பக்கம்:1916 AD-மனம் போல வாழ்வு, வ உ சி.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மனம் போல வாழ்வு

மிக்க பலஹீனமுள்ள ஒருவன், தனது பலஹீனத்தை அறிந்தும், பல முயற்சியினாலும் அப்பியாசத்தினாலும் மாத்திரம் விர்த்தியாகும் என்ற உண்மையை நம்பியும், அந்நம்பிக்கையோடு அப்பொழுதே முயற்சிசெய்ய ஆரம்பித்து, முயற்சியின்மேல் முயற்சியையும் பொறுமையின்மேல் பொறுமையையும் பலத்தின்மேல் பலத்தையும் சேர்ப்பானாயின், அவன் இடைவிடாது விர்த்தியாகிக்கொண்டேபோய் முடிவில் தெய்வபலத்தை அடைவான்.

சரீரபலம் இல்லாதவன் இடைவிடாமல் பொறுமையோடு சரீரப்பயிற்சி செய்து தன்னைப் பலசாலியாகச் செய்துகொள்ளுதல் போலப் பலஹீன நினைப்புக்களை யுடையவன் சரியான நினைப்புக்களை நினைக்கப் பழகித் தனது நினைப்புக்களைப் பலமுடையன வாக்கிக் கொள்ளலாம்.

இலக்கில்லாமையையும் பலஹீனத்தையும் நீக்குதலும், காரியத்தை முன்னிட்டு நினைக்க ஆரம்பித்தலுமாகிய இவ்விரண்டும், தோல்வியைக் காரியசித்திக்குரிய வழிகளில் ஒன்றாகக் கருதுபவருடைய கூட்டத்திலும், சகல நிலைமைகளையும் தமக்குப் பொருந்துமாறு செய்துகொள்பவருடைய கூட்டத்திலும், உறுதியாக நினைத்து அச்சமின்றித் தொடங்கித் திறமையாகச் செய்து தங்கள் காரியத்தை முடிப்பவருடைய கூட்டத்திலும் பிரவேசிக்கச் செய்யும்.

48