பக்கம்:Tamil varalaru.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இரண்டாம் பதிப்பின்
முன்னுரை

இவ்வாராய்ச்சி நூல் மகாவித்வான் ரா. இராகவையங்கார் இப் பல்கலைக் கழகத் தமிழ் ஆராய்ச்சித்துறைத் தலைவராகவும் நான் அவர்க்கு உதவியாசிரியராகவும் பணியாற்றியபோது எழுதப்பட்டது. 21 பிரிவாகப் பகுக்கப்பட்டுள்ள இந்நூற்கண் தமிழ்மொழி, தமிழ்நாடு, தமிழ் மன்னர் இவற்றைப்பற்றிய பல அரிய செய்திகளும், கடல்கோள், முச்சங்கம் இவற்றைப் பற்றிய வரலாறுகளும் கூறப்பட்டுள்ளன. தமிழர் கந்தருவ வழக்கினர் என்பதும் நன்கு விளக்கப்பட்டுள்ளது. தமிழர் கொள்கைகள் என்ற பிரிவில் அவர்கள் வழிபட்ட கடவுளரைப் பற்றியும், அவர்கள் மேற்கொண்ட களவு கற்பொழுக்கங்களைப் பற்றியும், பல அரிய செய்திகள் காணலாம். பழந்தமிழரது தாயக்கொள்கையில், சங்க காலத்தில் முத்தமிழ் நாட்டிலும் வழங்கியது மக்கட்டாயமே என்பது ஆசிரியர் கொள்கை. இதனைப் பல அகச் சான்றுகள் காட்டி அப் பேரறிஞர் நிறுவியுள்ளார். அகத்தியர் வரலாறு நன்கு ஆராயப்பட்டுள்ளது. மற்றும் தலையாய ஒத்து என்ற பகுதியில் சில அரிய சங்கப் பாடல்கள் நன்கு விளக்கப்பட்டுள்ளன. தொல்காப்பியனார் சமயத்தைப் பற்றியும் அவர் காலத்து வேந்தரைப்பற்றியும் கூறப்பட்ட செய்திகள் அறிஞர் ஆராய்ந்து மகிழ்தற்குரியவை. இதன் முதற் பதிப்புப் பிரதிகள் செலவாகிவிட்டமையின், இப்பொ முது இது இரண்டாம் பதிப்பாக வெளிவந்துள்ளது. காய்தல் உவத்தல் அகற்றி ஆராய்ந்து வரையப்பற்ற இவ்வரலாற்று நூல் அறிஞர்கள் மேன்மேலும் தமிழர் பண்பாட்டைப்பற்றி ஆராய்தற்கு ஓர் சிறந்த அடிப்படையாகும் என்பது என்துணிவு. அறிஞர் கற்று மகிழ்வாராக.

E. S. வரதராஜய்யர், பி. ஏ.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/7&oldid=1228473" இலிருந்து மீள்விக்கப்பட்டது