பக்கம்:1917 AD-மெய்யறம், வ உ சி.pdf/60

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மெய்யறம்

௯௯-ம் அதி.—வலி யறிதல்.

தனது படையையுந் தனத்தையு மறிக. ௯௮௧
பகையது தனத்தையும் படையையு மறிக. ௯௮௨
தன்றுணைப் படையையுந் தனத்தையு மறிக. ௯௮௩
பகைத்துணை தனத்தையும் படையையு மறிக. ௯௮௪
இருதிறப் படைகளி னேற்றத்தாழ் வறிக. ௯௮௫
இருதிறப் படைக்கல வேற்றத்தாழ் வறிக. ௯௮௬
எவ்வமர் செயறனக் கெளிதென் றறிக. ௯௮௭
அதுகொளும் பொருள்படை யாதிய வறிக. ௯௮௮
அயன்மன் வரினா டளிக்குமா றறிக. ௯௮௯
அனையவு மறிந்துபி னமர்செயத் துணிக. ௯௯0

௧00-ம் அதி.—கால மறிதல்.

வலிமிகு கூகையைப் பகல்வெலுங் காகம். ௯௯௧
ஆகுங் காலத் தரியவு மாகும். ௯௯௨
ஆகாக் காலத் தெளியவு மாகா. ௯௯௩
தனக்காங் காலஞ் சார்ந்தமர் தொடங்குக. ௯௯௪
பகைகெடுங் காலம் பார்த்தமர் தொடங்குக. ௯௯௫
பருவம் வரும்வரை பகைவர்க் கடங்குக. ௯௯௬
பருவம் வரினுடன் பகைவரை யடக்குக. ௯௯௭
கூம்பும் பொழுது கொக்கொத் தமர்க. ௯௯௮
அடர்க்கும் பருவத் ததுபோற் குத்துக. ௯௯௯
காலமறிந் தேசெயின் ஞாலமுட னெய்தும். ௧000


52