பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

135


பகுதி XIII
இந்திய ஆட்சிநிலவரைக்குள் வணிகம், வாணிபம் மற்றும் தொடர்புறவுகள்


301. வணிகம், வாணிபம், தொடர்புறவுகள் ஆகியவற்றிற்குத் தடையின்மை :

இந்தப் பகுதியின் பிற வகையங்களுக்கு உட்பட்டு, இந்திய ஆட்சிநிலவரை எங்கணும் வணிகம், வாணிபம், தொடர்புறவுகள் ஆகியவை தடையின்றி நிகழ்வுறும்.

302. வணிகம், வாணிபம், தொடர்புறவுகள் ஆகியவற்றின் மீது கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு நாடாளுமன்றத்திற்குள்ள அதிகாரம் :

ஒரு மாநிலத்திற்கும் மற்றொன்றிற்கும் இடையே அல்லது இந்திய ஆட்சிநிலவரைப்பகுதி எதற்குள்ளும் வணிகம், வாணிபம் அல்லது தொடர்புறவுகள் நிகழ்வுறுவதற்கான சுதந்திரத்தின்மீது, பொது நலனுக்காகத் தேவைப்படும் கட்டுப்பாடுகளை நாடாளுமன்றம் சட்டத்தினால் விதிக்கலாம்.

303. வணிகம், வாணிபம், தொடர்பாக ஒன்றியம், மாநிலங்கள் ஆகியவற்றிற்குள்ள சட்டமியற்றும் அதிகாரங்கள் மீது கட்டுப்பாடுகள் :

(1) 302ஆம் உறுப்பில் எது எவ்வாறிருப்பினும், ஏழாம் இணைப்புப்பட்டியலிலுள்ள பட்டியல்களில் எதிலும் வணிகம் மற்றும் வாணிபம் பற்றிக் குறிப்பிடப்பட்டிருப்பதைக் காரணமாகக் கொண்டு ஒரு மாநிலத்திற்கு மற்றொன்றைவிட முன்னுரிமை எதனையும் அளிக்கிற அல்லது அளிப்பதற்கு அதிகாரம் வழங்குகிற அல்லது ஒரு மாநிலத்திற்கும் மற்றொன்றிற்கும் இடையே வேற்றுமை எதனையும் காட்டுகிற அல்லது காட்டுவதற்கு அதிகாரம் வழங்குகிற சட்டம் எதனையும் இயற்றுவதற்கு நாடாளுமன்றமோ மாநிலம் ஒன்றின் சட்டமன்றமோ அதிகாரம் உடையது ஆகாது.

(2) இந்திய ஆட்சிநிலவரைப் பகுதி எதிலும் சரக்குகளின் பற்றாக்குறையினால் எழுகின்ற ஒரு நிலைமையைச் சமாளிக்கும் பொருட்டு முன்னுரிமை அளிப்பது அல்லது அளிப்பதற்கு அதிகாரம் வழங்குவது அல்லது வேற்றுமை எதனையும் காட்டுவது அல்லது காட்டுவதற்கு அதிகாரம் வழங்குவது அவசியமானது என்று சட்டம் எதுவும் விளம்புமாயின், அவ்வாறு செய்கிற அத்தகைய சட்டத்தை நாடாளுமன்றம் இயற்றுவதற்கு, (1)ஆம் கூறிலுள்ள எதுவும் தடையூறு ஆவதில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/161&oldid=1468529" இலிருந்து மீள்விக்கப்பட்டது