பக்கம்:1915 AD-வள்ளியம்மை சரித்திரம், வ உ சி.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

நூற்புறம்.

யென்று மனப்பூர்வமாகக் கூறுகின்றேன். அவர்களைப் பற்றி விவரித்தெழுத எனக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை. அந்தோ! பாவி எமன் அவர்களை நம்மிடத்திருந்து பறித்துக்கொண்டு போய்விட்டானே! இந்நஷ்டம் பரிகார மற்றதாகவன்றோ வந்துவிட்டது. என் இருதயம் உங்களைப்பற்றிய அநுதாபத்தால் நெக்குவிட்டு உருகுகின்றது. உங்கள் இருவரையும் ஒன்றுசேர்த்த விவாகத்திற்கு உயிரும் உடலுமாகிய குழந்தையை அவர்கள் அளிக்கப்போகின்றார்கள் என்னும் உயர்ந்த நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருந்த தருணத்தில் அவர்களை இழக்கிறதென்றால் அது சகிக்கக்கூடிய ஒரு காரியமா? எனது அன்புள்ள சகோதரரவர்களே, இவ்வுலகில் இம்மாதிரி சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வது சகசமென்றும் நாம் ஈசுவர ஆஞ்ஞைக்குக் கீழ்ப்படிய வேண்டியவர்களாயிருக்கிறோமென்றும் நினைத்து நாம் தேறுதல் அடையவேண்டும்.

உங்களைப்போல உண்மையும் அன்பும் கொண்ட ஒரு கணவர் இந்நிகழ்ச்சியைப்பற்றி நினைத்து உருகாதிருப்பது கஷ்டம். ஆயினும், நீங்கள் இச்சம்பவத்தை அளவுகடந்து உள்ளத்தில் கொண்டு சரீர சுகத்தைக் கெடுத்துக் கொள்ளக்கூடாது. இத்துக்கத்தை நீங்கள் பொறுமையுடன் சகிக்கவேண்டும். வாஸ்தவத்தில் மகராசி யென்றே நான் எண்ணியிருந்த உங்கள் மனைவியவர்கள் இவ்வுலகத்தைத் துறந்தார்களென்று கேட்டது முதல்—யான் இனிமேல் ஒருபோதும் பார்க்கமுடியாத அழகும், புத்திக்கூர்மையும், அன்பும் ஜொலிக்கின்ற—அவர்களுடைய முகமானது என்முன்