பக்கம்:1917 AD-மெய்யறம், வ உ சி.pdf/39

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இல்வாழ்வியல்.

௫௭-ம் அதி.–பொறுமை கொள்ளல்.

பொறுமை பிறர்மிகை பொறுக்கு நற்குணம். ௫௬௧
தன்னலங் கெடுங்காற் சகிப்பது பொறுமை. ௫௬௨
பொதுநலங் கெடுங்காற் பொறுப்பது பிழையே. ௫௬௩
வறுமைப் பிணிக்குப் பொறுமைநன் மருந்தாம். ௫௬௪
சிறுமையை வளர்ப்பது பொறுமையில் லாமை. ௫௬௫
பொறுமையைக் கொண்டவர் புவியெலாங் கொள்வர். ௫௬௬
பொறுமையை யிழந்தவர் புசிப்பவு மிழப்பர். ௫௬௭
ஒறுத்தார்க் கொருகணத் தொருசிறி தின்பமாம். ௫௬௮
பொறுத்தார்க் கென்றும் பொன்றா வின்பமாம். ௫௬௯
ஒறுத்தார் சிறியர் பொறுத்தார் பெரியர். ௫௭0

௫௮-ம் அதி.–ஒப்புர வொழுகல்.

ஒப்புர வூரா ரொப்பு நன்னடை. ௫௭௧
ஒப்புர வுயர்தர வொழுக்கத் தின்முதல். ௫௭௨
ஒப்புர வொழுகுவார்க் குறவினர் பெருகுவர். ௫௭௩
ஒப்புர விலாரை வொருவருந் தழுவார். ௫௭௪
அறிஞரி னொப்புர வறவோர்க் குதவல்; ௫௭௫
துறந்தா ரிறந்தார் துவ்வார்க் குதவல்; ௫௭௬
ஊர்ப்பொது நன்மைக் குழைத்தெலாஞ் செய்தல்; ௫௭௭
ஊரார் நன்மை தீமைக் குதவுதல்; ௫௭௮
ஊரார் வேண்டுவ வுவந்துட னளித்தல்; ௫௭௯
ஊரா ராணைக் குட்பட் டொழுகல். ௫௮0


31