9

இருட்டிஎட்டுநாழிகை நேரம் இருக்கலாம்.

ஊருக்கு மேல்கோடியிலுள்ள தமது குடிசைக்கு வெளியே கிடந்தகயிற்றுக்கட்டிலின்மீது அமர்ந்து, கட்டில் காலின்மீது வெற்றிலை உரலை வைத்து லொட்டு லொட்டென்று இடித்துக் கொண்டிருந்தார் இருளப்பக்சோனார். 

குடிசையின் வெளிச் சவரிலிருந்த மாடக் குழிக்குள் ஒரு சிறிய தகரக்குப்பி மண்ணெண்ணெய் விளக்கு மினுக் மினுக்கென்று எரிந்து புகை கக்கிக் கொண்டிருந்தது; பொருமிப் பொருமி வீசும் மேல்காற்று தன் ஜீவனைப் பறித்துக் கொண்டு சென்று விடாதவாறு, அந்த விளக்கின் வற்றி மெலிந்த தீச்சுடர் கூனிக் குறுகி வளைந்து கொடுத்து உயிரைக் காப்பாற்றிக் கொண்டிருந்தது. பனையோலை வேய்ந்த அந்தக் கூரைக் குடிசையின் உச்சியில் வழிதவறி வந்த ஒருகாட்டுக்கூகைசிறிதுநேரம் அமர்ந்து, பயங்கரமாக அபயக் குரலெழுப்பிக் குழறிவிட்டு, படபடத்துப் பறந்து சென்று இருளில் மறைந்தது. குடிசைக்கு வெளிப்புறத்தில் கட்டியிருந்த கொடியில் அழுக்கும் கந்தலுமான சில துணிகளும், ஒரு சாட்டைக் கம்பும் தொங்கிக் கொண் டிருந்தன. குடிசையின் மூலையில் ஒரு பெரிய கழுநீர்ப் பானையும் ஆட்டுரலும், உடைந்தும் உபயோகமற்றும் போன பண்ட பாத்திரங்களும் கிடந்தன. மாட்டுச் சாணத்தின் நாற்றமும், கொசுக்களின் இரைச்சலும், அந்த இடமெங்கும் வியாபித்து நின்றன.

முழங்காலில் சுரீர் என்று கடித்தகொசுவைக் கையால் அறைந்து கொண்டே, இருளப்பக் கோனார் குடிசையை ஒட்டியிருந்த மாட்டுத் தொழுவத்தை எட்டிப் பார்த்தார். தொழுவத்தில் இருளப்பக்கோனாரின் மனைவிமாரியம்மா வைக்கோல்படைப்பிலிருந்துவைக்கோல் பிடுங்கி, மாட்டுக் கொட்டிலில் போட்டுக் கொண்டிருந்தாள். தொழுவத்தில் கட்டியிருந்த மாடுகள் கடுக் கடுக்சென்று வைக்கோலைக் கடித்து அசைபோடும் மெல்லிய சப்தம்கூட, அந்த அமைதி நிறைந்த இருள் வேளையில் தெளிவாகக்கேட்டது.

வைக்கோலை அள்ளிப் போட்டுவிட்டு, முற்றத்திலிருந்த தண்ணீர்த் தொட்டியில் முகங்கால் கழுவிவிட்டு, வந்துசேர்ந்தாள்மாரி.

மாரியம்மாவுக்கு வயது நாற்பத்தைந்து இருக்கலாம். எனினும் அவள் வயதுக்கு மீறிய வயோதிகத் தன்மையோடு தோற்றமளித்தாள். அள்ளி முடிந்திருந்த தலைமயிரில் நாரத்தங்காய் மாதிரி சுருக்கம் விழுந்து சொரசொரத்துப் போயிருந்த அவளது முகத்தின் விகாரத்தோற்றம், பாம்படமில்லாது தொனதொனத்துத் தொங்கிக் கொண்டிருந்த ஓட்டைக்காதுகளால் மேலும் விகாரமாகத் தோற்றமளித்தது. அவள் படுத்தியிருந்த சுங்கடிப் புடவை அவளுடைய மெலிந்து வாடிய உடம்பின் மீது சுமத்திய பெரும்பாரம்போல் தோற்றியது. கழுத்தில் கிடந்தகறுப்புத் கயிற்றில் சின்னஞ்சிறு பிள்ளையார் தாலி மட்டும் மறைவாகக் கிடந்தது. அந்தத் தாவியைத் தவிர, அவள் கட்டம்பல் அரை மஞ்சாடி தங்கமோ வெள்ளியோ கூட இல்லை.

"ஏளா மாரி, மாட்டுக்குப் பருத்திக்கொட்டை ஆட்டி வச்சியா?"என்று சோர்ந்துபோய் நிர்விசாரமாகக்கேட்டார் கோனார்.

"வச்சேனே" என்று சொல்லிக்கொண்டே, கயிற்றுக் கட்டிலின் அருகில் உட்கார வந்தாள் மாரி.

அதற்குள் இருளப்பக் கோனார், "ஏளா, வீட்டுக் குள்ளே மாடக்குழிலே ஒரு போயிலைக் காம்பு போட்டு வச்ச ஞாபகம். கிடந்தா எடுத்துக்கிட்டு வா" என்று உத்தர விட்டார்.

"சாப்பிட வேண்டாமா?" என்று கரிசனையோடு கேட்டாள்மாரி.

"இங்கேமனுசனுக்கு இருக்கிற கவலையிலே சாப்பாடு ஒண்ணுதான் குறைச்சல். சரி, அது கிடக்கு. கொஞ்ச நேரம் ஆகட்டும். நீ போயிலையை எடுத்துக்கிட்டு வா."

மாரி எழுந்து குடிசைக்குள் சென்றாள்.

இருளப்பக் கோனார் வெற்றிலை உரலை இடிக்கத் தொடங்கினார். 

'கவலை, கவலை. ஆயுசுக் காலம் பூராவும் கவலை. இந்தக் கவலைக்கு. என்னிக்கித்தான் விடிவுகாலம் வரப் போவுதோ, இந்தக் கட்டை பூமியிலே சாவிற அன்னிக்கித்தானா-?'

இருளப்பக் கோனாரின் சிந்தனைக்குப் பின்னணி இசைப்பது போல, உரலில் குழவி இடிபடும் சப்தம் தாள லயத்தோடு ஒலித்துக் கொண்டிருந்தது.

இன்னிக்கி நேத்து ஏற்பட்ட கவலையா.?" - .

இருளப்பக் கோனாரின் மனம் எத்தனை எத்தனையோ ஆண்டுகளையும்பிரதேசங்களையும்தாண்டி, பின்னால் சென்றது...

அப்போது அவர் சிவகிரியில் இருந்தார். சிவகிரி ஒரு ஜமீன் கிராமம். அவர் பிறந்தது. வளர்ந்தது, கல்யாணம் செய்தது, பிள்ளை பெற்றது எல்லாம் அந்த ஊரில்தான், மூன்று தலைமுறைகளாகவிவசாயம் செய்துவந்தசாதாரண விவசாயக் குடும்பத்தில்தான் இருளப்பக் கோனார் பிறந்தார். சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் அவர் சிவகிரி ஜமீன் நிலத்தில் உழுது சாகுபடி செய்துதான் பிழைத்து வந்தார். இந்தியாவில் சாதாரண விவசாயிகள் பாடே திண்டாட்டம். அதிலும், கவனிப்பற்ற காட்டோரத்தில் அமைந்துள்ள ஒரு சிறு ஜமீனில் சிறு ஜமீனைக் கொண்டு பெருவாழ்வு வாழ்ந்து வரும் ஜமீன்தாரின் கெடுபிடி தர்பாரில், பிழைப்பு நடத்த முனைந்த இருளப்பக் கோனாரின் வாழ்க்கை சொல்லும் தரமன்று. நிலப்பிரபுத்துவத்தின் சகலவிதமான கொடுமைகளுக்கும் அவர் பலியானார். நாளுக்கு நாள் கடன், அரைப் பட்டினி, சூறைப் பட்டினி, ஜமீன் வசூல் கெடுபிடிகள், ஜப்தி, அடி, உதை எல்லாம் அவருக்குப் பழகிப் பழகி மரத்துப் போன விஷயங்களாகி விட்டன. வருஷம்முழுதும் எலும்பு முறியப் பாடுபட்டும், தமக்கும்தம் மனைவிக்கும் வேண்டிய அவசியத் தேவைகளைக்கூட அவரால்பூர்த்திசெய்ய முடியவில்லை.பாம்பு தன் வாலைத் தானே விழுங்கிய கதையைப் போல், அவர் எப்படியோ வாழ்க்கைநடத்திவந்தார்.எனவே துடிப்பும் துறுதுறுப்பும் நிறைந்த அந்த வாலிப வயதில் கூட, அவரால் தம் ஆசை மனைவி விரும்பிக் கேட்கும் பொருள்களையோ, அவளது அபிலாஷைகளையோ பூர்த்தி செய்து வைக்க முடியாத் அளவுக்கு, அவர் வறுமை வாய்ப்பட்டிருந்தார். இப்படிப் பட்டவாழ்க்கையின் மத்தியிலேதான் சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்குமுன் வீரையா அவரது செல்வப் புதல்வனாகப் பிறந்தான். பெற்றோர்களோடு பசியையும் பட்டினியையும் பகிர்ந்து உண்டு, அந்தப் பிள்ளை தப்பிப் பிழைத்து சிரஞ்சீவியாக உயிர் வாழ்ந்து வந்தான். வருஷத்தில் முக்கால்வாசி நாட்கள் வயலில் வேலை செய்வது, மீதி நாட்களில் ஜமீனுக்குச் சொந்தமான மலைக்காடுகளுக்குச்சென்று, விறகுவெட்டிக்கொணர்ந்து பக்கத்து ஊர்களில் விற்பது, பாரவண்டிகளை வாடகைக்கு ஓட்டிச் செல்வது முதலிய பற்பல வேலைகளின் மூலம், இருளப்பக் கோனார் மூன்று ஜீவன்களின் வயிற்றைக் கழுவும் கடமையை ஒருவாறு நிறைவேற்றிவந்தார்.

வீரையாவுக்குப் பதின்மூன்று பதினான்கு வயது இருக்கும். வாழ்க்கையே சோதனையாகவிருந்த இருளப்பக் கோனாருக்கு அந்த வருஷம் பெருஞ் சோதனையாகி விட்டது. கிட்டத்தட்ட இரண்டு வருஷ காலமாகவே கிராமத்தில் நல்லமழையில்லை; அதிலும் அந்த வருஷத்தில் மழையே இல்லை. வானம் பொய்த்தால் வளமை ஏது? விளைச்சலில்லை. வெள்ளாமை இல்லை. விதைத்துக் கதிர் தோன்றியிருந்த நிலங்களெல்லாம் வெந்து கருகிக் சுடுகாடாய்க் கிடந்தன; அந்தச் சுடுகாட்டில் பேய்த் தேர். என்னும் கானல்தான் களித்துக்கூத்தாடிக்கொண்டிருந்தது. தாகம் தாங்க முடியாத நிலப் பரப்புக்கள், வாய் வெடித்து அண்ணாந்து பிளவுற்றுக் கிடந்தன. ஆடு மாடுகளெல்லாம் குடி தண்ணீரோ, குளிப்போ இல்லாமல் வங்கும் சிரங்கும் சொறியும் பற்றி, தோல் விலைக்குக்கூடப் பெறாத அளவில் வற்றி மெலிந்து வாடத் தொடங்கின. நிலத்தை நம்பிப் பிழைப்பு நடத்திவந்த விவசாயிகளின் நிலைமை படுமோசமாயிற்று. பஞ்சம் தலை விரித்தது, கிராமம் கிராமமாக அடுப்புப் புகையே காணாமல் வானம் வெளிறிட்டு நிர்மலமாய்க் கிடந்தது. வயிற்றுக்கு உணவற்ற விவசாயப் பெருங்குடி மக்கள் பன்றிகளைப் போல் நிலத்தைத் தோண்டி, அங்குக் கிடைத்த வறண்ட வேர்களையும் கிழங்குகளையும் தின்று வயிற்றைக் கழுவினார்கள்; கற்றாழைக் கிழங்கைத் தின்றார்கள்; இனம்பேர் தெரியாத காய்கனி புல் பூண்டுகளைத் தின்றார்கள்; கழிச்சலெடுத்துச் செத்தார்கள். பலர் பிழைப்புக்கு வழி தேடி அயலூர் சென்றார்கள். 'மதுரைப் பக்கத்தில் பாலம் கட்டுகிறார்களாம்,' 'திருநெல்வேலியில் ரோடு போடு கிறார்களாம்' என்றெல்லாம் மக்கள் இன்று பேசுவார்கள்; நாளைப் பயணம் கட்டி விடுவார்கள். ஏதோ ஒரு பயங்கர ராகூஸன் அண்டம் குலுங்க வந்து அந்தக் கிராமத்தையே சூறையாடி, நாசமாக்கிவிட்டுச் சென்றது போல், சிவகிரியின் விவசாய வட்டாரங்கள் அருளிழந்து, அலங்கோலமான, அவலமான நிலையில் இருந்தன. இருளப்பக் கோனாரின் குடும்பமும் இந்த நிலைமைக்கு விதிவிலக்கல்ல.

இந்த அழகில் ஜமீனின் வரி வசூல் கெடுபிடி வேறு. ‘வெள்ளாமை இல்லை; எனவே இந்த வருஷம் வரிவஜா வேண்டும்' என்று குடியானவர்கள் ஜமீன்தாரிடம் முறையிட்டு கொண்டார்கள், சர்க்காருக்கு மனுச் செய்து கொண்டார்கள். பிழைப்புக்கு வழி காட்டும் முறையில் உள்ளூர்க் கண்மாயை ரிப்பேர் செய்யுமாறு, தூது சென்று தெரிவித்தார்கள் குடியானவர்கள் கேட்பதையெல்லாம் நிறைவேற்றி வைத்தால், அப்புறம் சர்க்காரின் அந்தஸ்தின் கதி என்ன ஆவது? எனவே சர்க்காரும் மௌனம் சாதித்துவிட்டது. விவசாயிகள் கொடுமைக்குப் பயந்து இரவோடு இரவாய்க் குடி பெயர்ந்தார்கள்: பண்ட பாத்திரங்களை, ஆடு மாடுகளை, கோழி, குஞ்சுகளைப் பறிகொடுத்தார்கள். ஆண்டவனை நோக்கி அழுது தீர்ப்பதைத் தவிர வேறு விமோசன மார்க்கம் தெரியாமல் வாடி வதங்கினார்கள்.  இருளப்பக் கோனாரும், அவரது மனைவியும் பிள்ளையும் இந்தச் சூழ்நிலையில் ஆடிக்காற்றுச் சுழியில் அகப்பட்ட பஞ்சுபோல், வாழ்வின் திக்குத் திசாந்திரம் தெரியாமல் திண்டாடினார்கள். ஜமீனிடம் பறி கொடுத்த பண்டபாத்திரங்கள் ஆடு மாடுகளைத் தவிர, தமக்குச் சொந்தமாயிருந்த சிறு புஞ்சை நிலத்தையும் மனைக் கட்டையும் வந்தவிலைக்குத் தள்ளிவிட்டுவிட்டு, வயிற்றைக் கழுவி வந்தார் இருளப்பக் கோனார். கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டதுபோல் தவித்துக் கொண்டிருந்த இந்த வேளையில்தான் மேற்கு மலைத் தேயிலைத் தோட்டத் திலிருந்து ஒரு கங்காணி கூலிக்கு ஆள் பிடிக்க வந்தான். இருளப்பக் கோனாருக்குத் தேயிலைத் தோட்டத்துக்கு வேலை பார்க்கச் சென்றவர்களின் கதியைப்பற்றி ஓரளவு தெரியும். மருதுத் தேவரின் மகன் மாடசாமித் தேவர் நாலு வருஷங்களுக்கு முன்னால் தேயிலைத் தோட்டத்துக்கு வேலைக்குச் சென்று, அங்கு பட்ட அடி உதைகளால் வர்மத்தில் விழுந்து, பிறந்தமண்ணில் வந்து மண்டையைப் போட்டதும் அவருக்குத்தெரியும். அமாவாசிக்குடும்பனின் மனைவி சுடலி, மலைக்குச் சென்று தேயிலை கிள்ளிப் பிழைத்ததும், அங்கிருந்து உடம்பெல்லாம் அழுகி வடியும் மேகத் தொழும்புப் புண்கள் பெற்று, வேலையை இழந்து திரும்பி வந்ததும், வாசுதேவநல்லூர் ரோட்டுப் பாதையில் அவள் பிச்சையெடுத்துப் பிழைத்ததும், அழுகி நாற்றமெடுத்துச் செத்ததும் அவருக்கு மறந்து விடவில்லை. இன்னும் இவர்களைப்போல் தேயிலைக் காட்டுக்குச் சென்று மலைக் காய்ச்சல் பெற்று 'ஆஸ்பத்திரி மருந்து' என்னும் பச்சைத்தண்ணீரைக்குடித்து, பரலோகம் சென்ற அப்பாவிகளையும் அவர் அறிவார். இருந்தும் அந்தக் கங்காணியின் வரவு ஏதோ வரங்கொடுக்க வந்த தெய்வப் பிரசன்னம் மாதிரிதான் இருளப்பக் கோனாருக்குத் தோன்றியது.

கங்காணி வந்து சேர்ந்த இரண்டே நாட்களில் இருளப்பக் கோனார் பிறந்த மண்ணின் மீது தமக்கிருந்த பாசத்தையும் பிடிப்பையும் உதறித் தள்ளிவிட்டு குடும்பத்தோடு தேயிலைத் தோட்டத்துக்குப் புறப்பட்டுச் சென்றார். மேற்குமலைத் தேயிலைத் தோட்டம் வெள்ளை முதலாளிகளும், உள் நாட்டு முதலாளிகளும் ஒன்று சேர்ந்து கொள்ளையடிக்கும் ஒருவேட்டைக்காடு. அந்தத் தோட்டக் கம்பெனியில்தான் தாதுலிங்க முதலியாருக்கும் ஒரு பங்கு இருந்தது; அத்துடன் அவருக்கெனத்தனிப்பட, சிறியதொரு தேயிலைப் பிரதேசமும் இருந்தது. சிவகிரியிலே ஜமீன்தார் அட்டகாசம் என்றால், மேற்கு மலையிலே முதலாளிகளின் அட்டகாசம். இருளப்பக் கோனாரும், அவரது மனைவி மாரியும், மகன் வீரையாவும் தாதுலிங்க முதலியாரின் தோட்டத்தில்தான் வேலை செய்துவந்தார்கள். வேலைக்குப் போன ஒருமாசத்துக்குள்ளேயே மாரிக்கு மலைக்காய்ச்சல் வந்து விட்டது; அதில் அவள் தப்பிப் பிழைத்தது, இருளப்பக் கோனார் சொல்வது போல், 'ஏதோ தெய்வ கடாட்சம்' போலத்தான். ஆள் மட்டும் எலும்பும் தோலுமாக ஆகிவிட்டாள். முதலியாரின் தோட்டத்தில் சுமார் ஐநூறு பேர் வேலை பார்த்தார்கள். அந்தத் தோட்டத்தில் வேலை செய்யும் முதலியாரின் கையாட்களான ரைட்டர்களும் கங்காணிகளும் எமகிங்கரர்களாய்த் தானிருந்தார்கள். எந்தத் தொழிலாளியாவது எதையாவது வாய்திறந்து கேட்டுவிட்டால், உடனே அவனைப்பிடித்துக் கட்டி, உயிரைவைத்து உடலை உரித்து விடுவார்கள் இந்தக் கொடுமைகளைத் தாதுலிங்க முதலியாரே கண்கூடாகப் பார்த்திருக்கிறார். என்றாலும், அவர் இதிலெல்லாம் தலையிட்டுத் தமது வரும்படியையோ கொள்ளையையோ, அந்தஸ்தையோ குறைத்துக் கொள்வதில்லை. இப்படிப் பட்ட நரக வாழ்க்கையின் மத்தியிலேதான் இருளப்பக் கோனார் தம்கும்பிக்கொதிப்பை ஆற்றுவதற்காக, தம்மனக் கொதிப்பை யெல்லாம் உள்ளடக்கி வந்தார். ஆனால், இருளப்பக்கோனாருக்கிருந்த இந்த மனப்பக்குவம் அவரது மகனான வீரையாவுக்கு இருக்கவில்லை. ஒருநாள் அவன் கங்காணியின் கொடுமையைத்தாங்கமாட்டாமல், அவனை நோக்கி ஏதோ வாய்த்துடுக்காகக் கேட்டு விட்டான். அவ்வளவுதான். சிறுவன் என்றும் பாராமல், அந்தக் கங்காணி அவனை மரத்தோடு மரமாய்க் கட்டிவைத்து, சாட்டையைக் கொண்டு ரத்த விளாறாக விளாசித் தள்ளி விட்டான். இந்தக் கண்ணறாவிக் காட்சியைக் காண முடியாமல், தடுக்க முடியாமல், இருளப்பக் கோனாரும் மாரியும் தொண்டை வறள, அழுது கூச்சலிட்டதுதான் மிச்சம். இருளப்பக் கோனாருக்கு இருந்த மனப் பக்குவம் வீரையாவுக்கு இல்லா விட்டாலும், அவரிடமில்லாத ரோஷமும் மானமும் வீரையாவிடம் நிறைய இருந்தன. எனவே அவன் தன் பெற்றோரின் கண்களிலேயே விழிப்பதற்குக் கூசியவனாய், அன்றிரவே சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போய் விட்டான். 'எங்கே போனான், என்ன ஆனான்', 'இருக்கிறானா, போய் விட்டானா' என்பதே இருளப்பக் கோனாருக்கும் மாரிக்கும் தெரியவில்லை...

மகனை இழந்த கவலையோடு இருளப்பக்கோனாரும் மாரியும் தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்த்து வந்தார்கள். இருளப்பக் கோனார் மலைமேலுள்ள தாதுலிங்க முதலியாரின் பங்களாவில் வேலைபார்த்து வந்தார். அப்போதுதான் ஒரு நாள் கைலாச முதலியாரும் தாதுலிங்க முதலியாரும் அங்கு வந்தார்கள். கைலாச முதவியாருக்குத் தமது செல்வாக்கையும் செல்வத்தையும் அறிமுகப்படுத்தி வைப்பதற்காக, தாதுலிங்க முதலியார் அவரை அழைத்து வந்திருந்தார். அந்தச் சமயத்தில்தான் இருளப்பக் கோனார் கைலாச முதலியாரின் நல்ல குணத்தையும் இரக்க சிந்தையையும் உணர்ந்து, அவரிடம் தமது கதையையெல்லாம் சொன்னார். இருளப்பக் கோனாரின் பரிதாபகரமான கதையைக் கேட்டுக் கண் கலங்கிய கைலாச முதலியார், அவருக்குத் தாம் ஆதரவளிப்பதாக வாக்குறுதியளித்து, அம்பாசமுத்திரத்துக்கு வந்து சேருமாறு கூறினார்.

மறுமாசமே இருளப்பக் கோனாரும் மாரியும் அம்பாசமுத்திரம் வந்து சேர்ந்தார்கள். கைலாச முதலியார் இருளப்பக் கோனாருக்கு ஒரு வண்டிமாடு வைத்துக் கொடுத்துப் பிழைப்புக்கு வழி பண்ணிக் கொடுத்தார்; அத்துடன் ஊர்ப்புறத்திலிருந்த காலி மனையை விலைக்கு வாங்கி, குடியிருக்க ஒரு குடிசையும் போட்டுக் கொடுத்தார்; இருளப்பக் கோனாரும் விசுவாசத்தோடு கைலாச முதலியாரிடம் நடந்து வந்தார்; கைலாச முதலியாரின் வயல்களை மேற்பார்த்துக் கொண்டார்; வீட்டு வேலைகளைக் கவனித்துக் கொண்டார்; அவ்வப்போது பாரம் ஏற்றிச்சென்று, அதில் கிடைக்கும் வருவாயின் மூலம் தமது வீட்டுப்பாட்டைக் கழித்து வந்தார். மாரியம்மாவும் வாரா வாரம் சேகரித்து வைத்திருக்கும் சாணத்தையெல்லாம் தட்டி எடுத்து எருவாக்கி, வீதிகளில் சென்று விற்று வருவாள்; இருந்தாலும், அவளுக்கு மகனைப் பிரிந்த ஏக்கம் மட்டும் பத்து ஆண்டுகள் ஆகியும் இன்னும் குறையவில்லை. கைலாச முதலியாரின் மகன் மணியைப் பார்க்கும்போதெல்லாம், "என் புள்ளை உசிரோடு தப்பிப் பிழைச்சிக் கிடந்தா, தம்பி உசரத்துக்கு வளர்ந்திருப்பான்" என்று பைத்தியம் போல் தனக்குத் தானே சொல்லிக்கொள்வாள். இதைக் கேட்கும் கைலாச முதலியாரும், "மாரி, கவலைப்படாதே. உன் பிள்ளையை எப்படியானாலும் கண்டு பிடித்து உன்னிடம் கொண்டு வந்து சேர்த்துவிடுகிறேன் "என்று ஆறுதல் கூறத்தவறுவதில்லை.

உரலிலுள்ள வெற்றிலை பதமிழந்து கூழாவதையும் உணராமல் தம்மை மறந்தவராக இடித்துக் கொண்டேயிருந்தார் இருளப்பக் கோனார். உதடுகள் துடிதுடிக்க, பழைய நினைவுகளில் தோய்ந்து மீண்ட உணர்ச்சிப் பரவசத்தோடு, "வீரையா, வீரையா" என்று அவரது வாய் மட்டும் கரகரத்து முனகிக் கொண்டது.

உள்ளே சென்ற மாரி மட்டும் புகையிலைக் காம்பைத் தேடிப் பிடித்துக் கொண்டு வந்து சேர்ந்தாள்.

"இந்தாங்க, போயிலை" என்று சொல்லிக் கொண்டே அவரிடம் புகையிலையை நீட்டினாள். 

தன் நினைவு மீண்ட கோனார்'ம்'என்று முனகிவிட்டு புகையிலையை வாங்கிக் கடைவாயில் ஒதுக்கினார். மாரி கட்டிலின் அருகில் தரையில் உட்கார்ந்தாள்.

"உங்களத்தானே, என்னமோ நினைப்பிலே இருக்கியளே! இருந்திருந்து நமக்கு இல்லாத கவலை புதுசா என்ன வந்திட்டுது? நம்ம வீரையாதான் பத்து வருசமா, என்னைக் கண்ணைக் கசக்கிக்கிட்டு இருக்கும்படியா, பண்ணிட்டுப் போயிட்டானே! எங்கே இருக்கானோ, என்னமா மருகுதானோ?" என்று கம்மிய குரலில் பிரலாபித்தாள் மாரி.

"ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணுண்ணு ஒருத்தன் இருந்தான். அவனையும் உசுரோடு உடலோடே தூக்கி வாரிவிட்ட மாதிரி ஆச்சி" என்று முனகினார் கோனார்,

"தீர்க்காயிசா பிழைச்சிக் கிடந்தா, நாம அவனைப் பார்க்காமலா இருக்கப் போறாம்? நம்ம முதலாளி தயவிருந்தா எப்படியும் அவனைக் கண்டு பிடிச்சிறலாம்."

"நமக்கு நம்ம கவலை; அவுகளுக்கு அவுக கவலை" என்று பெருமூச்செறிந்தார் இருளப்பக் கோனார்,

"அதென்ன? அவுகளுக்கு என்ன கவலை வந்துவிட்டது?

"அதையேன் கேக்கிறே? கடவுள் நல்லவங்களைத்தான் சோதிப்பாரு. நம்ம முதலாளிக்கு முன்னே மாதிரி இப்ப யாபாரம் ஓட்டமில்லை. கடன் வேறே!"

"அப்படியா?"

"ஆமா, என்னமோ ஜவுளியெல்லாம் விக்காமல் தங்கிப் போச்சாம். அக்கரைச் சீமைக்கும் அனுப்ப முடியலியாம். என்னமோ சுயராச்சியம் வந்துட்டுதுன்னு கொட்டி முழக்கினாங்க; மனுசனுக்கு தான் சுகத்தை காணம்!"

"இப்ப எப்படி இருக்குதாம்,"

"எப்படி இருக்கும், முதலாளி முகத்திலே பழைய சந்தோசம் இல்லெ வீட்டுச் செலவை யெல்லாம்கூட, குறைச்சிக்கிட்டு வாராக. அருணாவரத்துப் பக்கத்திலே உள்ள வயல்கூட இப்ப அடமானத்திலேதான் இருக்கு. அம்மாவுக்குக் கூடத் தெரியாது. முதலாளியும் நானுமாய்ப் போயித்தான் முடிச்சிக்கிட்டு வந்தோம்."

"இருந்திருந்து இவுகளுக்கா இப்படி வரணும்?” என்று அங்கலாய்த்தாள் மாரி

“முதலாளி மாசம் தவறினாலும் திருச்செந்தூருக்குப் போயி, சாமி தரிசனம் பன்ணத் தவற மாட்டாக. இப்ப ரெண்டு மூணு மாசமா, அவுகளுக்கு அதுக்குங்கூடத் தொலையலெ. அவுஹ தெய்வபக்திக்குத் தெய்வம் இப்படிச் சோதிக்கப் பிடாது."

"அவுக கோயிலுக்குக்கூட, அவுகதானே தர்மகர்த்தா. இல்லே ?"

"ஆமாமா, கோயில்பணத்தைச் சுரண்டித்தின்ன அந்த மைனருக்கு ஒரு குறைச்சல் இல்லெ. நம்ம முதலாளி அம்மனுக்குக் செஞ்சிருக்கிற சேவைக்கு அவள் இப்படி வஞ்சகம் நினைக்கக் கூடாது. அவுஹ மேற்பார்வையிலே, ஊரிலே அட்டியான சொல் உண்டா? அம்மனுக்கே தெரியும்!"

மாரி சிறிது நேரம் பதில் பேசாது இருந்தாள். பிறகு பொங்கி வந்த ஏக்கத்தைப் பெருமூச்சாகப் பிதுக்கித் தள்ளி விட்டு, வாய் திறந்தாள்.

"கடவுளுக்குக் கண்ணிருந்தா, இந்த மாதிரிப் புண்ணியவானுக்குக் கஷ்ட காலம் வருமா? நாம் யாருக்கு என்ன குத்தம் செய்தோம்?" யாரு குடியைக் கெடுத்தோம்? நம்மபுள்ளையை ஏன் இப்படி உசுரோடே பிரிச்சு எடுத்துக்கிட்டுப் போவணும்? சாமிகூட வர வரப் பணக்காரன் சாமியாப் போயிட்டுது. அதுங்கூட, இருக்கிறவனுக்கு ஒரு நியாயம், இல்லாதவனுக்கு ஒண்ணுன்னு தட்டுக்கெட்டும் போச்சே!" 

"இந்தாபாரு,மாரி; தெய்வத்தைப் பழிக்காதே"என்று அமைதியோடு உபதேசம் செய்தார் கோனார்.

அந்த உபதேசத்தை மாரி காதில் வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை. அவளிடமிருந்து எவ்விதப் பதிலும் வரவில்லை . அதற்குப் பதிலாக, அவள் விம்மி விம்மிப் பொருமுவதையும் அந்தப் பொருமலால் அவளது மெலிந்த உடல் குலுங்கிக் குமைவதையும்தான் இருளப்பக் கோனார் இருளினூடே கண்டுணர்ந்தார். உடனே அவர் தமது நடுங்கும் கரத்தால், அவளது தலையைப் பரிவோடு தடவிக் கொடுத்தவாறு, "ஏன் அழுவுதே? அழுது என்ன ஆகப் போவுது? எந்திரி, எந்திரிச்சு எனக்குச் சோத்தை எடுத்து வய்யி. வாய் கொப்பளிக்கக் கொஞ்சம் தண்ணிகொண்டா" என்று கூறி, அவள் சிந்தனையைத் திசை மாற்றித் திருப்பிவிட முனைந்தார்.

மாரியம்மாள் ஒன்றும் பேசாமல் இடத்தைவிட்டு எழுந்திருந்து, முன்தானையால் மூக்கையும் கண்ணையும் துடைத்துக் கொண்டு குடிசைக்குள் சென்றாள்.

அவர்களது சோகப் பெருமூச்சில் பங்கு பெறுவது போல், அந்த இருளின் அந்தகாரத்தில் எங்கோ ஒரு அக்காக் குருவி ஏங்கி ஏங்கி இடைவிடாது கூவிக்கொண்டிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பஞ்சும்_பசியும்/009-028&oldid=1684128" இலிருந்து மீள்விக்கப்பட்டது