பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

(3) ஊராட்சியை அமைப்பதற்கான தேர்தல்,-

(அ) (1) ஆம் கூறில் குறித்துரைக்கப்பட்ட அதன் கால அளவு கழிவுறுவதற்கு முன்பு;
(ஆ) அது கலைக்கப்பட்ட தேதியிலிருந்து ஆறு மாத கால அளவு கழிவுறுவதற்கு முன்பு

நடத்தி முடிக்கப்படுதல் வேண்டும்:

வரம்புரையாக: கலைக்கப்பட்ட ஊராட்சி தொடர்ந்திருக்கக்கூடிய கால அளவில் எஞ்சிய கால அளவானது, ஆறு மாதங்களுக்குக் குறைவாக இருக்கிறவிடத்து, அந்தக் கால அளவிற்கு ஊராட்சியை அமைப்பதற்கு இந்தக் கூறின்படி தேர்தல் எதனையும் நடத்துவது தேவையானது ஆகாது.

(4) ஊராட்சியின் கால அளவு கழிவுறுவதற்கு முன்பு, அது கலைக்கப்படுவதன் பேரில் அமைக்கப்பட்ட ஊராட்சி, அந்த ஊராட்சி அவ்வாறு கலைக்கப்படாதிருப்பின், (1) ஆம் கூறின்படி அந்த ஊராட்சி தொடர்ந்திருக்கக்கூடிய எஞ்சிய காலஅளவிற்கு மட்டுமே தொடர்ந்திருத்தல் வேண்டும்.

243ஊ. உறுப்பினர் பதவிக்கான தகுதிக்கேடுகள்:

(1) ஒருவர்--

(அ) தொடர்புடைய மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களின் நோக்கங்களுக்காக, அப்போதைக்குச் செல்லாற்றலில் உள்ள சட்டம் எதனாலுமோ அதன் வழியாலோ தகுதிக்கேடுற்றவராயிருப்பின், அவர் ஊராட்சி உறுப்பினராக தெரிந்தெடுக்கப் பெறுவதற்கும், உறுப்பினராக இருந்துவருவதற்கும் தகுதிக் கேடுற்றவர் ஆவார்:

வரம்புரையாக: ஒருவர், இருபத்தோரு வயது நிறைவெய்தியவராக இருப்பாராயின், அவர் இருபத்தைந்து வயதுக்குக் குறைந்தவராக உள்ளார் என்ற காரணத்தின் பேரில் தகுதிக் கேடுற்றவர் ஆகார்;


(ஆ) மாநிலச் சட்டமன்றத்தினால் இயற்றப்பட்ட சட்டத்தாலோ அதன் வழியாலோ தகுதிக்கேடுற்றவராயிருப்பின் அவர் ஊராட்சி உறுப்பினராகத் தெரிந்தெடுக்கப்பெறுவதற்கும் இருந்து வருவதற்கும் தகுதிக் கேடுற்றவர் ஆவார்;

(2) ஊராட்சியின் உறுப்பினர் ஒருவர், (1) ஆம் கூறில் சொல்லப்பட்டுள்ள தகுதிக் கேடுகளில் எதற்கேனும் உள்ளாகியிருக்கிறாரா என்பது பற்றிய பிரச்சினை எதுவும் எழுமாயின், அப்பிரச்சினை, மாநிலச் சட்டமன்றம், சட்டத்தினால் வகை செய்யலாகும் அதிகாரஅமைப்பின் முடிபிற்கு அத்தகைய முறையிலும் குறித்தனுப்பப்படுதல் வேண்டும்.

243எ. ஊராட்சிகளின் அதிகாரங்கள், அதிகாரஅடைவுகள், பொறுப்புகள் ஆகியன:

அரசமைப்பின் வகையங்களுக்கு உட்பட்டு, ஒரு மாநிலச் சட்டமன்றம், சட்டத்தின் வாயிலாக ஊராட்சிகள் தன்னாட்சி நிறுவனங்களாகச் செயற்படுவதற்கு அவற்றை இயல்விக்கத் தேவையாகலாகும் அதிகாரங்களையும், அதிகாரஅடைவுகளையும் அவற்றிற்கு அளிக்கலாம் மற்றும் -

(அ) பொருளாதார மேம்பாடு மற்றும் சமுதாய நீதிக்கான திட்டங்களைத் தயாரிப்பது;
(ஆ) பதினொன்றாம் இணைப்புப்பட்டியலில் விவரிக்கப்பட்டுள்ள பொருட்பாடுகள் தொடர்பானவை உள்ளடங்கலாக, அவற்றிற்கு ஒப்படைக்கப்படலாகும் பொருளாதார மேம்பாடு மற்றும் சமுதாய நீதிக்கான திட்டங்களைச் செயற்படுத்துவது

பொறுத்து, அத்தகைய சட்டம், அதில் குறித்துரைக்கப்படலாகும் வரைக்கட்டுகளுக்கு உட்பட்டு, உரிய நிலையில் ஊராட்சிகளுக்கு அதிகாரங்களும், பொறுப்புகளும் அளிக்கப்படுவதற்கான குறித்த சில வகையங்களைக் கொண்டதாயிருக்கலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/125&oldid=1470225" இலிருந்து மீள்விக்கப்பட்டது