பக்கம்:1916 AD-மனம் போல வாழ்வு, வ உ சி.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நினைப்பும் நிலைமையும்

தானே கர்த்தனாகையால், தன்னைத் தானாக்கிக்கொள் பவனும் தானே ; தன் நிலைமைகளை உண்டாக்கிக்கொள்பவனும் தானே. பிறக்கும்பொழுதே ஆன்மா தனக்குரிய இடத்தை அடைகின்றது. அது, பூமியில் சஞ்சரிக்கும் காலம் வரையில், தன்னைத் தனக்குக் காட்டுவனவும் தனது சுத்தாசுத்தங்களையும் பலாபலங்களையும் பிரதிபிம்பித்துக் காட்டுவனவுமான புறநிலைமைகளைக் கவர்கின்றது.

மனிதர் தமக்கு வேண்டுவதைக் கவர்வதில்லை; தம்இயல்பையே கவர்கின்றனர். அவருடைய மனோபீஷ்டங்களும், மனோராஜ்யங்களும், பேராசைகளும் தத்தம் ஒவ்வோர் அடியிலும் குலைவடைகின்றன, ஆனால், அவரது உள்ளூர்ந்த நினைப்புக்களும் அவாக்களும், தத்தம் நன்மையையோ தீமையையோ உண்டு வளர்கின்றன. "நமக்கு நன்மை தீமைகளைச் செய்யும் தெய்வம்" நம்மிடத்திலேயே இருக்கின்றது. அது நாமே.

மனிதன் தானே தன் கைக்கு விலங்கிட்டுக்கொள்ளுகிறான். நினைப்பும் செயலும் ஊழின் சிறைகாவலர்; அவை தீயனவாயின் சிறைப்படுத்துகின்றன; விடுதலை செய்யும் தூதர்களும் அவையே ; அவை நல்லனவாயின் விடுதலை செய்கின்றன. தான் விரும்புவனவற்றையும் கோருவனவற்றையும் மனிதன் பெறுவதில்லை; நியாயமாகத் தேடுவதையே பெறுகிறான்.

27