பக்கம்:1915 AD-வள்ளியம்மை சரித்திரம், வ உ சி.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vii

"நற்பணிசெய் வோர்பேருங் காசினியில் நிலைப்பதிலை கவி னப்பூணும், பொற்பணிசெய் வோர்பேரும் பூவுலகில் நிலைப் பதிலை பொருள்நிறைந்த, சொற்பணிசெய் வோர்பேரே சூரி யன்போ லெந்நாளும் துலங்கிநிற்கும், நற்பணிசெய் சிதம் பரப்பேர் நாவலநீ யெஞ்ஞான்றும் ஞாலம்வாழி."—ஸ்ரீமாந்ஜி. சதாசிவம்பிள்ளையவர்கள், தலைமைத் தமிழ்ப்பண்டிதர், நாஷனல் ஹைஸ்கூல், நாகபப்ட்டணம்.

"இந்நூல் ஸ்ரீமாந் வ. உ. சிதம்பரம் பிள்ளையவர்கள் கண்ணனூர் சிறையரணில் வசித்தகாலத்தில் இயற்றிய தமிழ்ச் செய்யுள் நூல்களில் ஒன்று. இது திருவள்ளுவர் திருக்குறளுக்கு வழிநூல். திருக்குறளிற் கூறியுள்ள பொருள்களில் நமது நாட்டின் தற்கால நிலைமைகளுக்குப் பொருத்தமாகச் சிலவற்றைத் தொகுத்தும் சிலவற்றை விரித்தும் இது கூறுகின்றது. ஒளவையாரது கொன்றைவேந்தன் சூத்திரத்தைப் போன்ற ஒவ்வோர் அடிச் சூத்திரத்தால் இது இயற்றப்பட்டுள்ளது. இது மாணவவியல், இல்வாழ்வியல், அரசியல்,அந்தணவியல், மெய்யியல் என்னும் ஐந்து இயல்களாகப் பகுக்கப்பட்டிருக்கிறது. மாணவவியல் முப்பது அதிகாரங்களையும், இல்வாழ்வியல் முப்பது அதிகாரங்களையும், அரசியல் ஐம்பது அதிகாரங்களையும், அந்தணவியல் பத்து அதி காரங்களையும், மெய்யியல் ஐந்து அதிகாரங்களையும், ஒவ்வோர் அதிகாரமும் பப்பத்துச் சூத்திரங்களையும் கொண்டுள்ளன. நூலின் பொருள்களைப் பள்ளிச்சிறுவரும் தெள்ளிதில் உணருமாறு சூத்திரங்கள் இனிய செந்தமிழ் நடையில் ஆக்கப்பட்டுள்ளன. நூலில் ஏகதேசமாகக் காணப்படும் அரும்பதங்களுக்கு உரைகள் நூலின் முடிவிற் சேர்க்கப்பட்டுள்ளன.திருக்குறளுக்குப் பின்னர் இதுகாறும் இத்தகைய தமிழ் நூல் வெளிவந்திலது. திருக்குறளைக் கற்க விரும்புவோருக்கு இந்நூல் ஓர் உரை ஆசிரியர்போன்று வள்ளுவர் கருத்துக்களைப்பொள்ளென விளக்கும். திருக்குறளைக் கற்றுள்ள பண்டிதர்களுக்கும் இந்நூல் பல புதிய பொருள்களைத் தெரிவிக்கும்.இவ்விரு திறத்தார்களுக்கும் இந்நூல் துணையாகுமென்றால் ஏனையோர்களுக்கு இந்நூல் எவ்வளவு பயன்படு மென்பது சொல்லாமலே விளங்கத்தக்கது. இந்நூற் பொருள்களின்அருமையும் பெருமையும் அவற்றைக் கூறியுள்ள திறமைப்பாடும் இந்நூலை ஒருமுறை பார்த்தமாத்திரத்தில் விளங்கும்.தமிழ்மக்கள் ஒவ்வொருவரும் இந்நூலைக் கைக்கொண்டு கற்க வேண்டுவது அத்தியாவசியம்."— இந்து நேசன், சென்னை.