பக்கம்:1915 AD-வள்ளியம்மை சரித்திரம், வ உ சி.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34
வள்ளியம்மை சரித்திரம்.

அந்திவந்து நீள்நேரம் ஆனபினும் ஏழையர்தாம்
வந்துவந்து கேட்டிடினும் மாதுதான்—புந்திமகிழ்ந்
தாங்கவரை யொன்றும் அழன்றுகூ றாதிடுவாள்
பாங்குடனே யன்னம் பரிந்து. ௱௯௩

அன்னமதை யேற்கா அருமறையோ ராதியர்க்கு
யின்னொளிவெண் முத்தனைய மெல்லரிசி—அன்னவர்கை
நற்பாத் திரத்தே நனிசொரிவாள் கொண்டுவந்து
சற்பாத் திரமானாள் தான். ௱௯௪

தன்மனையில் நின்று சமையல் தொழில்புரியும்
மென்மகளிர் மற்றுமுள வேலைசெய்வோர்—நன்மையுற
அன்னார் பசியை அவர்முகத்தே நோக்கியமிழ்
தன்னாள் இடுவாள் அமுது. ௱௯௫

மாசற்றாள் தன்னின் மகிழ்நன்பால் நித்தமுறும்
கேசுக்கா ரர்க்குக் கிருபையொடு—தேசுற்
றகமகிழ்ந்து தாகம் அகன்றிடநீர் ஈவள்
முகமலர்ந்து கேட்கும் முனர். ௱௯௬

அன்னவரில் இன்மையுற்ற யாரேனும் என்றேனும்
இன்னமுது கொள்ளக்கா சில்லாமல் —என்னசெய்வோம்
என்றுமனத் தெண்ணினவர் எண்ணமறிந் தேயிரங்கி
அன்றருந்தச் செய்வாள் அமுது. ௱௯௭

முன்னிருந்தோர் தம்மிலும்இம் மூதுலகில் வாழ்வெய்தி
இன்றிருப்போர் தம்மிலும் இவ்வேந்திழைபோல்—அன்னமிடும்
பெண்களையாம் கண்டறியோம் கேட்டறியோம் பெண்ணரசி
ஒண்குணந்தான் யார்க்கிங் குறும். ௱௯௮