11

தலைக்கு மேலே மின்சார விசிறி சுழன்று கொண்டிருந்தது.

தாதுலிங்க முதலியார் தமது மேஜைக்கு எதிரே உட்கார்ந்து கால்களை மேஜைமீது தூக்கிப் போட்டுக் கொண்டு, கண்களை மூடி அறிதுயில் பள்ளி கொண்டிருந்தார். மேஜை விளக்கு மேஜைமீது விரிக்கப்பட்டுக் கிடந்த கணக்குப் புத்தகங்களின் மீது நிஷ்காமியாக ஒளி செய்துகொண்டிருந்தது.

தாதுலிங்க முதலியார் கண்களை மூடி ஆடாது அசையாது இருந்த போதிலும், அவரது மனம் மட்டும் எண்ணற்ற கணக்குகளையும், வியாபார விஷயங்களையும் அலசி ஆராய்ந்து கொண்டிருந்தது!

இப்போ பிளாக் மார்க்கெட்டில் கட்டு ஒண்ணுக்கு முப்பத்தஞ்சு ரூபாய்தான் கிடைக்குது. அந்த மேலப்பாளையத்து ராவுத்தர் கட்டு ஒண்ணுக்கு நாற்பது ரூபாய் தருகிறேன்னு ஒத்துக்கிட்டுப் போயிருக்கார். அட்வான்ஸ் வேறெ குடுத்திட்டார். அதனாலே எப்படியும் வந்துதான் சேருவார். ஒரு வாரத்திலே லாரியைக் கொண்டுவந்து டெலிவரி எடுத்துக்கிட்டுப் போறதாகச் சொன்ன மனுசனை இன்னிக்கித் தேதி வரையிலே காணோம். அவர் வந்து சேர்ந்தா, இந்த முந்நூறு பேலையும் தள்ளி விட்டிறலாம். கைமேலே பணம்.

"இந்தக் கைலாச முதலியாரைத் தொலைச்சித் தலை முழுகணும்னு மைனர் முதலியார் ஒத்தக்காலிலே நிற்கிறார். அவர் சொல்றதும் சரிதான். இந்தக் கைலாசம் குடுக்கிற இளக்காரத்தாலே, தறிகாரங்கள்ளாம் ஒண்ணு சேர்ந்துக் கிடுதானுக. இருந்தாலும் நல்லவேளையா சங்கம்கிங்கம்ணு வச்சி, நம்ம உயிரை வாங்காம இருக்கானுக. அந்த மட்டிலே சேமம்தான்.

"நம்ம கணக்குப்பிள்ளை என்ன இருந்தாலும் எமகாதகன்தான், பிடிச்ச பிடியிலே அந்தக் கைலாசத் திட்டேயிருந்து ரூபாய் மூவாயிரத்தைக் கறந்துட்டு வந்துட்டானே. நகை வேறே. நகை இப்ப உள்ள விலைக்கு ரெண்டாயிரம் பெறும். கணக்கப் பிள்ளை அன்னிக்கி சம்பளம் உயர்த்தித் தரணும்னு கேட்டான். ஆகட்டும்ணு சொல்லுக்குச் சொல்லிவச்சேன். இப்போ இந்தப் பயலுக்குச் சம்பளத்தை உயர்த்தினா, மத்தவங்கள்ளாம் சும்மா இருப்பானா? அவன் கேக்கிறதிலே குத்தமில்லெ. அவனும் வேலைக்கு வந்து இத்தனை வருசமா, விசுவாசமாய்த்தானிருக்கான். அதுக்காக, இப்ப இருக்கிற நிலவரத்திலே சம்பளத்தை உயர்த்துறதாவது?... அது அவ்வளவு தான்.  "கைலாச முதலியாரை இன்னம் சுத்தி வளைச்சு ஒரு பிடி பிடிச்சா, அவன் கிட்டேயுள்ள ஜவுளியையெல்லாம் கூட மலிவா விலைபோட்டு எடுத்துக் கிடலாம். பிழைப்பிலே மண்ணை வாரிப் போட்டதாகத் திட்டுவான் இந்தத் திட்டுக்கெல்லாம் பயந்தா, காரியம் நடக்குமா? வியாபாரத்திலே தர்ம நியாயம் பார்த்தா, அவனை மாதிரி விதியேன்னு தலையிலே கை வைக்க வேண்டியது தான். அந்த ஆறாயிரத்துச்சொச்சத்தையும் அவன் கிட' டேபிரிக்கிறவழியைப் பார்க்கணும். இருக்கிற நிலவரத்தைப் பார்த்தா எவனெவன் எந்த நிமிசத்திலே, ஐபி குடுப்பான்னு தெரியலெ. அது விசயமா வக்கீலுக்குத் தாக்கல் சொல்லணும்.

"வியாபாரமும் மின்னே மாதிரி இல்லெ. நூல் விலை ஏத்தமா இருக்கிறதாலே நம்ம பிஸினஸ் ஒரு வழியா ஓடிக்கிட்டிருக்கு. இல்லென்னா, ஆபத்துத்தான். ஏத்துமதிக்கு மட்டும் மின்னே மாதிரி இடமிருந்தா ஒரு தட்டுத் தட்டலாம். ஆனா, இந்த சர்க்கார் அதுக்குவேறே வரியைப் போட்டுத் தொலைச்சிட்டுது. சொல்லப்போனா, இந்த சர்க்கார் வெள்ளைக்காரன் சௌகரியத்தைக் கவனிக்கிற அளவுக்கு, நம்ம சௌகரியத்தைக் கவனிக்கக் காணோம். மில் துணிப் போட்டி வேறெ. லாபத்துக்குப் பங்கம் வராமப் பார்த்துக் கிடணும்னா, உழைக்கிறவன் தலையிலே கை வைக்கிறதை விட வேறே விதியில்லை. இப்ப இருக்கிற நிலைமையிலே இந்த சர்க்கார் இல்லேன்னா, இது கூட ஓடாது. ஆமா பூனைக்குப் பயந்து புலி வாயிலே விழக்கூடாது.

"சங்கரைப்பத்தி என்னென்னமோ பேச்சு காதிலே விழுது. இரணியனுக்குப் பிரகலாதன் பிறந்த மாதிரி, எனக்குன்னு வந்து பிறந்திருக்கு, இந்தத் தறுதலைக் கொள்ளி. அவனைக் கொஞ்சம் கண்டிச்சுவைக்கணும்."

தம்முள்ளே தாமாகி, தாமுக்குள் எல்லாமாய் முயங்கி நின்று, தாதுலிங்க முதலியார் ஆத்ம விசாரம் செய்து, ஆதாயக் கணக்குப் போட்டுக்கொண்டிருந்த வேளையில் 'அவரது மனைவி தர்மாம்பாள் அங்கு வந்து சேர்ந்தாள்.

”இந்தாங்க."

மனைவியின் குரல் கேட்டுக் கண் விழித்தார் தாதுலிங்க முதலியார்.

"எங்கேவந்தே ?"

“மணி ஒன்பது அடிக்கப்போவுது. சாப்பிட வேண்டாமா?"

"சரி சங்கர் எங்கே? வீட்டில் இல்லையா?"

"இல்லெ, திருநெல்வேலிக்குப் போயிருக்கான். காலையில வந்து விடுவதாகச் சொல்லிட்டுப் போனான், சினிமாப் பார்க்கப் போறதாகச் சொன்னான்."

"திருநெல்வேலியில் இவனுக்கு என்ன சோலி? அவனைப் பத்தி என்னென்ன பேச்செல்லாம் வருது, தெரியுமா? எனக்குப் பிறந்த புள்ளெ இப்படி கெட்டுக் குட்டிச்சுவராகப் போவான்னு நான் நினைக்கவே இல்லெ!" என்று வருத்தமும் கோபமும் கலந்து குமுறும் வார்த்தைகளில் சொன்னார் தாதுலிங்க முதலியார்.

அவரது பேச்சு தர்மாம்பாளின் மனத்தைத் திடீரென்று கலக்கியது. அவள் எண்ணாததெல்லாம் எண்ணினாள், பிறகு கணவனை நோக்கி, "நீங்க என்ன இப்படிச் சொல்லுதிய சங்கரைப்பத்தி அப்படிச் சந்தேகப்பட முடியமா? அவனாவது, தாறுமாறா அலையுறதாவது? யார் சொன்னா அப்படி?” என்று உரிமையோடு கேட்டாள்.

"நீ நினைக்கிறமாதிரி கெட்டழிஞ்சிருந்தாக்கூட, நான் கவலைப்பட மாட்டேன். ஒரு கலியாணத்தைப் பண்ணி, பெண்டாட்டியை வீட்டுக்குக் கொண்டு வந்து விட்டால் சீராயிருவான் என்றாவது தேற்றிக் கொள்வேன். ஆனால்; அவன் என் குடியையில்லா கெடுத்துருவான் போலிருக்கு! இவன் என்னமோ இந்தக் கம்யூனிஸ்டுகளோடு சேர்ந்து சுத்திக் கிட்டுத் திரியுதானாம். இவனுக்கு எதுக்கு இந்த வேண்டாத பயல்களோடே யெல்லாம் சகவாசம். நம்ம குடும்பத்துக்கு இது அடுக்குமா? எவனெவன் எப்படிப் போனா என்னான்னு கிடக்கிறதை விட்டுட்டு. என்ன அரசியல் வேண்டியிருக்கு, அரசியல்!" என்று ஆத்திரத்தோடு கூறினார் தாதுலிங்க முதலியார்.

தாதுலிங்க முதலியார் இவ்வாறு விஷயத்தைத் தெளிவாக்கிய பின்னர்தான் தர்மாம்பாளுக்கு நிம்மதி பிறந்தது; அத்துடன் தன் மகனைப்பற்றி, தான் சந்தேகஸ்பதமான வீண்பழியைத் தவறாகச் சுமத்த நேர்ந்த தன் மனச்சாட்சியையும் கடிந்து கொண்டாள். அதன் காரணமாக, அவளுக்குத் தன் மகன் மீது திடீரென்று ஒரு பெரும் அனுதாப உணர்ச்சி தோன்றியது.

"இவ்வளவுதானா?" என்று ஆசுவாசமாகப் பெருமூச்சுவிட்டாள். தர்மாம்பாள். "நீங்க மட்டும் கூட்டங்களுக்கெல்லாம் போகமலா இருக்கீக! எலெக்சன் காலத்திலே நீங்களும்தானே காரைப் போட்டுக்கிட்டு மேற்கும் கிழக்குமாகத் திரிஞ்சீக. அவன் செய்தது மட்டும் குத்தமாப் போச்சாக்கும்!"

மனைவியின் பேச்சைக் கேட்டு, தாதுலிங்க முதலியாருக்குக் கோபம்தான் பொங்கியது. எனினும் தமது மனைவியிடம் கோபத்தைக் காட்டிக் கொள்வதில் அர்த்தமில்லை என்பதை உணர்ந்தவராக, "என்ன குத்தமாப் போச்சா? அவன் போறபோக்கிலே,. நான் பண்ணுகிற பிளாக் மார்க்கெட் பிஸினெஸையெல்லாம் சந்தி சிரிக்க வச்சிடுவான் போலிருக்கே?" என்று சலித்துக் கொண்டார்.

"ஆமா, உங்களுக்கும் எதுக்கு இந்த வம்பு? கள்ள மார்க்கெட் பண்ணி நாலுபேர் வயித்திலே அடிச்சா, பணம் சம்பாதிக்கணும்? சங்கரன் கூடத்தான் அன்னிக்கி என்னென்னமோ சொல்லிக்கிட்டிருந்தான், நீங்க கைவசம் இருக்கிற நூலையெல்லாம் ஏறக் குறையன்னாலும் தள்ளி விட்டிருங்க" என்று உபதேசிக்கமுன்வந்தாள் தர்மாம்பாள்.

"இந்தா பாரு, தர்மா, வியாபாரமின்னா நாலும்தான் இருக்கும். அதிகாரிகள் லஞ்சம் வாங்குகிறவரையிலே,கள்ள மார்க்கெட்டாவது, வெள்ளைமார்க்கெட்டாவது? எல்லாம் ஒரு எழவு மார்க்கெட்டுதான்" என்று கூறி, அத்துடன் பேச்சைச் சுருக்கிவிட்டு, "சரி வா, சாப்பிடப் போகலாம்" என்று கிளம்பினார்.

தர்மாம்பாளும் கணவனைப் பின்தொடர்ந்தாள்.

தாதுலிங்க முதலியார் சாப்பிட்டு முடித்துவிட்டு, வீட்டின் நடு ஹாலுக்கு வந்தார்; ஹாலின் மத்தியில் கிடந்த சோபாவின்மீது உட்கார்ந்து, கையிலிருந்த குச்சியால் பல்லைக் குத்திக் கொண்டிருந்தார்.. ஹாலுக்கு இடது புறமுள்ள அறைக் கதவு சாத்தப்பட்டிருந்தது; எனினும் உள்ளே விளக்கெரிவது, கதவுக்கு மேலுள்ள வர்ணக் கண்ணாடியின் மூலம் தெரிந்தது. சிறிது நேரத்தில் ஒரு வெள்ளித் தம்ளரில் பால் கொண்டுவந்து தாதுலிங்க முதலியாரிடம் கொடுத்துவிட்டு, பக்கத்தில் உட்கார்ந்தாள் தர்மாம்பாள்.

தாதுலிங்கமுதலியார்பாலைக் கொஞ்சம் கொஞ்சமா ருசித்துச் சாப்பிட்டுவிட்டு, தம்ளரைக் கீழே வைத்தார்; ஒரு இளம் ஏப்பம் அவரது தொண்டையைத் தடவிவிட்டுக் காற்றில் கலந்தது.

"ஆமா, உங்களிடம் ஒண்ணு கேக்கணும்னு இருந்தேன், மறந்தே போச்சு" என்று ஆரம்பித்தாள் தர்மாம்பாள்.

"என்னது?"

"நேத்து கணக்கப் பிள்ளை மூலமா, கொடுத்தனுப் பிச்சிங்களே, நகை. அதென்ன, அடகுக்குவந்துதா?"

தாதுலிங்க முதலியார் பெருமிதத்தோடு பதில் கூறத் தொடங்கினார்.  "அடகுமில்லே, ஒண்ணுமில்லே. அதெல்லாம் அந்தக் கைலாச முதலியார் வீட்டு நகை. அவன் வியாபாரத்தை நடத்தத் தெரியாம நடத்தி, கெடுத்துக்கிட்டான் அற்பனுக்கு வாழ்வு வந்தால், அர்த்த ராத்திரியிலே குடை பிடிக்கிற மாதிரி, என்னமோ கோயில் தர்மகர்த்தா ஆனதிலே, கிடைக்காத பதவி கிடைச்சிட்ட மாதிரி, 'டாம் டூம்'ணு செலவு பண்ணிக் கெட்டுக்குட்டிச்சுவராப்போனான். நம்ம பாக்கிக்கு அவன் இன்னம் ஆறாயிரத்துச் சில்வானத்துக்கு மேலே தரணும். நம்ம கடனுக்காக, அவன் கொடுத்தனுப்பின நகைதான் அது!"

கணவனின் பதிலைக் கேட்டு தர்மாம்பாளுக்கு உள்ளூர இனம் தெரியாத கலவரமும் பயமும் ஏற்பட்டது. எனினும், அவள் அதை வெளிக் காட்டிக்கொள்ளாமல் மேலும் பேசினாள்:

"அதென்ன அப்படிச் சொல்லுதீக? அவரு ரொம்ப நல்லவருன்னு எல்லாரும் சொல்லுதாக..."

அவளது பேச்சைத் தாதுலிங்க முதலியார் முடிக்க விடவில்லை; சட்டென்று குறுக்கிட்டு விஷயத்தை தெளிவு பண்ணினார், அவர்:

"எல்லாம் ஒரு அளவோட இருக்கணும், தர்மா."

தர்மாம்பாளுக்கு மேற்கொண்டு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. திகைத்தாள்; மருண்டாள்; அவளது உதடும் உள்ளமும் துடியாய்த் துடித்தன. சிறிது நேர மௌனத்துக்குப் பிறகு, அவள் உள்ளடங்கி நின்ற நிதானத்தோடு பேசமுனைந்தாள்:

"நானும் உங்களிடம் ஒரு விசயம் சொல்லணும்'ணுதான் இருந்தேன். நீங்களானா: இப்படிக் காரியம் செஞ்சிருக்கீக" என்று குறைப்பட்டுக் கொண்டாள்.

"என்னது?" என்று கேட்டுக்கொண்டே நிமிர்ந்து உட்கார்ந்தார் தாதுலிங்க முதலியார். 

"கமலாவை அந்தக் கைலாச முதலியார் மகன் மணிக்குக் கட்டிக் கொடுக்கணும்ணு ஒரு யோசனை. கமலாவுக்கும் மாப்பிள்ளையைப் பிடிச்சிருக்கு. சாங்கர்தான் எல்லாத்தையும் சொன்னான். சரி, பார்ப்போமின்னேன்_" தர்மாம்பாள் எப்படியோ இந்த விசயத்தைச் சொல்லி முடித்துவிட்டாள்.

தர்மாம்பாளின் பேச்சைக் கேட்டதும், தாதுலிங்க முதலியாருக்கு இன்னதென அறிய முடியாத ஒரு வேகமும் வெறியும் ஏற்பட்டன. அவர் தமது இருக்கையிலிருந்து துள்ளி எழுந்தார். அந்த ஹால் முழுவதும் எதிரொலித்து விம்மும்படி, ஒரு உறுமல் உறுமிவிட்டு, கோபாவேசமாகப் பேசத்தொடங்கினார் அவர்:

"என்ன சொன்னே? அந்த ஊதாரிப்பயல் மகனுக்கா என் பெண்ணைக் கட்டிக் கொடுப்பேன்? சொத்துபத்து இல்லாத சோம்பேறி நாய்களோடேயா சம்பந்தம்? சங்கர் சொன்னானாம்;இவள் கேட்டாளாம்! இந்தவீட்டுக்குநான் அதிகாரியா?இல்லை, அவன் அதிகாரியா?"

தரையிலேகால்கள் தரிக்காமல், நிலை கொள்ளாமல் புழுங்கித் தவித்தார் தாதுலிங்க முதலியார். என்றைக்கும் இல்லாதவாறு தன் தந்தை ஏதோ கோபாவேசத்தில் அலறுவதையும், அதில் தன் பெயரும் அடிப்படுவதையும் , கேட்டுணர்ந்த கமலா தன் அறைக்கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள். கமலாவருவதைக்கண்டதும், தாதுலிங்க முதலியார் தமது ஆக்ரோஷத்தை யெல்லாம் உள்ளடக்கிக் கொண்டு, "கமலா, இங்கே வா" என்று கூப்பிட்டார். கமலா தன் தாயருகே வந்து நின்றுகொண்டு, "என்னப்பா?" என்று பயமும் வியப்பும் கலந்த குரலில் கேட்டாள்.

தாதுலிங்க முதலியார் பலவந்தமாக வரவழைத்த சாந்தபாவத்தோடு, தம் மகளிடம் பேசத் துணிந்தார்:  "இந்தா பாரு, கமலா. உன் கலியாண விசயமாக அம்மா சொன்னாள். நீ அந்த எண்ணத்தை அடியோடே மறந்துடு நீ படிச்ச பொண்ணு; புத்திசாலி. உனக்கே தெரிய வேண்டாமா? நம்ம குடும்ப கௌரவமென்ன அந்தஸ்தென்ன? இருந்திருந்து ஒரு தறிகாரன் வீட்டுக்கா நீ மருமகளாகப் போவது...?"

தாதுலிங்க முதலியாரின் இந்தப் போதனையைக் கேட்டு கமலா தாக்குண்டாளெனினும், அவள் தடுமாறி விடவில்லை. தந்தையின் பேச்சினால் குழம்பிச் சிதறிய உணர்ச்சிகளையெல்லாம் அவள் ஒரு நிலைப்படுத்தி உறுதி செய்துகொண்டு, தந்தைக்குப் பதில் கொடுக்க விரும்பினாள். எனினும் அவள் எதிர்பார்த்த மாதிரி வாயிலிருந்து உட்னே வார்த்தைகள் பிறந்து விடவில்லை. தனது விருப்பத்துக்கெதிராக தன் வாழ்வையும் ஆசைக் கனவுகளையும் பாதிக்கும் விதத்தில் தன் தந்தை குறுக்கிட்டு நிற்பதை, அவளால் எடுத்த எடுப்பில் தடுத்துப் பேச இயலவில்லை. அவள் கண்களிலே கண்ணீர் மல்கிப். பெருகியது; துடிதுடிக்கும் உதட்டைப் பல்லால் அதுக்கிக் கடித்து உணர்வூட்டிக்கொண்டாள்.

கமலாவின் அந்த மௌன நிலையின் மர்மத்தை உணராதவராக, தாதுலிங்க முதலியார் "கமலா, போ. போய்ப் படி." என்று சாவதானமாகச் சொன்னார்.

ஆனால் கமலா போகவில்லை அதற்குப் பதிலாக, அவள் தந்தையை நிமிர்ந்து நோக்கினாள்; கண்ணில் பொக்கிய கண்ணீரைக் கைவிரலால் சுண்டி விட்டுக் கொண்டாள்; கணீரென்று ஒலிக்கும் . குரலில் பதில் சொன்னாள்:

"அப்பா, நான் மணி அத்தானைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன்!"

தமது மகளின் தைரியத்தைக் கண்டு தந்தை ஒரு கணம்' மலைத்தார்.ஆனால் மறுகணமே அவரது ரோஷ உணர்ச்சி யும், கோபமும் உக்கிரகதி பெற்றன.

"அத்தான்! எந்த முறையிலடி, அத்தான்? மரியாதையா அவனை மறந்துவிடு"

"முடியாது. நான் அவரைக்காதலிக்கிறேன்."

"காதல்! காலேஜுக்குப் படிக்கப் போறேன், போறேன்னுட்டு, இந்தக் காதலைத்தான் கத்துக்கிட்டு வந்தியா?"

"அப்பா எனது இஷ்டத்துக்குமாறாக நீங்கள் எதுவும் செய்ய முடியாது!"

"நான் உயிரோடிருக்கிறவரையில் இந்த வீட்டில் என் இஷ்டத்தை மீறி எதுவும் நடக்க முடியாது. தெரியுமா?"

"அதையும்தான் பார்க்கப் போகிறேன். கல்யாணம் செய்து கொள்ளப் போவது நான் தானே ஒழிய, நீங்களல்ல. எனது சுகதுக்கங்களைக் கவனித்துக்கொள்ள எனக்குத் தெரியும் உங்களுடைய பணத்தாசைக்கும், பதவியாசைக்கும் பயந்து, நான் என் வாழ்வைப் பலிகொடுக்க மாட்டேன்."

"என்னடி, பிரசங்கம் பண்றே ? அந்தப் பயல் சங்கர் தான் பிரசங்கம் பண்ணிப் பண்ணிக் குட்டிச்சுவராப் போறான்னா, நீவேறெஆரம்பிச்சிட்டியா? மரியாதையாப் போ உள்ளே. வீணா என் கோபத்தைக் கிளறிக் கொண்டிராதே" என்று முகமும் உதடுகளும் சிவந்து கனன்று துடி துடிக்கச் சீறி விழுந்தார் தாதுலிங்க முதலியார்.

மகளுக்கும் கணவனுக்கும் நடந்த வாக்குவாதத்தைக் கேட்டு, திகிலும் திகைப்பும் அடைந்து கல்லாய்ச் சமைந்து நின்ற தர்மாம்பாள், இன்னது செய்வதெனத் தெரியாமல் வாயடைத்து மூச்சடைத்து நின்றாள்.

உணர்ச்சியின் உத்வேகத்தோடு தந்தையின் சுடு சொற்களைத் தூக்கியெறிந்து பேசிநின்ற கமலாவால், தந்தையின் கோபாவேசத்தை அதிகநேரம் தாக்குப்பிடித்து நிற்க முடியவில்லை. திடீரென்று உள்ளத்தில் ஏற்பட்ட ஒரு கணத்தைரியச்சிதைவு அவளது இதயத்திலேமுட்டிமோதிக் கொண்டிருந்த அழுகையையும் வேதனையையும் அணையுடைத்து வெளிப் பாயச்செய்தது.

"அம்மா!"என்றுபயங்கரமாகக்கதறிக்கொண்டே, தன் தாயின் மீது சாய்ந்து, அவளைக் கட்டிக்கொண்டு விக்கி விக்கி அழத்தொடங்கினாள் கமலா.

கமலாவின் அலறலைக் கேட்டதும்தான் தர்மாம்பாளும் தனது திக்பிரமையிலிருந்து விடுபெற்றாள். தர்மாம்பாளுக்கும் கண்ணில் கண்ணீர் கரித்து முட்டியது. தொண்டைக் குழியில் ஏதோ உருண்டோடுவதுபோல் தோன்றியது. அவள் தனது பாசக் கரத்தால் கமலாவை இறுக அணைத்துக் கொண்டு "அழாதேம்மா" என்று உள்ளடங்கிக் கம்மிப் போன குரலில் தேற்றினாள். அத்துடன் தன் கணவனையும் நோக்கி, "எது எதை எப்படிச் சொல்லணும்ணு கிடையாதா? இப்போ இவளை அழவச்சி, என்னத்தைக் கண்டுட்டிக?" என்று கட்டிப்போன குரலில் கடிந்து கொண்டாள். '

ஆனால் தாதுலிங்க முதலியாரோ மனைவியின் பேச்சைக் கேட்பதற்காக அங்கு காத்து நிற்கவில்லை. ஹாலைவிட்டு வெளியேறி வெளி வராந்தாவுக்குச் சென்று விட்டார்; நிலை கொள்ளாது புழுங்கித் தவிக்கும் மனத்தோடு வராந்தாவில் மேலும் கீழும் வெறி பிடித்தது போல் உலவிக் கொண்டிருந்தார்.

"நல்லபிள்ளை வந்து வாய்த்தான் எனக்கு குலத்தைக் கெடுக்க வந்த கோடாலிக் காம்பு! பாவிப் பயல், இந்தப் பொண்ணு மனசையுமில்லெ கெடுத்து வச்சிருக்கான்!" என்று அவர் வாய்விட்டுத் தமக்குத் தாமே முனகியவாறு தமது ஆத்திரத்தைத் தணிக்க முயன்று கொண்டிருந்தார். 

அதேபோல் கமலாவும் தன் உள்ளத்திலிருந்து பொங்கிப் பொங்கியெழும் அழுகைக்கு அணை கட்டாமல் கண்ணீரைப் பெருக்குவதன் மூலம் தன் மனப் பாரத்தைக் குறைக்க முயன்று கொண்டிருந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பஞ்சும்_பசியும்/011-028&oldid=1684123" இலிருந்து மீள்விக்கப்பட்டது