பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

139


(2) இந்த அரசமைப்பின் தொடக்கநிலையில், இந்திய ஆட்சிப் பணியம் எனவும், இந்தியக் காவல்துறைப் பணியம் எனவும் வழங்கப்பட்டு வந்த பணியங்கள், இந்த உறுப்பின்படி நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட பணியங்களாகக் கொள்ளப்படும்.

(3). (1) ஆம் கூறில் சுட்டப்பட்ட அனைத்திந்திய நீதித்துறைப் பணியம் என்பது, 236 ஆம் உறுப்பில் பொருள்வரையறை செய்யப்பட்ட மாவட்ட நீதிபதியின் பதவிநிலைக்குக் குறைவான பணியடை எதனையும் உள்ளடக்காது.

(4) மேற்கூறப்பட்ட அனைத்திந்திய நீதித்துறைப் பணியத்தை உருவாக்குவதற்கு வகைசெய்யும் சட்டத்தில், அந்தச் சட்டத்தின் வகையங்களுக்குச் செல்திறம் அளிப்பதற்குத் தேவைப்படும் VI ஆம் பகுதியின் VI ஆம் அத்தியாயத்தைத் திருத்தம் செய்வதற்கான வகையங்கள் அடங்கியிருக்கலாம்; மேலும், அத்தகைய சட்டம் எதுவும், 368ஆம் உறுப்பினைப் பொறுத்தவரை, இந்த அரசமைப்பின் ஒரு திருத்தம் எனக் கொள்ளப்படுதல் ஆகாது.

312அ. குறித்தசில பணியங்களிலுள்ள அலுவலர்களின் பணிவரைக்கட்டுகளை மாற்றுவதற்கு அல்லது முறித்தறவு செய்வதற்கு நாடாளுமன்றத்திற்குள்ள அதிகாரம் :

(1) நாடாளுமன்றம் சட்டத்தினால்—

(அ) இந்த அரசமைப்பின் தொடக்கநிலைக்கு முன்பு, முடியரசின் இந்தியக் குடியியல் பணியம் ஒன்றிற்கு இந்தியாவிற்கான அமைச்சரால் அல்லது மன்றத்தமர் இந்தியாவிற்கான அமைச்சரால் அமர்த்தப்பெற்றிருந்து, 1972ஆம் ஆண்டு அரசமைப்பு (இருபத்தெட்டாம் திருத்தம்) சட்டத்தின் தொடக்கநிலையிலும் அதன் பின்பும், இந்திய அரசாங்கத்தின்கீழ் அல்லது மாநிலம் ஒன்றின்கீழ் பணியம் அல்லது பணியடை எதிலும் தொடர்ந்து பணிபுரிகின்றவர்களின் பணியூதியம், விடுப்பு, ஓய்வூதியம் ஆகியவை பொறுத்த பணிவரைக்கட்டுகளையும் ஒழுங்குநடவடிக்கைப் பொருட்பாடுகள் பொறுத்த உரிமைகளையும் பின்மேவுற அல்லது முன்மேவுறப் பொருந்துறுமாறு மாற்றலாம் அல்லது முறித்தறவு செய்யலாம்;
(ஆ) இந்த அரசமைப்பின் தொடக்கநிலைக்கு முன்பு, முடியரசின் இந்தியக் குடியியல் பணியம் ஒன்றிற்கு, இந்தியாவிற்கான அமைச்சரால் அல்லது மன்றத்தமர் இந்தியாவிற்கான அமைச்சரால் அமர்த்தப்பெற்றிருந்து, 1972ஆம் ஆண்டு அரசமைப்பு (இருபத்தெட்டாம் திருத்தம்) சட்டத்தின் தொடக்கநிலைக்கு முன்பு எப்போதேனும் பதவியிலிருந்து ஓய்வுபெற்றவர்களின் அல்லது பிறவாறு பணியத்திலிருந்து அகன்றவர்களின் ஓய்வூதியம் பொறுத்த பணிவரைக்கட்டுகளைப் பின்மேவுற அல்லது முன்மேவுறப் பொருந்துறுமாறு மாற்றலாம் அல்லது முறித்தறவு செய்யலாம்:

வரம்புரையாக: உச்ச நீதிமன்றத்தின் அல்லது உயர் நீதிமன்றம் ஒன்றின் தலைமை நீதிபதி அல்லது பிற நீதிபதி, இந்தியக் கணக்காயர்-தலைமைத் தணிக்கையர், ஒன்றியத்தின் அல்லது மாநிலம் ஒன்றின் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் அல்லது பிற உறுப்பினர், அல்லது தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியை வகிக்கிற அல்லது வகித்திருக்கிற எவரையும் பொறுத்தவரை, அத்தகைய பணியடையில் அவர் அமர்த்தப்பெற்ற பின்பு அவருடைய பணிவரைக்கட்டுகளை இந்தியாவிற்கான அமைச்சரால் அல்லது மன்றத்தமர் இந்தியாவிற்கான அமைச்சரால் முடியரசின் இந்தியக் குடியியல் பணியம் ஒன்றிற்கு அமர்த்தப்பெற்றவராய் அவர் இருப்பதன் காரணமாக அப்பணிவரைக்கட்டுகள் அவருக்குப் பொருந்துறுவனவாக இருக்கும் அளவிற்குத் தவிர, அவருக்குப் பாதகமான வகையில் மாற்றுவதற்கு அல்லது முறித்தறவு செய்வதற்கு (அ) உட்கூறில் அல்லது (ஆ) உட்கூறில் உள்ள எதுவும் நாடாளுமன்றத்திற்கு அதிகாரமளிப்பதாகப் பொருள்கொள்ளப்படுதல் ஆகாது.

(2) இந்த உறுப்பின்படி நாடாளுமன்றம் சட்டத்தினால் வகைசெய்துள்ள அளவிற்குத் தவிர (1)ஆம் கூறில் சுட்டப்பெற்றவர்களின் பணிவரைக்கட்டுகளை ஒழுங்குறுத்துவதற்கு இந்த அரசமைப்பின் பிற வகையம் எதன்படியும் சட்டமன்றத்திற்கு அல்லது பிற அதிகாரஅமைப்பு எதற்கும் உள்ள அதிகாரத்தை இந்த உறுப்பிலுள்ள எதுவும் பாதிப்பதில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/165&oldid=1468533" இலிருந்து மீள்விக்கப்பட்டது