பக்கம் பேச்சு:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/147

அகநானூறு நித்திலக் கோவை பாடல் : 336 தொகு

336. உடைக என் வளையே!

பாடியவர்: பாவைக் கொட்டிலார்.
திணை: மருதம்
துறை : நயப்புப் பரத்தை இற்பரத்தைக்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது.
சிறப்பு: வல்லத்து, ஆரியரைச் சோழர் வென்றது.

(பழந்தமிழகத்துத் தலைவர்கள் தம்முடைய இல்லத் தலைவியருடன் மட்டுமே கூடி வாழ்ந்தவர் அன்று. பரத்தைமை உடையவராகவும் அவர்களுட் சிலர் வாழ்ந்தனர். ஒருவனுக்கு இற்பரத்தையாக ஒருத்தியும், காதற் பரத்தையாக ஒருத்தியும், ஆக இருவர் இருந்தனர். அவ்விருவருள் ஒரு சமயம் இற்பரத்தையானவள் காதற் பரத்தையின் அழகினைக் குறை கூறியவளாகிப் பழித்தனளாம். அதனைக் கேட்டுச் சினம் கொண்ட அந்தக் காதற் பரத்தை, அந்த இற்பரத்தைக்குத் தோழியராயினோர் கேட்கும்படியாக இவ்வாறு கூறுகின்றனளாம். இத்துறை அமைய விளங்குவது இச் செய்யுள்)

குழற்காற் சேம்பின் கொழுமடல் அகலிலைப்
பாசிப் பரப்பிற் பறழொடு வதிந்த
உண்ணாப் பிணவின் உயக்கஞ் சொலிய
நாளிரை தரீஇய எழுந்த நீர்நாய்

வாளையொடு உழப்பத் துறைகலுழ்ந் தமையின்
5

தெண்கட் டேறல் மாந்தி மகளிர்
நுண்செயல் அம்குடம் இரீஇப் பண்பின்
மகிழ்நன் பரத்தைமை பாடி அவிழிணர்க்
காஞ்சி நீழற் குரவை அயரும்

தீம்பெரு பொய்கைத் துறைகேழ் ஊரன்
10

தேர்தர வந்த நேரிழை மகளிர்
ஏசுப என்பவென் நலனே அதுவே
பாகன் நெடிதுயிர் வாழ்தல் காய்சினக்
கொல்களிற்று யானை நல்கல் மாறே

தாமும் பிறரும் உளர்போல் சேறல்
15

முழவிமிழ் துணங்கை தூங்கும் விழவின்
யானவண் வாராமாறே வரினே வானிடைச்
சுடரொடு திரிதரும் நெருஞ்சி போல
என்னொடு திரியான் ஆயின், வென்வேல்

மாரி யம்பின் மழைத்தோற் சோழர்
20

வில்லீண்டு குறும்பின் வல்லத்துப் புறமிளை
ஆரியர் படையின் உடைகவென்
நேரிறை முன்கை வீங்கிய வளையே!

குழல் பொருந்திய தண்டினையுடைய சேம்பினது, கொழுமையான மடலிடத்தேயுள்ள அகன்ற இலைகளுடன் கூடிய, பாசி படர்ந்திருக்கும் நீர்ப் பரப்பிலே, தன் குட்டியுடன் தங்கியிருந்தது, பசியால் வருத்தமுற்ற பெட்டை நீர் நாய் ஒன்று. அதன் வருத்தத்தைப் போக்குவதற்குத், தன்னுடைய அந்நாளைக்கான இரையினைத் தேடுவதற்காக எழுந்த அதன் ஆணான நீர் நாயானது, வாளை மீனைப் பற்றிக் கொண்டு போரிட்டது. அதனால், நீர்த்துறை கலங்கல் உற்றது. அதனால், துறைக்கு நீர் மொண்டு போவதற்கு வந்த மகளிர்கள், நுண்ணிய தொழில் நலம் பொருந்திய தம் அழகிய குடங்களை, நீர் மொள்ளாது கீழே வைத்தனர். தெளிந்த கள்ளினைக் குடித்தவராகத், தம் கணவன்மாரின் பண்பற்ற பரத்தைமை உறவுகளைக் குறித்துப் பழித்துப் பாடியவராக, விரிந்த பூங்கொத்துகளையுடைய காஞ்சி மரத்து நிழலிலே, குரவைக் கூத்து ஆடிக் கொண்டும் இருந்தனர். அத்தகைய இனிதான பெரிய பொய்கைத் துறையினைப் பொருந்திய ஊரையுடையவன் நம் தலைவன், தேர் கொண்டு வர வந்து சேர்ந்த, நேரிய அணிகளையுடைய அவனுடைய மகளிர் என்னுடைய நலனைச் சுட்டி ஏசுகின்றனர் என்பார்கள்!

'மிக்க சினத்தினையுடையதும், கொல்லும் தன்மையினை உடையதுமான, களிற்றி யானையானது, கொல்லாது அருள் செய்தலினாலேயே, அதனைச் செலுத்தும் பாகன் நெடுங்காலம் உயிர் வாழ்கின்றான்' என்பது போன்றதே அவருடைய செயலும் ஆகும்.

அப்பெண்களும், அவர்களுடன் சேர்ந்த பிறரும், தாம் அழகு உடையவர் போலச் சொல்லுதல், முழவுகள் ஒலிக்கும் துணங்கைக் கூத்து ஆடிக் களிக்கின்ற விழாவினிடத்தே, யானும் அவ்விடத்து வாராதிருந்தமையினால் ஆகியதேயாகும். அவ்விடத்து யானும் வந்தால் ஞாயிற்றின் போக்கோடு சுழன்று திரியும் நெருஞ்சிப் பூவினைப் போல, அவனை என்னைச் சுற்றியே திரியுமாறு செய்வேன். அங்ஙணம் செய்யேன் என்றால்-

வெற்றி பொருந்திய வேலினையும், மழை போல மிகுந்த அம்பினையும், மேகத்தைப் போன்ற தோற் கிடுகினையும் உடைய சோழர்களது, வில் வீரர்கள் திரண்டுள்ள அரணினையுடைய வல்லத்தின் புறத்தேயுள்ள காவற்காட்டினிடத்தே வந்தடைந்த ஆரியர்களின் படையினைப் போல, என்னுடைய நேரிய சந்தினைக் கொண்ட முன்கையிலே செறிந்துள்ள இவ்வளைகள், சிதைந்து ஒழிந்து போவன ஆகுக.

சொற்பொருள் : 1. குழற்கால் சேம்பு - உட்டுளை கொண்ட தண்டினையுடைய நீர்ச்சேம்பு. 2. பாசிப்பரப்பு - பாசி படர்ந்திருக்கும் நீர்ப்பரப்பு. 3. பிணவு - பெட்டை நாய். உயக்கம் சொலிய - வருத்தத்தைப் போக்க. 5. சுலுழ்தல் - கலங்குதல். 6. தெண்கள் - தேறல் தெளிந்த கள்ளாகிய தேறல். 7. நுண்செயல் - நுண்ணிய வேலைப்பாடு; குடங்களின் மேற்புறத்தே அமைந்துள்ள வண்ணக் கைவேலைகள். 10. துறை கேழ் ஊரன் - துறையினைப் பொருந்திய ஊருக்கு உரியதலைவன். 12 நலன் - அழகு நலன். 14. நல்கல் - அருளுதல். 15. உளர்போல் - நலனுள்ளவர் போல்.16. துணங்கை தூங்கும் - துணங்கைக் கூத்து அயரும்.17. சுடர் - ஞாயிறு. நெருஞ்சி-நெருஞ்சிப் பூ19. திரியேன் - திரியச்செய்வேன். 20. மழைத்தோல் - மேகநிறத்தையுடைய தோற்கிடுகு 21. குறும்பு - அரண் மிளை - காவற்காடு 23. இறை - சந்து. வீங்கிய - செறிவுற்றுள்ள.

விளக்கம் : நீர்த் துறையிலே பெண்கள் தம் கணவன்மாரைப் பற்றிப் பேசுதல் அன்றும் உளதான வழக்கமே என்பதனை, 'மகிழ்நன் பரத்தைமை பாடிக் காஞ்சி நீழற் குரவை அயரும் மகளிர்' என வருவதனால் அறிக. மகளிரும் மதுவருந்தும் வழக்கம் உடையவராக இருந்தமை, 'மகளிர் தெண்கள் தேறல் மாந்தி’ என்பதனால் பெறப்படும்.

'தேர்தர வந்த நேரிழை மகளிர் என்றதனால், பாகனால் கொண்டு தரப்பட்ட இற்பரத்தையர் என்பதும், தானோ தலைவனாற் கண்டு காதலித்துக் கூடுதலைப் பெற்றவள் என்பதும் கூறி, அவளினும் தானே தலைவனிடத்து உரிமை மிகுதி உடைமையினையும் வலியுறுத்துகின்றனள்.

தன்னைப் பழித்த அவர்களைத் தான் வாளா விட்டிருத்தல், காய் சினக் களிற்றி யானை அருளுதலால் பாகன் நெடிது வாழ்தல் போலத், தான் கொண்ட இரக்கத்தினாலேயே என்றும் கூறுவாள், அதுவே, 'பாகன் நெடிதுயிர் வாழ்தல் காய்சினக் கொல்களிற்றியானை நல்கல் மாறே' என்றனள். இதனால், அவரினும் தான் உயர்வுடைமையும் கூறினளாம்.

'யான் துணங்கை தூங்கும் விழவின்கண் வரின், சுடரொடு திரிதரு “நெருஞ்சிபோல என்னோடு திரியேன்” என்றது, அப்பரத்தையர் போலத் துணங்கைக் கூத்திற்குத் தான் செல்லாதிருந்தது, தான் தலைவனின்பாற் கொண்ட கற்புத் திண்மையினாலேயே என்பதனைக் கூறியதாம்.

'வல்லத்துப் புறமிளை ஆரியர் படையின் உடைக’ என்ற செய்தி, ஆரியர் படையினர் வல்லத்துக் களத்திலே சோழர்க்கு ஆற்றாது சிதறுண்டு தோற்றோடியதனை உரைப்பதாகும். வல்லம் சோழ நாட்டு ஊர்; தஞ்சை மாவட்டத்தே இருப்பது; வடாற்காட்டிலும் வல்லம் உளது.

'மகளிர் மகழிநன் பரத்தைமை பாடிக் காஞ்சி நீழற் குரவையயரும் தீம்பெரும் பொய்கைத் துறைகேழ் ஊரன் எனத் தலைவனைக் குறித்தது, அவன் காதல் கொண்ட தலைவி ஒருத்தியுடன் மட்டுமே கூடி வாழாததும் தன்னுடன் தொடர்பு கொண்டும் பிறரையும் நாடித் திரிதலான செயலையுடைய பரத்தமை ஒழுக்கத்தினன் எனவும் உணர்த்தியதாம்.

மேற்கோள் : ‘மனையோள் ஒத்தலில் தன்னோரன்னோர் மிகைபடக் குறித்த கொள்கைக் கண்ணும் என்ற 'புல்லுதல் மயக்கும் புலவிக் கண்ணும் என்னுஞ் சூத்திரப் பகுதிக்கு இச்செய்யுளைக் காட்டி, 'இதனுள் யானவண் வாரா மாறே' எனத் தான் மனையோளைப் போல் இல்லுறைதல் கூறி, ஆண்டுச் செல்லிற் சுடரொடு திரியும் நெருஞ்சி போல, ஏனை மகளிரை யான் செல்வுழிச் செல்லும் சேடியர் போலத் திரியும் படி பண்ணிக் கொள்வல்' எனக் கூறியவாறு காண்க என்பர் நச்சினார்க்கினியர்.

இதனுள், 'மாரி யம்பின் மழைத்தோற் சோழர்' என்பதனைக் காட்டி, "உவமை யுயர்ச்சியானே உவமிக்கப்படும் பொருட்குச் சிறப்பு எய்துவித்தவாறு கண்டுகொள்க’ என, 'உயர்ந்ததன் மேற்றே யுள்ளுங் காலை' என்னும் உவமவியற் சூத்திரத்து, உவமம் உயர்ந்ததாக வேண்டும் என்றற்குக் காட்டிக் கூறுவர் பேராசிரியர்.

மூலம் : புலியூர்க் கேசிகனின் அகநானூறு நித்திலக் கோவை பக்கம் 93லிருந்து பக்கம் 97 வரை

- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி (பேச்சு). 14:05, 11 பிப்வரி 2023 (UTC)

Return to "சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/147" page.