பக்கம்:1916 AD-மனம் போல வாழ்வு, வ உ சி.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நினைப்பும் காரியமும்.

லௌகிக் காரியமாகவோ இருக்கலாம்; ஆனால், அஃது எஃதாயிருப்பினும், அதனிடத்தில் அவனது நினைப்பின் சக்திகளை யெல்லாம் உறுதியாக ஒருமுகப்படுத்தவேண்டும். அக்காரியத்தைத்தனது பிரதான கடமையாகக் கொண்டு, கணத்தில் அழிந்துபோகும் மனோ விருப்பம் மனோ ராஜ்ஜியம் மனோபாவனை முதலியவற்றில் தனது நினைப்புக்களைத் திரியவிடாமல், அதனைச் செய்துமுடித்தற்கு முயலுதல்வேண்டும். இதுதான் தன்னடக்கத்திற்கும் மனஏகாக்கிரத்திற்கும் நல்லவழி. தான் கருதியுள்ள காரியத்தைச் செய்துமுடித்தலில் பலமுறை தவறினும் (பலஹீனம் நீங்கி பலம்பெறுகிற வரையில் தவறுவது சகசமே) அவன் அடையும் ஒழுக்கத்தின் பலம் அவனுடைய உண்மையான வெற்றியின் அளவையாக இருக்கும்; இஃது, அவன் எதிர்காலத்தில் பெறும் சக்திக்கும் வெற்றிக்கும் ஓர் புதிய ஆரம்பஸ்தானமாகும்.

ஒரு பெரிய காரியத்தைச் செய்துமுடிக்கத் தக்க திறமை இல்லாதவர், தமது கடமையை, அஃது எவ்வளவு சிறியதாகத் தோன்றினும், குறைவின்றிச் செய்து முடிப்பதில் தமது நினைப்புக்களை யெல்லாம் செலுத்தவேண்டும். இவ்வழியே நினைப்புக்களைச் சேர்த்து ஒருமுகப்படுத்தவும், ஊக்கத்தையும் மனவுறுதியையும் வளர்க்கவும் செய்யும்; இவற்றைச் செய்து முடித்த பின்னர் அவரால் செய்துமுடிக்க முடியாத காரியம் ஒன்றுமே இராது.

47