பக்கம்:1915 AD-வள்ளியம்மை சரித்திரம், வ உ சி.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

viii


"மெய்யறம் என்னும் இந்நூல் கொன்றை வேந்தன் என வழங்கும் சிறந்த நீதி நூலைப்போல் அரிய பெரிய நீதிகளை யெல்லாம் தன்னகத்துட் கொண்டு விளங்குகின்றது. "உருவுகண் டெள்ளாமை வேண்டும்" எனற்கிலக்காக மிகச் சுருங்கிய சொற்களா லாக்கப்பட்ட சிறுசிறு பாக்களாலமைந்த இந்நூல் 10 பாவுக்கு ஓரதிகாரமாக 125 அதிகாரங்கட்கு 1250 பாக்களடங்கப் பெற்றது. இவ்வதிகாரங்களில் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் புருஷார்த்தங்களை விளங்கக் காணலாம். மற்றும் ஒரு மனிதன் தெரிந்துகொள்ளத்தக்க எல்லாவித அறிவையும் தெள்ளிது புலப்படுத்தும் பெருமை பெற்றுள்ளது இது. அணுவைத்துளைத் தேழ் கடலைப் புகட்டியது போல ஒவ்வொருபாவினும் அமைத்துள்ள அரும்பெரும்பொருட் பெருக்கத்தை நோக்கி வியவாதார் இரார். இத்துணைச் சிறப்பு வாய்ந்த இவ்வரிய நூலை இயற்றிய உலகப்பிரசித்தரான ஸ்ரீமாத். வ. உ. சிதம்பரப்பிள்ளையவர்கள் கவிராஜ குடும்பத்தில் பிறந்தவர்களென்பதை இந்நூல் நன்கு வெளியிடுகின்றது.* * *." —வித்தியாபாநு, மதுரை.

"மெய்யறம் என்னும் இந்நூலும் நமது தேசபக்த சிரேஷ்டரானஸ்ரீமாந் வ.உ. சிதம்பரம் பிள்ளை யவர்களால் இயற்றப்பட்டதேயாம். இது முற்காலத்திலிருந்த வள்ளுவரும், ஔவை நாச்சியாரும் இயற்றிய நூல்களுக்கொப்ப அறம், பொருள், இன்பம், வீடு என்னும் எல்லாவற்றையும் ஒருங்கே போதிக்கும் நீதி நூலாகும். அவ்விருவர்காலத்திற்குப் பின்னர் இதுகாலம்வரை இப்படிப்பட்ட திட்ப நுட்பமான நூல் எவராலும் இயற்றப்பட்டிருப்பதாக நாம் அறியோம். இதைச் சிறுவர் முதல் வித்வான்கள் இறுதியாக யாவரும் கைக்கொண்டு வாசித்துப் பயன் அடைதல் பொருந்தும் என்போம் நாம்."- —விவேகபாநு, டர்பன், தென் ஆபிரிக்கா.

இது ஸ்ரீமாந் பிள்ளையவர்கள் இயற்றியதே. எளியநடையில் கவிதை செய்யும் கடுமையான தொழிலில் பிள்ளையவர்களின் அருமையான வாக்கு வைபவம் என்னென்று புகழ்வோம்! இதுபோன்ற கிரந்தங்கட்கு நாம் அபிப்பிராயம் தருவது மிகையாகும். அறிந்தவரே இதன் பெருமையை அறிவார்!" —பிரஜாநுகூலன், ஸ்ரீரங்கம்.