பக்கம்:1916 AD-மனம் போல வாழ்வு, வ உ சி.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நினைப்பும் காரியமும்.

ஒருவன் தான் செய்து முடிக்கவேண்டிய காரியத்தைத் தீர்மானித்துக்கொண்ட பின்னர், அதனைச்செய்து முடித்தற்குரிய நேர் வழியை மனத்தில் குறித்துக்கொண்டு இப்படி அப்படி பிறழாமல் அவ்வழியில் செல்லவேண்டும்; ஐயங்களையும் அச்சங்களையும் பரிஷ்காரமாக நீக்கிவிடவேண்டும் ; அவை முயற்சியின் நேர்வழியைக் கோணலாக்கிப் பயனற்றதாகவும் பிரயோஜனமற்றதாகவும் செய்கின்றவை. ஐயமும் அச்சமும் பொருந்திய நினைப்புக்கள் ஒரு காலத்தும் ஒன்றையும் செய்து முடித்ததுமில்லை, செய்து முடிக்கப்போவதுமில்லை. அவை எப்பொழுதும் தோல்வியையே அடையச் செய்யும். ஐயமும் அச்சமும் வந்து சேர்ந்தவுடனே காரியமும் ஊக்கமும் ஆற்றலும் உறுதியான நினைப்பும் அழிந்துபோகின்றன.

ஒரு காரியத்தைச் செய்ய எழும் விருப்பம் நாம் அதனைச் செய்து முடித்தல் கூடும் என்ற அறிவினால் உண்டாகின்றது. ஐயமும அச்சமும் அறிவின் பெரிய விரோதிகள்; அவற்றிற்கு இடம் கொடுத்து அவற்றை அழிக்காது விட்டால் தான் செல்லும் வழியில் தன்னை அவை அடிதோறும் தடுத்துக்கொண்டிருக்கும்.

ஐயத்தையும் அச்சத்தையும் வென்றவனுக்கு தோல்வியென்பதே கிடையாது. அவனது ஒவ்வொரு நினைப்பும் மிகுந்த வலிமையைக் கொண்டிருக்கின்றது. அவன் சகல கஷ்டங்களையும் தைரியத்தோடு எதிர்த்து

49