் தென்னளகை யூர். ௱௭௫

தன்கேள்வன் அப்பெரியர் தாள்மலரைத் தன்தலைவைத்
தன்போ டழைத்துவர ஆயிழையும்—இன்போடு
முன்செய் தவமோஇம் முத்தர் தமைக்காண
என்செய்தோம் புண்ணியநாம் இங்கு. ௱௭௬

என்றுநினைந் தன்னார் எதிர்சென் றடிதொழுது
நின்றுமொழி வாள்மகிழ்ந்து நீவிர்இங்கே—இன்றுவர
யாஞ்செய் தவமெதுவோ அல்லதெங்கள் நன்மரபோர்
தாஞ்செய் தவமெதுவோ தான். ௱௭௭

இம்மனைமுன் செய்த எழில்ஆர் தவமெதுவோ
செம்மையுள யாங்கள் தெரிந்திலோம்—இம்மையிலே
பெற்றனம்நும் நல்வரவால் பேறெல்லாம் பேரின்பம்
உற்றனம்எம் நன்மை யுயர்ந்து. ௱௭௮

பூங்கவர்நல் லாசிகள்பெற் றன்பனொடு நெஞ்சுவந்தத்
தீங்கறுநன் மேலோர்க்குச் செய்பணிகள்—பாங்குறமிக்
கன்போடுஞ் செய்தே யமுதருந்தச் செய்வள்நிதம்
இன்போடின் சொல்லோ டினிது. ௱௭௯

குலத்திலுயர்ந் தார்இழிந்தார் என்று கொள்ளாதன்பின்
நலத்திலுயர்ந் தாள்உவகை நண்ணினளாய்—இலத்தமைந்து
செய்பணியா வுஞ்செய்வள் சீரியர்தந் நீர்மையெலாம்
எய்திநனி சிந்தை யிசைந்து.௱௮௰