பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

194


(5) இந்த உறுப்பின் வகையங்களைச் செல்திறப்படுத்துவதற்காக, நாடாளுமன்றம் சட்டத்தினால் மேற்கொண்டும் வகைசெய்யலாம்.

375. நீதிமன்றங்களும் அதிகாரஅமைப்புகளும் அலுவலர்களும் இந்த அரசமைப்பின் வகையங்களுக்கு உட்பட்டு தொடர்ந்து செயற்பணியாற்றுதல் :

இந்திய ஆட்சிநிலவரையில் எங்கணுமுள்ள உரிமையியல், குற்றவியல் மற்றும் வருவாய்த் துறை அதிகாரவரம்புடைய நீதிமன்றங்கள் அனைத்தும், அதிகாரஅமைப்புகள் அனைத்தும், நீதித் துறை, ஆட்சித் துறை, அலுவலகப் பணித் துறை ஆகியவற்றின் அலுவலர்கள் அனைவரும், இந்த அரசமைப்பின் வகையங்களுக்கு உட்பட்டு, அவரவர் தம் பதவிப்பணிகளைத் தொடர்ந்து புரிந்துவருதல் வேண்டும்.

376. உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் பற்றிய வகையங்கள் :

(1) 217ஆம் உறுப்பின் (2)ஆம் கூறில் எது எவ்வாறிருப்பினும், இந்த அரசமைப்பின் தொடக்கநிலையை ஒட்டி முன்பு, மாகாணம் எதிலும் பதவி வகித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், பிறவாறு அவர்கள் தேர்ந்து ஏற்றிருந்தாலன்றி, அத்தகைய தொடக்கநிலையில் அந்த மாகாணத்திற்கு நேரிணையான மாநிலத்தின் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக ஆவர்; அதன்மேல் அத்தகைய உயர் நீதிமன்ற நீதிபதிகளைப் பொறுத்து 221ஆம் உறுப்பின்படி வகைசெய்யப்பட்டுள்ள வரையூதியங்களுக்கும் படித்தொகைகளுக்கும், வாராமை விடுப்பு, ஓய்வூதியம் பொறுத்த உரிமைகளுக்கும் அவர்கள் உரிமைகொண்டவர்கள் ஆவர், அத்தகைய நீதிபதி எவரும் இந்தியாவின் குடிமகனாக இல்லாதிருப்பினும், அத்தகைய உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக அல்லது பிற உயர் நீதிமன்றம் ஒன்றின் தலைமை நீதிபதியாக அல்லது பிற நீதிபதியாக அமர்த்தப்படுவதற்குத் தகுமையுடையவர் ஆவார்.

(2) இந்த அரசமைப்பின் தொடக்கநிலையை ஒட்டிமுன்பு, முதலாம் இணைப்புப்பட்டியலின் ஆ பகுதியில் குறித்துரைக்கப்பட்ட மாநிலம் எதற்கும் நேரிணையான இந்தியக் குறுநிலம் எதிலும் பதவி வகித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், பிறவாறு அவர்கள் தேர்ந்து ஏற்றிருந்தாலன்றி, அத்தகைய தொடக்கநிலையின் போது அவ்வாறு குறித்துரைக்கப்பட்ட மாநிலத்திலுள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகளாக ஆவர்; மேலும், 217ஆம் உறுப்பின் (1), (2) ஆகிய கூறுகளில் எது எவ்வாறிருப்பினும், அந்த உறுப்பின் (1) ஆம் கூறின் வரம்புரைக்கு உட்பட்டு, குடியரசுத் தலைவர் ஆணையின்வழித் தீர்மானிக்கும் காலஅளவு கழிவுறும் வரையில் அவர்கள் தொடர்ந்து பதவி வகித்து வருவர்.

(3) இந்த உறுப்பில் "நீதிபதி" என்ற சொல், ஒரு செயலமர் நீதிபதியை அல்லது ஒரு கூடுதல் நீதிபதியை உள்ளடக்காது.

377. இந்தியக் கணக்காய்வர்-தலைமைத் தணிக்கையர் பற்றிய வகையங்கள் :

இந்த அரசமைப்பின் தொடக்கநிலையை ஒட்டிமுன்பு பதவி வகித்த இந்தியத் தலைமைத் தணிக்கையர், பிறவாறு அவர் தேர்ந்துஏற்றிருந்தாலன்றி, அத்தகைய தொடக்கநிலையில் இந்தியக் கணக்காய்வர்-தலைமைத் தணிக்கையர் ஆவார்; அதன்மேல் இந்தியக் கணக்காய்வர்-தலைமைத் தணிக்கையர் பொறுத்து 148ஆம் உறுப்பின் (3)ஆம் கூறின்படி வகைசெய்யப்பட்ட வரையூதியங்களுக்கும், வாராமை விடுப்பு, ஓய்வுதியம் பொறுத்த உரிமைகளுக்கும் உரிமைகொண்டவர் ஆவார்; மேலும், அத்தகைய தொடக்கநிலையை ஒட்டி முன்பு அவருக்குப் பொருந்துறுவனவாயிருந்த வகையங்களின்படி தீர்மானிக்கப்பட்ட அவருடைய பதவிக்காலம் கழிவுறும் வரையில் அவர் தொடர்ந்து பதவி வகித்துவர உரிமை கொண்டவர் ஆவார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/220&oldid=1467247" இலிருந்து மீள்விக்கப்பட்டது