பஞ்ச தந்திரக் கதைகள்/இரகசியத்தை வெளியிட்டழிந்த பாம்புகள்

8. இரகசியத்தை வெளியிட்டழிந்த பாம்புகள்

ஓர் இளவரசன் இருந்தான். அவனைப் பல நாட்களாக வயிற்று நோய் வாட்டிக் கொண்டிருந்தது. எத்தனை மருத்துவம் செய்தும் அவனுடைய வயிற்று நோய் தீரவில்லை. உடல் மெலிந்து கொண்டே வந்தது. இந்த நோய் தீருவதற்கு எந்த வழியும் காணாத அவன், கடவுளைத் தொழுது தலயாத்திரை செய்தாலாவது தீருமா என்று ஊர் ஊராகச் சென்று கொண்டிருந்தான்.

ஒர் ஊரில் உள்ள கோயிலில் அவன் சில நாட்கள் தங்கி அங்கிருந்த கடவுளை நாள்தோறும் வழிபட்டுக் கொண்டிருந்தான்.

அந்த ஊர் அரசனுக்கு இரண்டு பெண்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருத்தியை அரசனுக்குப் பிடிக்காது. ஆகவே, அவளை எவனாவது ஒரு நோயாளிக்குக் கட்டிக் கொடுத்துவிட வேண்டு மென்று எண்ணினான். கோயிலில் தங்கியிருந்த நோயாளிப் பையனைக் கண்டதும், அவனுக்கே தன்மகளை மணம் செய்து கொடுத்து விட்டான்.

அரசன் வெறுப்புக்காளான அந்த இளவரசி நல்ல குணமுடையவள். அவள் தன் கணவன் ஒரு நோயாளி என்று தெரிந்திருந்தும் அவனையே தெய்வமாக எண்ணி, அவனுக்குப் பணிவிடைகளைச் செய்து கொண்டிருந்தாள். அவன் தலயாத்திரை சென்ற ஊர்களுக்கெல்லாம் அவளும் கூடவே சென்று உதவி புரிந்தாள்.

ஒரு நாள் வேற்றூர் ஒன்றுக்கு அவர்கள் வந்து சேர்ந்தார்கள். ஓரிடத்தில் அவள் கணவனை இருக்கச் செய்து அவள் சமையலுக்கு அரிசி முதலியவை வாங்குவதற்காக ஊருக்குளளே கடைத் தெருவைத் தேடிப் போனாள். அவள் சென்ற பின நடைக்களைப் பால் சோர்ந்திருந்த இளவரசன் தூங்கத் தொடங்கி விட்டான்.

அவன் உறங்கிக் கொண்டிருந்த சமயத்தில், அந்தப் பக்கமாகப் போன பாம்பு சத்தமிட்டது. அந்தச் சத்தத்தைக் கேட்டதும் அவன் வயிற்று நோய்க்குக் காரணமாக அவன் வயிற்றுக்குள் இருந்த பாம்பும் சத்தமிட்டது. உடனே அவை ஒன்றுக் கொன்று பேசிக் கொள்ளத் தொடங்கின. முதலில் சாதாரணமாகப் பேசிக் கொண்ட அந்தப் பாம்புகள் கடைசியில் கருத்து வேற்றுமை ஏற்பட்டுச் சச்சரவு செய்து கொளளத் தொடங்கின. இந்தச் சமயத்தில் அரிசி வாங்கப்போன இளவரசி அங்கு திரும்பி விட்டாள். பாம்புகள் விவாதம் புரிவதைக் கண்ட அவள் அப்படியே ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டு அவை பேசுவதைக் கூர்ந்து கவனித்தாள்.

வெளியில் இருந்த பாம்பு இளவரசன் வயிற்றில் இருந்த பாம்பைப் பார்த்து, 'ஏ பாம்பே, ஏன் இளவரசனுடைய வயிற்றில் போய் இருந்து கொண்டு அவனை இம்சைப் படுத்துகிறாய்?’ என்று கேட்டது.

'உணவுக் குறையில்லாத இவனுடைய வயிறாகிய குடத்தில் நான் இருப்பது உனக்குப் பொறாமையாக இருக்கிறதா, ஏன் என்னை நிந்திக் கிறாய்?’ என்று வயிற்றுப் பாம்பு கேட்டது.

'உன் மீது எனக்கேன் பொறாமை வருகிறது. என்றாவது இளவரசன் கடுகுதின்றால் நீ செத்தொழிய வேண்டியதுதானே' என்று புற்றுப் பாம்பு கூறியது.

‘நீ மட்டும் என்னவாம்? யாராவது வெந்நீரை ஊற்றினால் சூடு பொறுக்காமல் சாக வேண்டியது தானே?’ என்று வயிற்றுப் பாம்பு கூறியது.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த இளவரசி அவற்றின் சண்டை தீர்ந்து அவை பிரிந்த பிறகு தன் மறைவிடத்திலிருந்து வெளியே வந்தாள். தன் சமையலுக்கு வாங்கி வைத்திருந்த கடுகை எடுத்து அரைத்து இளவரசனுக்குக் கொடுத்தாள். அவன் கடுகை உண்டதும், வயிற்றுக்குள் இருந்த பாம்பு செத்து விட்டது. அவன் வயிற்று நோயும் தீர்ந்தது. தான் இரகசியத்தைத் தெரிந்து கொண்டதை யறிந்தால் புற்றுப் பாம்பு என்ன செய்யுமோ என்று பயந்த இளவரசி, வெந்நீரைக் காய்ச்சிப் பாம்புப்புற்றிலே ஊற்றினாள். புற்றுப் பாம்பும் செத்தது. வயிற்று நோய் தீர்ந்த இளவரசன் தன் ஊருக்குத் திரும்பி இளவரசியோடு இன்பமாக இருந்து தன் நாட்டை ஆண்டு வந்தான்.

தன் இரகசியம் யாரும் அறியும்படி பேசக்கூடாது.