பஞ்ச தந்திரக் கதைகள்/ஆப்புப் பிடுங்கிய குரங்கு
பழைய ஊர் ஒன்றில் ஒரு கோயில் இருந்தது. கோயில் திருப்பணிக்காக மரங்களை அறுத்துக் கொண்டு வந்து போட்டிருந்தார்கள். அந்த மரங்களின் ஒன்றை இரண்டாக அறுத்துக் கொண்டிருந்த தச்சன், பாதி அறுத்தபின் அறுத்த பிளவிலே ஆப்புவைத்துவிட்டு, மீதியை அறுக்காமல் சென்று விட்டான். கோயிலையடுத்திருந்த மாதுளை மரச் சோலையில் பல குரங்குகள் இருந்தன. அந்தக்
குரங்குகளில் சில, தாவி விளையாடிக் கொண்டே மரம் அறுத்துக் கிடந்த இடத்திற்கு வந்து சேர்ந்தன. அவற்றில் ஒரு குரங்கு பாதி பிளந்து கிடந்த மரத்தின் மேல் வந்து உட்கார்ந்தது. அது சும்மாயிருக்காமல், அந்த மரப்பிளவில் வைத்திருந்த ஆப்பைஅசைத்து அசைத்துப் பிடுங்கியது. ஆப்பைப் பிடுங்கியவுடன், பிளந்திருந்த மரத்தின் இரு பகுதிகளும் நெருங்கின. அவற்றிற் கிடையிலே மாட்டிக் கொண்ட அந்தக் குரங்கு உடல் நசுங்கி உயிர் விட்டது.
ஆகையால் தனக்குத் தொடர்பில்லாத ஒரு காரியத்தில் தலையிடக்கூடாது.