27

"வேலை அல்லது நிவாரணம்!"

"நூல்கொடு அல்லது சோறு கொடு!"

"மக்கள் வயிற்றில் அடிக்காதே!"

மறுநாள் காலையில் அம்பை நெசவாளர் சங்க நெசவாளர்களில் சுமார் ஐம்பது பேர் தமது கோஷங்களைக் கோஷித்துக் கொண்டு, அம்பாசமுத்திரத்தின் முக்கிய வீதிகளையெல்லாம் சுற்றிவந்து, தாலுகாக் கச்சேரியை நோக்கி ஊர்வலமாகச் சென்றார்கள். அந்த ஊர்வலத்தின் முன்னணியில் வடிவேலு முதலியார் தங்கள் உரிமைப் போருக்காக உயர்த்திய கொடியை விண்ணளாவப் பறக்க விட்டுக் கொண்டு, மகிழ்ச்சியும் உறுதியும் துலங்கும் முகத்தோடு சென்று கொண்டிருந்தார். அவருக்குப் பின்னால் ராஜு, மணி, சங்கர், கமலா முதலியவர்களும் அணிவகுத்துச் சென்றார்கள்: - அந்த ஊர்வலத்துக்கு ஆதரவாக, பல தெருக்களிலிருந்து மக்கள் வந்து குழுமி, ஊர்வலத்தோடு செல்லத் தொடங்கினார்கள்.

பல்வேறு சிற்றாறுகளைத் தன்பால் இழுத்துச் சேர்த்து, மகாப் பிரவாகமாய்ப் பரிணமித்துச் செல்லும் ஜீவநதியைப் போல், அந்த ஊர்வலம் சுனாத்துக்குக் கணம் பலம் பெற்று விரிவடைந்து கொண்டேயிருந்தது.


முற்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பஞ்சும்_பசியும்/027-028&oldid=1684069" இலிருந்து மீள்விக்கப்பட்டது