பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51


வரம்புரையாக: மேலே கூறப்பட்ட எவரும், அந்நீதிமன்றத்தின் நீதிபதியாக அமர்ந்து செயலுறுவதற்கு இசைவளித்திருந்தாலன்றி, அவரை அவ்வாறு செயலுறும்படி இந்த உறுப்பிலுள்ள எதுவும் வேண்டுறுத்துவதாகக் கொள்ளப்படுதல் ஆகாது.

129. உச்ச நீதிமன்றம் ஒரு நிலையாவண நீதிமன்றமாக இருக்கும் :

உச்ச நீதிமன்றம் ஒரு நிலையாவண நீதிமன்றமாக இருக்கும்; மேலும், தன்னை அவமதித்ததற்காகத் தண்டிக்கும் அதிகாரம் உள்ளடங்கலாக அத்தகு நீதிமன்றத்திற்குள்ள அதிகாரங்கள் அனைத்தையும் அது உடையதாக இருக்கும்.

130. உச்ச நீதிமன்றத்தின் அமர்கை இடம் : உச்ச நீதிமன்றம் தில்லியிலோ குடியரசுத்தலைவரின் ஒப்பேற்புடன் இந்தியத் தலைமை நீதிபதி அவ்வப்போது குறித்திடும் பிற இடத்திலோ இடங்களிலோ அமரும்.

131. உச்ச நீதிமன்றத்தின் முதலேற்பு அதிகாரவரம்பு :

இந்த அரசமைப்பின் வகையங்களுக்குட்பட்டு-

(அ) இந்திய அரசாங்கத்திற்கும், ஒரு மாநிலம் அல்லது பல மாநிலங்களுக்கும் இடையே, அல்லது
(ஆ) ஒரு புறம், இந்திய அரசாங்கமும் ஏதேனும் மாநிலம் அல்லது மாநிலங்களும் மறுபுறம், பிறிதொரு மாநிலம் அல்லது மாநிலங்கள் இவற்றிற்கிடையே, அல்லது
(இ) இரண்டு அல்லது அவற்றிற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு இடையே

எழும் வழக்கு ஒன்றில் சட்டமுறையான ஓர் உரிமை உளதா என்பதையும், அதன் அளவு என்ன என்பதையும் பற்றிய (சட்ட விளக்கம் பற்றியதாகவோ பொருண்மை பற்றியதாகவோ உள்ள) பிரச்சினை எதுவும் அடங்கியிருக்குமாயின், அத்தகைய வழக்கு எதிலும், மற்ற நீதிமன்றங்கள் நீங்கலாக, உச்சநீதிமன்றமே முதலேற்பு அதிகாரவரம்பு உடையது ஆகும் :

வரம்புரையாக: மேற்சொன்ன அதிகாரவரம்பில், இந்த அரசமைப்பின் தொடக்கநிலைக்கு முன்பு செய்துகொள்ளப்பட்டிருந்தது அல்லது முறையாக அத்தொடக்கநிலைக்குப் பின்பும் தொடர்ந்து செயற்பாட்டில் இருந்து வருகிற அல்லது ஆக்கப்பட்டிருந்து மேற்சொன்ன அதிகாரவரம்பு அளாவுதலாகாது என வகை செய்கிற உடன்படிக்கை, உடன்பாடு, முத்திரைஒப்பந்தம், உறுதிவாக்கேற்பு, சொன்னது, அதுபோன்ற பிற முறையாவணம் ஆகியவற்றிலிருந்து எழும் வழக்கு எதுவும் உள்ளடங்குவதில்லை.

[1][131.அ ★★]

132. குறித்தசில வழக்குகளில் உயர் நீதிமன்றங்களிலிருந்து எழும் மேன்முறையீடுகளில் உச்ச நீதிமன்றத்திற்குள்ள மேன்முறையீட்டு அதிகாரவரம்பு :

(1) இந்திய ஆட்சிநிலவரையிலுள்ள ஓர் உயர் நீதிமன்றத்தின் உரிமையியல், குற்றவியல் அல்லது பிற நடவடிக்கையில் எழும் தீர்ப்புரை, தீர்ப்பாணை அல்லது இறுதியாணை எதுவும், அவ்வழக்கில் இந்த அரசமைப்பின் பொருள்கோள் குறித்துச் செறிவான சட்டப்பிரச்சினை ஒன்று உள்ளது என அந்த உயர்நீதிமன்றம் 134அ உறுப்பின்படி உறுதிச்சான்றளிக்குமாயின், உச்ச நீதிமன்றத்திற்கு மேன்முறையீடு செய்து கொள்வதற்கு உற்றது ஆகும்.

[2][2. ★★]

(3) அத்தகைய உறுதிச்சான்று ஒன்று அளிக்கப்படுமிடத்து, அவ்வழக்கின் தரப்பினர் எவரும், மேற்சொன்ன பிரச்சினை எதுவும் தவறாகத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது என்ற காரணத்தின்மீது, உச்ச நீதிமன்றத்திற்கு மேன்முறையீடு செய்து கொள்ளலாம்.

விளக்கம். -இந்த உறுப்பினைப் பொறுத்தவரை, ஒரு வழக்கில் எழுவினா ஒன்றின் மீதான ஆணை மேன்முறையீட்டாளருக்குச் சாதகமாக வழங்கப்பட்டிருந்து, அது அவ்வழக்கை இறுதியாகத் தீர்ப்பதற்குப் போதியதாக இருப்பின், அத்தகைய ஆணையும் “இறுதியாணை" என்னும் சொல்லில் அடங்கும்.


  1. 1997 ஆம் ஆண்டு அரசமைப்பு (நாற்பத்து மூன்றாம் திருத்தச்) சட்டத்தின் 4 ஆம் பிரிவினால் (13-4-1978 முதல் செல்திறம் பெறுமாறு) நீக்கறவு செய்யப்பட்டது.
  2. 1978 ஆம் ஆண்டு அரசமைப்பு (நாற்பத்து நான்காம் திருத்தச்) சட்டத்தின் 17 ஆம் பிரிவினால் (1-8-1979 முதல் செல்திறம் பெறுமாறு) நீக்கறவு செய்யப்பட்டது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/76&oldid=1467665" இலிருந்து மீள்விக்கப்பட்டது