பஞ்ச தந்திரக் கதைகள்/உதவி செய்த கள்ளன்
ஓர் ஊரில் ஒரு கோமுட்டி இருந்தான். அவன் சுருங்கிய தசையும், நடுங்கிய உடலும், ஒரக் கண்ணும் உடைய கிழவன். அவன் மனைவி ரதியைப் போல் அழகானவள். அவள் கிழவனிடம் பிரிய மில்லாமல் இருந்தாள். அவனிடம் நெருங்குவதே கிடையாது. கிழவனும் அவள் பிரியத்தை அடைய வழி தெரியாமல் துயரத்தோடு இருந்து வந்தான்.
ஒரு நாள் அவர்கள் வீட்டிற்கு இரவு வேளையில் ஒரு கள்ளன் வந்தான். கத்தியும் கையுமாக பயங்கரமான தோற்றத்தோடு அங்கு வந்த அத்தக் கள்ளனைக் கண்டவுடன் அந்தப் பெண் பயந்து போய்ததன் கணவனான கிழவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள்.
அவள் தன்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டவுடன் கிழவனுக்கு ஆனந்தம் உண்டாகி விட்டது. அவன் திருட வந்த கள்ளனைப் பார்த்து, அப்பா, நல்ல காரியம் செய்தாய்! இது வரை என் அருகில் வரக்கூடப் பிரியமில்லாமல் இருந்த என் மனைவி என்னைக் கட்டிப் பிடித்துக் கொள்ளும்படி நீ செய்து விட்டாய். உன் உதவியை நான் என்றும் மறக்க முடியாது.
‘இந்தா பெட்டிச்சாவி, வேண்டிய அளவு பணம் எடுத்துக் கொண்டு போ’ என்று சொன்னான்.
இதைக் கேட்ட கள்ளனுக்கு மனம் மாறி விட்டது. தன்னால் ஒரு குடும்பத்தில் ஒற்றுமை ஏற்பட்டது என்ற நினைப்பே அவனுக்குப் பெரு மகிழ்ச்சியைக் கொடுத்தது. அவன் கோமுட்டிக் கிழவனைப் பார்த்து ஐயா, உம் மனைவி உம்மைச் சேர்ந்ததே, எனக்கு பெரும் செல்வம் கிடைத்தது போலிருக்கிறது. ஆகையால் எனக்கு உம்முடைய செல்வம் வேண்டாம். நீங்கள் என்றும் ஒற்றுமையாக இன்பமாக இருந்தால் அதுவே போதும். இவள் உங்களிடம் பிரியமில்லாமல் ஒதுங்கியிருந்தால் நான் மறுபடியும் வருகிறேன்’ என்று சொல்லி விட்டுப் போனான்.
தான் ஒதுங்கியிருந்தால் மறுபடியும் கள்ளன் வந்து விடுவான் என்ற பயத்திலேயே அன்று முதல் என்றும் அவள் தன் கணவனோடு சேர்ந்தேயிருந்தாள். கோமுட்டிக் கிழவனும் இன்ப வாழ்வு நடத்தினான்.