பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/34

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
வலிமைக்கு மார்க்கம்

பிரபஞ்ச மெல்லாம் வியாபித்திருக்கின்ற இப்பெரிய நியதியைப் பூரணமாக 'அறிதலால், கீழ்ப்படிவு என்னும் மனோநிலைமை அடையப் படுகின்றது. நியாயமும், ஒற்றுமையும், அன்பும் பிரபஞ்சத்தில் மேலான சக்திகளென்று நாம் அறிவோமானால், பிரதிகூலமான நிலைமைகளும் துன்பகரமான நிலைமைகளும் நாம் அந்நியதிக்குக் கீழ்ப்படிந்து நடவாததனா லுண்டாய பலன்களென்று நாம் அறிவோம்! அவ்வறிவு நமக்குப் பலத்தையம் வலிமையையும் கொடுக்கின்றது ; அவ்வித அறிவினாலேயே மெய்யான வாழ்வையும் நிலையான வெற்றியையும் நித்திய இன்பத்தையும் அடையக்கூடும். சகல சந்தர்ப்பங்களிலும் பொறுமையோடிருத்தலும், உங்கள் அபிவிர்த்திக்கு ஆவசியகமான கருவிகளென்று சகல நிலைமை களையும் ஏற்றுக்கொள்ளுதலும், துன்பகரமான நிலமைகட் கெல்லாம். மேற்பட்டு நிற்றற்கும், அவை திரும்பவும் வருமென்று பயப்பட வேண்டாத விதத்தில் அவற்றை அடியோடு வெல்வதற்கும் ஏதுக்களாகும்; ஏனெனில், அந்நியதிக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் சக்தி அவற்றை வேரோடு நாசஞ் செய்து விடுகின்றது. அத்தகைய கீழ்ப்படிதலுள்ள மனிதன் நியாயத்திற்கு ஒத்தபடி நடக்கிறான் ; உண்மையில் அவன் நியாயத்தோடு ஐக்கியமாய்விட்டான் ; அவன் அடையும் வெற்றிகளெல்லாம் நித்திய வெற்றிகள் ; அவன் உண்டு பண்ணுவன வெல்லாம் என்றென்றும் நிலை நிற்பவை.

26