பக்கம்:1916 AD-மனம் போல வாழ்வு, வ உ சி.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறப்புப் பாயிரம்

ஜேம்ஸ் ஆலன் அவர்களது அருமையான நூல்களில் ஒன்றன் மொழிபெயர்ப்பாகிய இம் "மனம் போல வாழ் ”வை நம் தமிழுலகத்திற்கு அளித்தவர்கள், ஒழுக்கமும் புலமையும் ஒருங்கமையப் பெற்றவரும், மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவரும், நம் தேசாபிமானியுமாகிய ஸ்ரீமாத். வ. உ. சிதம்பரம் பிள்ளை யவர்கள். இவ்விரண்டாம் பதிப்புப் பெரும்பான்மை திருத்தப்பட்டுச் சொன்னயம் பொருணயம் பொலிய மிகஅழகாக அமைத்துள்ளது. இஃது, ஒவ்வொருவர் வாழ்வும் தாழ்வும் அவரவர் மனநிலைமைகளை யொத்தே அமைகின்றன என்னும் அரிய உண்மையை ஐயமற விளக்கி, மனிதரை நல்வழிப்படுத்தி நல்வாழ்விற் சேர்க்கும் நல்லாசிரியரைப் போன்று விளங்குகின்றது. இதன் முதற்பதிப்புப் பிரதிகள் இரண்டாயிரமும் செலவாகி இதனை இரண்டாம் முறை பதிப்பிக்குமாறு பலர் விரும்பிக் கோரிகின்ற தொன்றே இதன் அருமையையும் பெருமையையும் நன்கு விளக்கும். நமது நாட்டுப் பல மொழிகளிலும் பலமுறை பதிப்பிக்கத்தக்க சிறப்புவாய்ந்த இந்நூலை நம் தமிழ்மக்கள் ஒவ்வொருவரும் வாங்கிப் படித்துத் தமது உள்ளத்தைப் பண்படுத்தி இம்மையிலும் மறுமையிலும் நல்வாழ்வை அடையும்படிக்கும், இந்நூல் இவ்வுலகின்கண் என்றும் நின்று நிலவும்படிக்கும், எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக.

தில்லையாடி, தஞ்சை,
இராக்ஷஸ௵ தை௴ 5௺
த. வேதியப்பிள்ளை.


10