25

'கமலா! கமலா?'

மங்கள பவனத்தின் கேட்டைத் தாண்டிச் சென்று வீட்டை நெருங்குவதற்குள்ளாகவே சங்கருக்கு ஆத்திரம் பொறுக்கவில்லை. பொதுக் கூட்டம் முடிந்ததுமே அங்கு ஒரு கணம்கூடத் தாமதிக்காமல், கமலாவிடம் மணியின் வரவைத் தெரிவிக்க வேண்டும் என்ற பரபரப்போடும் ஆனந்தத்தோடும் அவன் உடனே புறப்பட்டு வந்து விட்டான்.

அவன் மனம் அன்றைய மாலை நிகழ்ச்சிகளின் அதிசயத்தையும் அற்புதத்தையும் எண்ணியெண்ணி ஆனந்தக் கூத்தாடிக் கொண்டிருந்தது. எல்லாம் நம்ப முடியாத விந்தைகளைப் போல், அவனைப் பிரமிக்க வத்தன. எண்ணி எண்ணிப் பரவசமடைவதற்கு அவன் மனத்தில் எத்தனையோ விஷயங்கள் இருந்தன. ஒன்றா, இரண்டா ?

மணி திரும்பி வந்துவிட்டான்; திரும்பி வந்ததோடு மட்டுமல்ல, தேசத்துக்காகப் பாடுபடும் ஞானத்தைப் பெற்றுத் திரும்பி விட்டான். கமலாவுக்கோ காணாமற்போன காதலன் கிடைத்துவிட்டான். அது மட்டுமா? அந்த காதலன் அவளுக்கு ஏற்ற கணவனாகவும் திரும்பி வந்துவிட்டான். இருளப்பக் கோனாரும் அவர் மனைவியும் பத்து வருஷங்களுக்குப் பிறகு தங்கள் மகனைக் கண்டுவிட்டார்கள். தங்கம்மா அத்தையின் கண்ணீரைத்துடைக்க அவள் மகனும் வந்துவிட்டான். சிந்திச் சிதறிக் கிடந்த நெசவாளி மக்களும் ஒன்று திரண்டுவிட்டார்கள்: திரண்டதோடு மட்டுமல்லாமல், நாளைக் காலையில் தங்கள் அறப்போரையும் தொடங்கப் போகிறார்கள்.....

சங்கரின் மனம் வெற்றிக் களிப்பால் துள்ளித் திரிந்தது!

"கமலா, கமலா!"

வீட்டு நடையேறி உள்ளே சென்றதும் மீண்டும் அவளைக் குரல் கொடுத்துக் கூப்பிட்டான்; அவன் முகத்திலும், நடையிலும், குரலிலும் அவனது மனத்தின் குதுகலம் குடி கொண்டு பிரதிபலித்தது.

அறையை விட்டு வெளியே வந்த கமலா தன் அண்ணனின் துறுதுறுப்பையும் உற்சாகத்தையும் கண்டாள். அவன் பொதுக் கூட்டத்துக்குப் போயிருந்த செய்தி நினைவு வந்ததும், "என்னண்ணா ? கூட்டம் முடிந்ததா?" என்று ஆவலோடு கேட்டாள்.

“பிரமாத வெற்றி கமலா!" என்றான் சங்கர்.

"அதுதான் உனக்கு இத்தனைகொண்டாட்டமா?"

"கொண்டாட்டம் எனக்கில்லை. உனக்குத்தான்!"

என்று அர்த்தபாவம் நிறைந்த குறும்போடு பேசினான் சங்கர்.

"என்னண்ணா ?புதிர்போடுகிறாய்?"

கமலா விழித்தாள். "திடுக்கிட்டு விடமாட்டாயே" என்று எச்சரித்து விட்டு, "கமலா, மணி வந்துவிட்டான்" என்று குதூகலத்தோடு சொன்னான் சங்கர்.

"அத்தானா?"

கமலா திடுக்கிடத்தான் செய்தாள்.

அதற்குள் அங்கே வந்து சேர்ந்த தர்மாம்பாள் சங்கர் சொன்ன கடைசி வாக்கியத்தைக் கேட்டுவிட்டு, "என்னடா சங்கர்? இப்போ என்ன சொல்லிக்கிட்டிருந்தே!" என்று ஆவலோடும் சந்தேகாஸ்பதமாகவும் கேட்டாள்.

"அம்மா, அத்தான் வந்திட்டுதாம்!” என்று சொல்லிப் பூரித்தாள் கமலா.

"அப்படியா?" என்று வியந்தாள் தர்மாம்பாள்.அவள் மனத்தில் மணியின் நினைவால் கமலா வாடி மெலிந்ததும், கமலாவின் அப்பா அவள் கல்யாணத்துக்குச் சம்மதம் தராததும்,கமலா மணியைத்தான் மணப்பேன் என்று வீம்பு பிடித்ததும், அந்தப் பையன் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போனதும், ஒரே வீச்சில் ஞாபகம் வந்தன. தர்மாம்பாள் அதையெல்லாம் எண்ணி ஆழ்ந்த பெருமூச்செறிந்தவாறே. "என்ன சங்கர்? நிசமாத்தானா சொல்றே?" என்று கேட்டாள்.

"ஆமாம்மா; மணி மட்டும் வரலை; இருளப்பக் கோனாருடைய காணாமற் போன மகனும்கூட வந்தாச்சு!” என்று கூறினான் சங்கர்.

"இதென்னடா இது? சொல்லி வச்சமாதிரி ரெண்டு பேரும் என்னமா வந்து சேர்ந்தாங்க?" என்று அதிசயித்தாள் தர்மாம்பாள்.

"ரெண்டு பேரும் ஒண்ணாத்தாம்மா வந்தாங்க" என்றான் சங்கர்.

அதற்குள் கமலா பொறுமையை இழந்தவளாக "அண்ணா, அத்தானை எங்கே?" என்று கேட்டாள். "மணி இருளப்பக் கோனார் வீட்டுக்குத்தான் போயிருக்கான். வர்ரயா? போய்ப் பார்த்துட்டு வரலாம்" என்று வாஞ்சையோடு அழைத்தான் சங்கர்.

அதைக் கேட்டதும் தர்மாம்பாள் குறுக்கிட்டாள். ”என்னடா சங்கர்? இந்த ராத்திரியிலே போகாட்டா என்ன? விடிஞ்சி போகக்கூடாதா? அப்பாவுக்கு வேற பயமாயிருக்கு" என்று அங்கலாய்த்தாள்.

கமலாவுக்கு, மணி வந்துவிட்டான் என்ற சொல் காதில் விழுந்ததிலிருந்து புதியதொரு உற்சாகமும் ஊக்கமும் தெம்பும் பிறந்துவிட்டது போல் தோன்றியது. வெட்ட வெளியாகக் கிடந்த அவளது மன அரங்கில் திடீரென்று கோடானு கோடி மலர்கள் பூத்துச் சொரிந்து நறுமணம் பரப்புவது போல், இருளடைந்திருந்த வாழ்வில் திடீரென்று ஒரு தேஜோமய ஜோதி தோன்றிவிட்டது போல், அவள் உணர்ந்தாள். மணியின் பெயர் அவளது பலவீனத்தையெல்லாம் போக்கிவிட்டதுபோல் தோன்றியது. அந்தக் கணம் முதற்கொண்டு நிலைகொள்ளாமல் துறுதுறுத்து நின்றாள் கமலா.

தன் தாய் குறுக்கிட்டுத் தடுத்தவுடன், கமலா தாயைப் பார்த்து பரிதாபகரமாகக் கேட்டாள்: "அம்மா, நான் இப்பவே போயிட்டு வந்திடுறனே!"

"ஆமாம்மா. காரிலேயே போயிட்டு, உடனே திரும்பிவிடுகிறோம். மணியைக் கண்ணாலே பார்த்தாலொழிய இவள் என்னை நம்பமாட்டாள்!" என்று தங்கைக்கு வக்காலத்து வாங்கினான் சங்கர்.

"சரிடாப்பா. ஜாக்கிரதையாப் போயிட்டு, சீக்கிரமே திரும்பி வந்திருங்க" என்று கூறி அவர்களை வழியனுப்பி வைத்தாள் தாய்.

சங்கரும் கமலாவும் மறுகணமே அங்கு நிற்காமல் ஓடோடிச் சென்று காரில் ஏறி அமர்ந்தார்கள்; கார் கேட்டைக் கடந்து செல்லும்வரை அங்கேயே நின்று கொண்டிருந்துவிட்டு, "என்னமோ அவனும் திரும்பி வந்துவிட்டான். ஆனால், தெய்வம் இந்தப் பொண்ணைச் சோதிக்காமல் இருக்கணுமே!" என்று தனக்குத்தானே சொல்லிப் பெருமூச்சொறிந்தாள் தர்மாம்பாள். அதன்பின் அவள் வீட்டுக்குள் சென்று, தன் பிள்ளைகள் எப்போது வந்து சேருமோ என்ற கவலையோடு படுக்கையில் படுத்து விழித்துக் கொண்டிருந்தாள்.

சிறிது நேரத்தில் திடீரென்று வாசற்புறத்தில் தாதுலிங்க முதலியாரின் பியூக் கார் பயங்கரமாக உறுமிவிட்டு நிற்கும் சப்தம் கேட்டுத் திடுக்கிட்டு எழுந்தாள், தர்மாம்பாள். அவள் எதிர்பார்த்துப் பயந்தது போலவே, காரின் கதவைக் கோபத்துடன் படாரென்று அறைந்து சாத்திவிட்டு உள்ளே வந்தார் தாதுலிங்க முதலியார்.

அவர் வந்ததும் வராததுமாய்ப் படபடப்புடனும் கோபாவேசத்துடனும் தமது அங்கவஸ்திரத்தை எடுத்து ஒரு நாற்காலி மீது விட்டெறிந்தார். ஓரிடத்திலும் நிலை கொள்ளாமல் மேலும் கீழும் பரபரவென்று நடந்தார்.

உள்ளேயிருந்தவாறே கணவனின் படபடப்பை உணர்ந்தறிந்து கொண்டாள் தர்மாம்மாள். ஒரு வேளை மணி வந்த விஷயம் தன் கணவருக்குத் தெரிந்திருக்குமோ? தெரிந்தாலும் தான் ஏன் இந்தப் படபடப்பு? சங்கரும் கமலாவும் அங்கு போனது தெரிந்திருக்குமோ?. இருக்காது. தெரிந்திருந்தால்? என்னமோ தெரியலியே! அவள் மனம் என்னென்னவோ எண்ணி அலைக்கழிந்தது. கடைசியில் அவள் தன் கணவனின் கோபத்துக்கு முன் நிற்கப் பயந்தவளாகவும், அதன் காரணத்தை அறிந்து கொள்ளத் துடித்தவளாகவும், மெதுவாக வெளியே வந்து எட்டிப் பார்த்தாள், -

கண்களில் ஆக்ரோஷமும் கோபமும் பொத்துக் கொப்புளிக்க, கைகளை இறுகப் பிசைந்தவாறு மேலும் கீழும் நிலையற்று நடந்து கொண்டிருந்தார் தாதுலிங்க முதலியார்.

'தர்மாம்மாள் அவரருகே மெதுவாகச் சென்று நின்றவாறே, "என்ன விஷயம்? என்ன நடந்தது?" என்று மெல்லக் கேட்டாள்.

தாதுலிங்க முதலியாரின் முகம் குபீரென்று சிவந்து கனன்றது; உதடுகள் கோபாவேசத்தால் படபடத்துத் துடித்தன.

"என்ன நடந்ததா? அந்தப் பயல் மணி வந்து சேர்ந்துட்டானாம். அவன் வீட்டிலே வேலை பார்த்தானே, அந்தக் கோனார் மகன், அந்தப் போக்கறுவானும் வந்துட்டானாம். இந்த ரெண்டு பயலுகளுமாச் சேர்ந்து கிட்டு, கூட்டத்திலே, 'பப்ளிக்' மேடையிலே, என்னைத் தாறுமாறா, கிழி கிழின்னு கிழிச்சிருக்கானுக. இந்தக் கூட்டத்துக்கு நம்ம வீட்டுக் கொள்ளி தலைமை வகிச்சிதாம்! இப்பத்தான் அந்தச் சுப்பையா வந்து எங்கிட்ட சொல்லிட்டுப் போனான்!" என்று அனல் கக்கும் குரலில் சீறிப்பொருமினார் தாதுலிங்க முதலியார்.

"இதுக்குத்தானா? என்னமோ சின்னப் புள்ளைக_" என்று கூறித் தன் கணவனைச் சமாதானப்படுத்த முனைந்தாள் தர்மாம்பாள்.

"என்ன சொன்னே? சின்னப் புள்ளைகளா? நினைச்சா நெஞ்சுகொதிக்குது! இந்தத் தறுதலைப் பயலுக்குக் கொண்டு போய் உன் மகளைக் கட்டிக் குடுக்கணும்னு தாயும் பிள்ளையும் ஒண்ணு சேர்ந்து பேசினீங்க! எனக்குன்னு வந்து பிறந்தானே, அந்தத் துடைகாலி சங்கர் அவனை என்ன பண்ணினாத் தேவலை. "தாதுலிங்க முதலியார் தம் மகனை எண்ணித் தமக்குத் தாமே பொருமிவிட்டு, மனைவியிடம் திரும்பிக் கேட்டார்.

"சங்கரை எங்கே? அவன் இன்னம் வரலியா?" தர்மாம்பாள் இன்ன பதில் சொல்வதென்று! தெரியாமல் திகைத்தாள்.

அதற்குள் தாதுலிங்க முதலியாரிடமிருந்து அடுத்த பயங்கரமான கேள்வியும் வந்துவிட்டது: "மேலாகலை எங்கே?"

தர்மாம்பாள் கையும் மெய்யுமாகப் பிடிப்பட்ட திருடனைப்போல் தவித்தாள். ஏதாவது கூறிச் சமாளிக்கலாம் என்றாலும், தன் கணவனின் கோபாவேசத்தின் முன்னிலையில் அவளது சிந்தனை சிறிதுகூட அசைந்து கொடுக்கவில்லை.

"கமலா..கமலா." என்று தன்னையும் அறியாமல் மீண்டும் மீண்டும் முனகினாள் தர்மாம்பாள்,

தாதுலிங்க முதலியாரின் கோபாவேசமான கண்களில் திடீரென்று சந்தேக ரேகை படர்ந்தது; அந்த ரேகை படர்ந்ததுமே அவர் குரல் இடி முழக்கம்போல் எழும்பியது.

"என்ன முழுங்கிறே? எங்கே கமலா? சொல்லு சீக்கிரம்?"

அவரது உதடுகளும் முகமும் வக்கிர கதி பெற்றுத் துடிப்பது போலிருந்தன.

தர்மாம்பாள் தன் கணவனின் கோபத்தைத் தாங்கி நிற்க முடியவில்லை, அவள் உண்மையைச் சொல்லிவிட்டாள்!

அதைக் கேட்டதும், தாதுலிங்க முதலியாரின் கை தம்மையறியாமல் பளீரென்று தர்மாம்பாளின் கன்னத்தில் அறைந்தது; அவரது கண்கள் வெளியே துள்ளிக் குதிக்கப் - போவது போல் சிவந்து கனன்று கோபத்தைக் கக்கின.

"அவ்வளவு தூரத்துக்கு வந்துட்டுதா? நீயும் இருந்துதானா, இந்தத் தேவடியாத்தனம் பண்ணினே?" என்று சீறி விழுந்தார் தாதுலிங்கமுதலியார்.

ஆனால், தர்மாம்பாளோ அடிப்பட்ட கன்னத்தைத் தடவிக் கொடுத்தவாறே, மௌனமாகக் கண்ணீர் சிந்தி நின்றாள்; அவள் தொண்டையிலிருந்து ஒரு விக்கல் கூட எழவில்லை

மறுகணமே தாதுலிங்க முதலியார் வீட்டுக்குள் வந்த அதே வேகத்தில் வெளியே பாய்ந்து சென்றார்; சிறிது நேரத்தில் வாசலில் நின்று கொண்டிருந்த கார் சிம்ம கர்ஜனை செய்வதுபோல் உறுமிவிட்டு, கேட்டைக் கடந்து பறந்து சென்றது.

கார் சென்று மறைந்த மறுகணமே தர்மாம்பாளின் உள்ளத்தில் முட்டி மோதி வெளிவரத் தவித்துக் கொண்டிருந்த அழுகையும் கண்ணீரும் குபீரென்று மதகுடைத்துப் பாய்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பஞ்சும்_பசியும்/025-028&oldid=1684075" இலிருந்து மீள்விக்கப்பட்டது