பக்கம்:1916 AD-மனம் போல வாழ்வு, வ உ சி.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



நினைப்பும் ஒழுக்கமும்.

ஆன்மசம்பந்தமான ஒவ்வோர் உண்மையினையம் காணல்கூடும். மனிதன் தனது நினைப்புக்கள் தன்னிடத்தும், மற்றவரிடத்தும், தனது வாழ்க்கையிடத்தும், நிலைமைகளிடத்தும் உண்டுபண்ணும் காரியங்களைக்கண்டும், பொறுமையான அப்பியாசத்தாலும் விசா ரணையாலும் காரணகாரியங்களைப் பொருத்திப்பார்த்தும், விவேகமும் ஞானமும் சக்தியுமாகிய தன்னைப் பற்றிய அறிவை அடைதற்கு மார்க்கமாகப் பிரதிதினமும் நிகழும் ஒவ்வொரு சிறிய சம்பவத்தும் தான் கொள்ளும் அநுபவம் முழுவதையும் உபயோகித்தும், தனது நினைப்புக்களை எச்சரிக்கையாகக் காத்துத் தன் வசப்படுத்தித் தக்க வழியில் திருப்புவானாயின், தானே தனது ஒழுக்கத்தை ஆக்குபவன், தானே தனது வாழ்க்கையைத் திருத்துபவன், தானே தனது விதியை ஏற்படுத்துபவன் என்னும் உண்மைகளை நன்றாக அறிவான். "தேடுகிறவன் காண்பான்." "தட்டுகிறவனுக்குக் கதவு திறக்கப்படும்." என்னும் உண்மைகள் மற்ற எவ்விஷயத்தைப் பார்க்கினும் இவ்விஷயத்திற்கு முழுப் பொருத்தமுடையவை. ஏனெனில், பொறுமை, அப்பியாசம்,விடாமுயற்சி இவற்றால் மாத்திரம் மனிதன் ஞானாலயத்தின் வாயிலுக்குள் பிரவேசித்தல் கூடும்.

"நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும் தன்னை
நிலைகலக்கிக் கீழிடு வானும்-நிலையினும்
மேன்மேல் உயர்த்தி நிறுப்பானும் தன்னைத்
தலையாகச் செய்வானும் தான்."

21