22

கம்பத்தின் கீழ் நிற்றல் காணீர் - எங்கும்
   காணவரும் வீரர் பெருந்திருக் கூட்டம் !
நம்பற் குரியர் அவ்வீரர்! - தங்கள்
   நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பர்!

என்ற பாரதியார் பாடலின் இசைத்தட்டுச் சங்கீதம் எதிர்த்த நாயர் ஹோட்டலிலிருந்து இனிமை நிறைந்து ஒலித்துக் கொண்டிருந்தது. மதுரை நகர் நெசவுத் தொழிலாளர் சங்கக் கட்டிடத்தின் முகப்பில் காணப்பட்ட உயரக் கம்பத்தின் உச்சியில் அந்த செங்கொடி, பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருந்தது. அந்தக் கொடியில் பொறித்துள்ள ம.நெ.ச (மதுரைநகர் நெசவாளர் சங்கம்) என்ற எழுத்துக்கள் நிலையாகத் தெரியாவிட்டாலும், எதிர்க்காற்றில் அலை வீசிப் பறக்கும் அந்தக் கொடியின் துவட்சியில் அவை மின்வெட்டுப்போல் உருக்காட்டின. மேலேறி விட்ட நீலவானத்தில் விரைந்தோடும் மேகக் கூட்டங்களை ஏறிட்டுப் பார்க்கும் போது, அந்த மேகக் கூட்டங்கள் நிலையாக நிற்பது போலவும், காற்றில் படபடக்கும் அந்தக் கொடி மட்டும் எதிர்க்காற்றில் வெகு வேகமாக முன்னேறிச் செல்வது போலவும் ஒரு காட்சிப் பிரம்மை உண்டாயிற்று நிலாவொளியோடு போட்டி போட்டுக்கொண்டு, ஹோட்டல் உச்சியிலுள்ள நியான் விளக்கு அந்தத் துவஜத்தின் மீது ஒளியை அள்ளிச் சொரிந்து கொண்டிருந்தது.

கொடி மரத்துக்கருகே. நாலைந்து நெசவாளி வேழியர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். சிறிது நேரத்துக்கு முன்னர் சாப்பிட்ட டீயின் ருசியை அவர்கள் நாக்கு சப்புக் கொட்டிக் கொண்டிருந்தது; டீ குடித்ததனால் ஏற்பட்ட வாயின் மழுமழுப்பைப் போக்குவதற்காக ஓரிருவர் பீடியைப் பற்றவைத்து, ரசித்துக் குடித்துக் கொண்டு நின்றார்கள்.

"அட வாங்கய்யா, உள்ளே போகலாம், சும்மா பீடியைக் குடிச்சிக்கிட்டு! அவர் காத்துக்கிட்டிருப்பாரு' என்று ஒருவர் கடிந்து கொண்டார்.

"பீடிதான் முடியட்டுமே. கொஞ்சம் பொறுமேன்!" என்றார் ஒருபீடி ஆசாமி.

அதற்குள் பீடி குடித்துக் கொண்டிருந்த இன்னொருவர் எங்கே தம்மையும் விரட்டத் தொடங்கிவிடுவார்களோ என்று பயந்து பேச்சை மாற்றமுயன்றார். "அது சரி, தம்பி மணி இங்கே வந்து எத்தினி நாளாச்சு?"

"எத்தினி நாளா? அஞ்சாறு மாசமிருக்கும்!" என்று பதிலளித்தார் முதல் நபர்.

உடனே அந்தப் பீடி ஆசாமி பதில் சொன்னார்; "அவர் வந்து இத்தனை நாளைக்குள்ளே, எப்படி நல்லா உழைக்கிறார், பார்த்தீங்களா?"

அவரது பாராட்டைக் கேட்டதும் அவர்கள் அனைவரது பேச்சும் மணியைப் பற்றித் திரும்பின.

"அது மட்டுமா? அவர் நம்ம பிரச்சினைகளையெல்லாம் நல்லா விளக்கி வேறே சொல்றாரு."

"பின்னே அவரும் நம்ம மாதிரி ஒரு நெசவாளிக்குப் பிறந்தவர் தானே. அத்தோட அவரு பட்ட கஷ்டங்களே அவருக்குப் பாடம் சொல்லிக் குடுக்குமே. அவர் கதையை நாமளும் தான் கேட்டோமே"

"அதுமட்டுமில்லை. நம்ம ராஜு அவர் விசயத்திலே தனி அக்கறை செலுத்திக் கவனிக்கிறார். ராப்பகலா அவரோட விவாதம் பண்ணி, எல்லா விசயத்தையும் சொல்லிக் குடுக்காருல்லெ!"

சிறிது நேரம் வரையில் அவர்கள் மணியின் திறமையையும் முன்னேற்றத்தையும் பற்றித் தத்தம் அபிப்பிராயங்களைப் பரிமாறிக் கொண்டார்கள்; அதற்குள் பீடியும் தீர்ந்து விட்டதால், பீடி குடித்தவர், ”சரி வாங்க தம்பி, உள்ளே போகலாம்" என்று கூறியவாறு பீடிக் கட்டையைத் தூர எறிந்துவிட்டு உள்ளே நடந்தார்.

உள்ளே அறையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹரிக்கேன் விளக்கைச் சுற்றி, சிலநெசவாளிகளும், மணியும் உட்கார்ந்திருந்தனர், மணியின் முன்பு ஒரு நோட்டுப் புஸ்தகம் விரிக்கப்பட்டுக் கிடந்தது. அந்த ஹரிக்கேன் விளக்கின் ஒளியில், அங்கிருந்தவர்களின் நிழல்கள் பூதாகாரமாய்க் கவரில் விழுந்து கொண்டிருந்தன. காலடி ஓசை கேட்டதும், மணி தான் சொல்லிக் கொண்டிருந்ததை நிறுத்தி விட்டு ஏறிட்டுப் பார்த்தான்.

அந்த நாலைந்து நெசவாளிகளும் உள்ளே வந்து அங்கிருந்தவர்களோடு உட்கார்ந்து கொண்டார்கள்.

இப்பத்தான் வர்ரதா? இவங்க எல்லோரும் எப்போதே. வந்து விட்டார்கள். தெரியுமா?" என்று சிரித்துக்கொண்டே அந்த நெசவாளிகளைக் செல்லமாகக் கண்டித்தான் மணி.

"டீ சாப்பிட்டு வந்தோம். அதுதான்." "அதுமட்டுமில்லை. இவரு பீடியை வேறெ குடிச்சி."

என்று ஒரு நெசவாளி கூறிக் கொண்டே பக்கத்திலிருந்தவரைக் கண்ணைக் காட்டினார்.

பீடி குடித்த அந்த ஆசாமியோ அந்த நெசவாளியின் தொடையில் வெளிக்குத் தெரியாமல், இடித்து, அவர் பேச்சை 'ஸென்ஸார்' பண்ணினார்;

மணி மெல்லச் சிரித்துக் கொண்டான்; பிறகு அவர்களைப் பார்த்து நட்புரிமையோடு பேசத் தொடங்கினான்:

"சரி.நான் கடைசியாக என்ன சொன்னேன்?"

"மந்திரி கைத்தறியை ஆதரிக்கணும்னு சொன்னது பற்றிச் சொன்னீங்க" என்று பதிலளித்தார் ஒரு நெசவாளி.

எண்ணெய் வற்றியதால் கரண்டு கொண்டு போகும் விளக்கொளியைத் தூண்டி வைத்துவிட்டு, மணி கண்களைத் தன் முன்னிருந்த குறிப்புக்களின் பக்கம் திருப்பினான்; குறிப்புக்களை ஒரு முறை பார்த்துவிட்டு, அவர்களை நோக்கிப் பேசத்தொடங்கினான்:

"இன்று ஆட்சியாளர்கள் கைத்தறித் துணியை வாங்கி ஆதரியுங்கள் என்கிறார்கள். ஆனால் ஜனங்கள் கையிலோ குறைந்த விலைக்குக் கிடைக்கும் மில் துணியை வாங்கக் கூடப் பணம் இல்லை. அந்த ஜனங்களைப் பார்த்து, கைத்தறித்துணியை வாங்கு என்று சொல்வது அவர்களைக் கேலி செய்வது போலாகும். இல்லையா?

"ஆனால், நாம் மந்திரியின் பேச்சையும் ஒதுக்கி விடக்கூடாது. அவரது பேச்சைக் கொண்டே நாம் அவர்களை நிர்ப்பந்திக்க வேண்டும். எப்படி? முதலில் சர்க்காரின் துணித் தேவைகளுக்குக் கைத்தறித் துணியை வாங்கும்படி நாம் வற்புறுத்த வேண்டும். போலீஸ், ராணுவம், சிறைவார்டர்கள், சிறைக் கைதிகள் இன்னும் ரயில்வே ஊழியர்கள் தபால் சிப்பந்திகள்; ஆஸ்பத்திரித் தேவைகள் இவற்றுக்கெல்லாம் கைத்தறித் துணியை வாங்கி உபயோகிப்பது என்று சர்க்கார் முடிவு செய்தால், இன்றைய நெருக்கடியை ஓரளவு சமாளிக்க முடியும். ஆனால், அமெரிக்கப் பஞ்சை அதிக விலை கொடுத்து வாங்கி நமது தலையில் கட்டும் இந்த சர்க்கார், இந்த யோசனையை அவ்வளவு லகுவில் ஏற்றுக் கொள்ள முன் வராது. நமது ஒற்றுமையின் மூலம் தான் நாம் இதைச் சாதிக்க வேண்டும்....”

மணி மதுரைக்கு வந்து கிட்டத்தட்ட ஆறுமாதங்கள் கடந்துவிட்டன. அம்பாசமுத்திரத்தில் இருந்தவரை அவன் தனக்குத் தானே உரியதொரு உலகத்தைக் கண்டு வந்தான்; திருச்சி நகரம் அவனுக்கு வேறொரு பிரபஞ்சத்தைக் காணும் வாய்ப்பை அளித்தது; மதுரையோ அவனுக்குப் புதியதொரு பிரபஞ்சத்தை, வாழ்வில் நம்பிக்கையும் உற்சாகமும் ஊறிப் பெருகும் ஒரு உலகத்தை அவனுக்குப் புலப்படுத்தியது.

மதுரை நகரம்..

தொன்று தொட்டுத் தமிழின் பெருமையையும் பரம்பரையையும் தாங்கி நின்ற ஊர் மட்டும் அல்ல, மதுரை. மதுரை மக்கள் தமிழ்க்குலத்தின் கலாசார பரம்பரையையும், வீரத்தையும், தேசபக்திடையும் போற்றிக் காத்து, பற்பல சமயங்களில் , தங்கள் பணியைத் தயங்காது ஆற்றியவர்கள். தேசிய இயக்கப் போராட்டக் காலத்தில் மதுரை மக்கள் பெரும் பணியாற்றிருந்தார்கள். மேலும், வர்க்க போதம் பெற்று ஆலைத் தொழிலாளி மக்கள் தங்கள் உரிமைகளுக்காகப் பல முறை போராட்டத்தில் ஈடுபட்ட பெருமையையும் வீரத்தையும் கண்டறிந்த நகரம் மதுரை. 'நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே!' என்று நிமிர்ந்து நின்று சொன்ன நக்கீரன் பரம்பரையை, போலீஸாரின் சித்திரவதைக் கொட்டடியில் செத்துமடிந்த போதும், போற்றிக் காத்துப் போராடிய வீரர்களைக் கண்ட நகரம் மதுரை, 'இறைமுறை பிழைத்தோன் வாயிலோயே!' என்று அறைகூவி, அரண்மனையின் கட்டும் காவலும் கடந்து, பாண்டிய மன்னனின் நீதிமண்டபத்திலே நிமிர்ந்து நின்று நியாயம் கேட்ட கண்ணகியின் வழி நின்று தமக்காகவும், தங்கள் கணவன், பிள்ளைமார்களுக்காகவும் போர்க்கொடி ஏந்திச் சீறியெழுந்த வீராங்கனைகளைப் பெற்றெடுத்த பெருமையைக் கண்ட மதுரை மாநகரம், தூக்குமேடையிலே ஏறும் போதும், துளிக்கூடக் கண்ணீர் சிந்தாமல் புன்னகையோடு உயிர் நீத்த தியாகிகளைப் பிறப்பித்துத் தந்த ஊர் மதுரை.

அரசியலுணர்வும் தேசபக்தியும் வர்க்க போதமும் நிறைந்து விளங்கும் மதுரை நகரம் மணியின் ஆத்ம சக்தியையும் அறிவையும் விரைவில் பலப்படுத்துவதற்குப் பெரிதும் உதவியது. அவன் மதுரையில் இருந்த காலத்தில் ஹார்வி மில் தொழிலாளர்கள் நடத்திய போராட்டங்களைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது. தொழிலாளர்களின் சேவிங்ஸ் நிதிப் பணத்தை அவர்களுக்குக் கொடுத்துதவ மறுத்து வந்த ஹார்வியை, அந்தத் தொழிலாளர்கள் ஒன்றுபட்டு நின்று ஒரு முகமாகப் போராடி, அந்தப் பணத்தைக் கீழே வைக்கும் படி நிர்ப்பந்தித்து வெற்றி கண்டதையும் அவன் கண்டான். கோடி கோடியாகப்பணம் குவிந்துக் கிடந்தாலும், குசேலப் பிறவிகளான மக்கள் ஒன்றுபட்டுக் கொதித்தெழுந்தால், எந்தக் குபேரன் ஆனாலும் கீழே இறங்கித்தானாக வேண்டும் என்ற உண்மையை அந்தப் போராட்டம் அவனுக்குப் புலப்படுத்தியது.

அது போலவே, அவன் பழகிவந்த நெசவாளர் வட்டாரத்திடையேயிருந்தும், மக்கள் சக்தி என்னும் மகாசக்தி வாய்ந்த ஆயுதத்தின் பலத்தை அவன் இதய பூர்வமாக உணர்ந்தறிய முடிந்தது. மதுரை நகரத்திலுள்ள நெசவாளிகள் ஏற்கெனவே தங்கள் சங்கத்தில் ஒன்றுபட்டு நின்று, உரிமைக்காகப் போராடி வெற்றிகண்ட வீரர்கள் முந்திய காலங்களில் நூலுக்குப் பஞ்சம் ஏற்பட்ட போதும், கள்ள மார்க்கெட் மலிந்திருந்த போதும், அவர்கள் நூல் ரேஷனுக்காகவும், நூல் ரேஷன் கார்டுக்காகவும் போராட்டம் நடத்தி, வெற்றி கண்ட மக்கள், வர்க்க பலத்தின் ஒருமித்த சக்தியின் வலிமையை அனுபவ பூர்வமாகக் கண்டறிந்தவர்கள் அந்த நெசவாளிகள். சங்கத்தின் கொடியின் கீழ் ஒன்று திரண்டு நின்று, நெசவாளர்களின் பிரச்னைகளுக்காகப் பாடுபடுவதை அவன் நேரில் கண்டான்; ஊர்வலங்களிலும் கூட்டங்களிலும் அவர்கள் பங்கெடுத்துப் பணியாற்றும் உற்சாகம் மணிக்கு ஊக்கத்தைக் கொடுத்தது. அந்த நெசவாளர்கள் தாங்கள் பட்டினி கிடக்க நேர்ந்த போதும், சங்கத்திற்குத் தம்மாலியன்ற உதவி அளிக்க முன்வந்ததியாக புத்தியையும் சங்க உணர்வையும் அவன் அனுபவ பூர்வமாகக் கண்டறிந்தான்.

இவை மட்டும் அல்லாமல், ராஜுவின் கூட்டுறவும், அரசியல் ஞானமும் மணியைப் பெரிதும் வளர்த்து விட்டன; ராஜுவிடம் அவன் பற்பல நற்பண்புகளைக் கண்டான்; அவரது அன்பும் ஆதரவும் அவனைப் பெரிதும் ஆகர்ஷித்தன; அவரைத் தன் சகோதரர் போலவே மணி நேசித்தான். தன் இருண்ட கண்களைத் திறந்து உலகத்தின் உண்மையொளியைக் காட்டிய குருவாக அவரை மதித்தான். அவர் அவனோடு துன்ப துயரங்களைப் பங்கிட்டுக் கொண்டார்; வேலைகளைப் பங்கிட்டுக் கொண்டார். அவன் சிறு குழந்தை போல் தெரியாத்தனமாகக் கேட்கும் சிறு சந்தேகங்களையும்கூட, அவர் தெளிவிக்க முன் வந்தார். ராஜுவும் மணியும் சங்க வேலைகளை முடித்து விட்டு, சமயங்களில் இரவுபூராவும் உட்கார்ந்து விவாதிப்பார்கள்; மணி அவரிடம் எதையும் மறைக்க விரும்பவில்லை அவனுக்கே அவரிடம் தனது அந்தரங்கங்களை யெல்லாம் சொல்லிவிட வேண்டும் போலிருந்தது. அவன் அவரிடம் தன் கடந்த கால வாழ்வின் கோரங்களைப் பற்றி இழி தன்மைகளைப் பற்றிச் சொன்னான் பள்ளி வாழ்வில் தான் கனவு கண்ட சொப்பன வாழ்க்கையைப் பற்றிச் சொன்னான், தன் நண்பன் சங்கரைப்பற்றி, தாயைப்பற்றி, கமலாவைப் பற்றியெல்லாம் சொன்னான்; தன் காதலையும் கூட, அவன் அவரிடம் தெரிவித்தான். கடந்த ஆறு மாத காலத்தில் அவர் தன்னை ஒரு சிறந்த லட்சியத்துக்காகப் பாடுபடும் பணியில் இழுத்து விட்டதை என்ணியெண்ணி அவன் பூரித்தான்.

அன்றிரவு மணி தன்னந்தனியாக இருந்து ஒரு புத்தகத்தை எடுத்துப் படித்துக் கொண்டிருந்தான். எண்ணெய் வற்றி இரட்டைத் திரி போட்டு விகாரமாக எரிந்து கொண்டிருந்த விளக்கொளியில் அவன் அந்தப் புத்தகத்தை ஆர்வத்தோடு படித்துக் கொண்டிருந்தான். ஆனால் அந்த இதயமற்ற விளக்கின் சுடர் திடீரென்று துள்ளித் துள்ளிக் குதித்து விட்டு, தன் உயிரை விடுத்து அணைந்தது. மணி புத்தகத்தை மூடிவைத்து விட்டு, வெளி வராந்தாவில் வந்து திண்ணையில் படுத்து, தன் சிந்தனையைத் திரியவிட்டான்.

'மணியும் பன்னிரண்டாகப் போகிறது. இன்னும் ராஜுவைக் காணோமே! ஏன் இவ்வளவு நேரம்? எப்படியும் படுக்க வந்து விடுவார்.ராஜூ! அவருக்கு நான் எவ்வளவு கடமைப்பட்டவன்? என்னை மனிதனாக்கியவரல்லவா அவர்? அன்று ஆஸ்பத்திரியில் கிடந்த போது சங்கர் என்னிடம் என்னென்னவோ சொன்னான், அந்த வார்த்தைகள் எனக்குப் புதிராக இருந்தன, சொப்பன வாழ்வு வாழ்ந்து கொண்டிருப்பவனுக்கு, பிரத்தியட்ச உண்மைகள் எப்படிப் புரியும்? புரியாதுதான். ஆனால், நான் பிரத்தியட்ச வாழ்வின் குரூர வசீகரங்களை நேரில் அனுபவ பூர்வமாக அறிந்த போதோ? அந்த வாழ்க்கையும் எனக்குப் புதிராகவேதான் இருந்த்து! வாழ்வின் சிரமங்களையும், சிக்கல்களையும் என் மனத்தின் சொப்பனக் கருத்துக்களைக் கொண்டுதானே அளவிட முயன்றேன்!வாழ்வின் ரகசியங்களை அளந்தறிய முடியாது தவித்துத் தெருவில் நின்ற என் கண்களைத் திறந்து விட்டவரல்லவா, ராஜு பிரத்தியட்ச வாழ்வை, பிரத்தியட்ச உண்மைகளைக் கொண்டுதான் அளவிட. வேண்டும் என்று எனக்கு உணர்த்திய ஞானாசிரியரல்லவா ராஜு

அர்த்த சாம இருளின் அந்தகாரத்திலே வாழ்வின் ரகசியங்களைப் பற்றிய தத்துவ விசாரத்தில் ஈடுபட்டு, தன்னை மறந்திருந்தான் மணி.

"மணி, மணி!" என்று திடீர்க் குரல் கேட்டு விழித்தெழுந்தான் அவன்.

எதிரே ராஜு நின்றுகொண்டிருந்தார்.

"என்னமணி, அதற்குள்ளே தூங்கியாச்சா?"

"இல்லை, ராஜு உங்களைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்."

"சரி, தூக்கம் வந்தால் தூங்குங்கள். நாளை முதல் நமக்கு இரண்டு மூன்று நாளைக்கு ஓயாத வேலையிருக்கிறது."

"என்ன வேலை? புதிதாக ஏதாவது பிரச்னை கிளம்பி யிருக்கிறதா?"

"ஒன்றுமில்லை. சேலம், சின்னாளப்பட்டி முதலிய ஊர்களிலிருந்து சென்னைக்கு நெசவாளர்கள் புறப்பட்டுச் செல்கிறார்களல்லவா? - அதுபோல், நமது ஊர்ப் பக்கமிருந்தும் நெசவாளர்கள் புறப்பட்டு வருகிறார்கள். சீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை முதலிய ஊர்ளிலிருந்து நெசவாளர் பட்டினிப் பட்டாளம் புறப்பட்டு வருகிறது. அவர்களை வரவேற்று உபசரித்து அவர்களுக்கு ஆதரவு திரட்டி வழியனுப்பி வைக்க வேண்டாமா? இன்னும் இரண்டு நாட்களில் அவர்கள் இங்கு வந்து விடுவார்கள். அதற்குள் நாம் சகல ஏற்பாடுகளும் செய்யவேண்டும். சரி, தூங்குங்கள்; விடிந்ததும் யோசிப்போம்" என்று கூறிவிட்டு, உள்ளே படுக்கச் சென்றார் ராஜு.

பட்டினிப் பட்டாளம்.

மணியின் மனத்தில் அந்த ஒரு விஷயம் மட்டும் அழுத்தமாகப் பதிந்துவிட்டது.

‘மக்கள் தங்கள் பட்டினியை, ஊரழிய, உலகறியப் பறைசாற்றிக் கொண்டு பட்டாளமாகத் திரண்டு வருவதென்றால், அவர்கள் நிலைமை எவ்வளவு மோசமாக போயிருக்க வேண்டும்? பட்டாளமாகத் திரண்டு தங்கள் பட்டினிக்கு விமோசனம் தேட முன்வரும் அந்த மக்களுக்குத் தான் என்ன நம்பிக்கை என்ன உறுதி'

மணி அந்தப் பட்டாளத்தினரை அப்போதே பார்த்து விட வேண்டும் என்று எண்ணினான். அந்தப் பட்டாளத்தினரை விரைவில் சந்திக்க வேண்டும் என்ற ஆர்வம் அவன் இதயத்தில் மிஞ்சி வளர்ந்தது.

'பட்டினிப் பட்டாளம், பட்டினிப் பட்டாளம்_'

மணி அதே நினைவாகத் தன் கண்களை மூடினான்; அன்றிரவு அவனுக்கு நிம்மதியான தூக்கமே கிட்டவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பஞ்சும்_பசியும்/022-028&oldid=1684087" இலிருந்து மீள்விக்கப்பட்டது