பக்தி மஞ்சரி

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

பக்தி மஞ்சரி
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

1. சரசுவதி துதி

நாடிப் புலங்கள் உழுவார் கரமும், நயவுரைகள்
தேடிக் கொழிக்கும் கவிவாணர் நாவும், செழுங்கருணை
ஓடிப் பெருகும் அறிவாளர் நெஞ்சும், உவந்துநடம்
ஆடிக் களிக்கும் மயிலே! உன்பாதம் அடைக்கலமே!
(வேறு)
வெள்ளைக் கலையுடுத்து, வெள்ளைப் பணிபூண்டு
வெள்ளைக் கமலத்தே வீற்றிருப்பாள் - பிள்ளைமொழி
வெள்ளைக் கவிகண்டு, வெள்ளையென் றெண்ணாமல்
உள்ளத்திற் கொள்வாள் உவந்து.


2. இலக்குமி துதி

பொருளற் றவர்க்கிவ் வுலகில்லை என்றிப் புவிபுகழும்
தெருளுற்ற ஞானிஅப் பொய்யா மொழியில் தெரிந்துரைத்தான்;
மருளுற்ற மாந்தரும் வற்றாத செல்வம் இவ்வையகத்துள்
அருளுற் றலாதடை வாரோ?செந் தாமரை ஆண்டவளே! (1)
சித்தந் தெளிந்திடும், செய்வினை யாவும் திருத்தமுறும்
நித்தம் மறிந்தெழு செல்வமும் தங்கி நிலைபெறும்,நல்
முத்தர்க் குரிய பெரும்பதம் வாய்க்கு(ம்),இம் மூதுலகில்
பத்தர்க் கருளுந் திருமகள் பாதம் பணிபவர்க்கே. (2)

3. சுசிந்தை மாலை

(சுசிந்தை- சுசீந்திரம்; கன்னியாகுமரி மாவட்டத்தில் குமரிமுனைக்கு அருகில் உள்ள மிகப்பழமையான சிவத்தலம். சுவாமியின் திருப்பெயர் தாணுமாலயன் என்பதாம். தாணு- சிவன்; மால்- திருமால்/விஷ்ணு; அயன்- பிரமன். மூவரும் சேர்ந்த மூர்த்தி)
திங்களுள் கருணை காட்டும்; தீங்கணுன் வெகுளி காட்டும்;
கங்கையுன் பெருமை காட்டும்; கடுவுமுன் ஆண்மை காட்டும்;
சிங்கம்நுண் இடையைக் காட்டச் சிறையனம் நடையைக் காட்டும்,
மங்கையோர் பங்கா! தாணு மாலயா! சுசிந்தை வாழ்வே!

4. குமரிப் பகவதி

(6-1-1950இல், நடைபெற்ற ‘குமரி எல்லை மாநா’ட்டில் பாடிய தேவி பிரார்த்தனைப் பாடல்)
தென்னெல்லை காத்தாளும் தேவீ! குமரீ!நின்
பொன்னடியைக் கும்பிட்டுப் போற்றுகின்றேன் - மன்னுபுகழ்ச்
செந்தமிழ்நா(டு) ஒன்றாகித் தேவர்நா டொத்(து)உலகில்
சந்ததம் வாழவரம் தா.

5. செந்தில் குமரன்

(அமரவிளைப் புலவர் சுடலைமுத்துப் பிள்ளை அவர்கள் திருச்செந்தூருக்குச் சென்று முருகனைத் தரிசிக்கப் போகும்வழியில், கவிமணி அவர்களை வீட்டில் சென்று தரிசித்துவிட்டுச் செல்லலாம் என்று கருதி, கவிமணி இல்லம் சென்றார். அப்பொழுது கவிமணி ஆஸ்த்மா நோயால் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். சுடலைமுத்துப் பிள்ளை முருகன்மேல் ஒரு பாடல் பாடுமாறு கேட்கக் கவிமணி பின்வரும் பாடல்களைப் பாடினார்

1. உன்னிடத்தி லன்றி உலகில் எவரிடம்போய்
என்னுடைய சங்கடத்தை யானுரைப்பேன் - பன்னிருகை
ஏந்துமெழில் செந்தில் இறைவா! உனையன்றி
ஆந்துணை வேறுண்டோ ஐயா?
2. தண்டனை போதுமையா! தாங்கமுடி யாதையா!
கொண்டபிணி நீங்கவருள் கூரையா! - கண்டுனது
வாசலில் வந்து, வணங்கவழி இல்லைஐயா!
ஈசனே! செந்திலிறை வா!
3. பண்டிதரும் கைவிட்டார், பத்தியமும் தீர்ந்த(து)யான்
உண்டமருந் தால்குணமோ ஒன்றுமில்லை, அண்டர்
அமரா வதிகாத்த அண்ணலே! செந்தில்
குமரா! எனையாண்டு கொள்.

6. முருகன் புகழ்மாலை

1. புல்லும் பசுவிற்காம் பூண்டும் மருந்திற்காம்
கல்லும் திருக்கோயில் கட்டுதற்காம் - தொல்லுலகில்
ஏழை எளியேன் எதற்காவேன்? செந்தில்நகர்
வாழும் வடிவேல வா!
2. முத்தையா! வேலா! முருகா எனவோதும்
சொத்தையே தேடிச் சுகமடைவீர் - நித்தமிவ்
வீடும் தனமும் விளைநிலமும் தோப்புகளும்
மாடும் சதமாகு மா?
3. பெற்ற சுதந்திரத்தைப் பேணி வளர்க்கநமக்(கு)
உற்ற துணையாய் உதவுகவே! வெற்றிதரும்
ஈராறு கையன் இமையோர் சிறைமீட்ட
வீராதி வீரன்செவ் வேல்.
4. செந்தில் முருகா! திருமால் மருகா!என்
சிந்தை குடிகொண்ட தேசிகா! - வந்தினிய
பைந்தமிழ்ச் சோலையில் பாடும் கவிக்குயில்கள்
சந்ததம் வாழவரம் தா.

7. கோவில் வழிபாடு


1. கோவில் முழுதுங் கண்டேன் - உயர்
கோபுரம் ஏறிக் கண்டேன்,
தேவாதி தேவனையான் - தோழி!
தேடியுங் கண்டிலேனே!
2. தெப்பக் குளங்கண்டேன் - சுற்றித்
தேரோடும் வீதிகண்டேன்,
எய்ப்பில்வைப்பாம் அவனைத் - தோழி!
ஏழையான் கண்டிலனே!
3. சிற்பச் சிலைகண்டேன் - நல்ல
சித்திர வேலைகண்டேன்.
அற்புத மூர்த்தியினைத் - தோழி
அங்கெங்கும் கண்டிலனே!
4. பொன்னும் மணியுங்கண்டேன் - வாசம்
பொங்கும்பூ மாலைகண்டேன்,
என்னப்பன் எம்பிரானைத் - தோழி
இன்னும்யான் கண்டிலனே!
5. தூபமிடுதல் கண்டேன் - தீபம்
சுற்றி எடுத்தல் கண்டேன்,
ஆபத்தில் காப்பவனைத் தோழி!
அங்கேயான் கண்டிலனே!
6. தில்லைப் பதியுங்கண்டேன் - அங்குச்
சிற்றம் பலமுங் கண்டேன்,
கல்லைக் கனிசெய்வோனைத் - தோழி
கண்களாற் கண்டிலனே!
7. கண்ணுக் கினியகண்டு - மனத்தைக்
காட்டில் அலையவிட்டுப்
பண்ணிடும் பூசையாலே தோழி!
பயனொன்றில்லை, அடி!
8. உள்ளத்தில் உள்ளானடி! - அதுநீ
உணர வேண்டுமடி!
உள்ளத்தில் காண்பாயெனில் - கோயில்
உள்ளேயுங் காண்பாயடி!
பார்க்க:
தொகு
கவிமணியின் கவிமலர்கள்
அழகம்மை ஆசிரியவிருத்தம்
மருமக்கள்வழி மான்மியம் - கவிமணி
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்தி_மஞ்சரி&oldid=1541325" இலிருந்து மீள்விக்கப்பட்டது