பஞ்ச தந்திரக் கதைகள்/கடலை வென்ற சிட்டுக்குருவி
ஒரு கடற்கரையில் மேய்ந்து வாழ்ந்து வந்தது ஓர் ஆண் சிட்டு. அந்தச் சிட்டுக்கு ஒரு மனைவிச் சிட்டு இருந்தது. இரண்டும் கடற்கரையில் இருந்த ஒரு செடியின் கீழ் கூடு கட்டி வாழ்ந்து வந்தன. பெண் சிட்டுக்குச் சினை ஏற்பட்டவுடன் அது ஆண் சிட்டைப் பார்த்து 'நான் எங்கே முட்டையிடுவது?' என்று கேட்டது.
'எங்கே இடுவது? இங்கேயே இட வேண்டியது தான்! இதைவிட வேறு இடம் நமக்கு எங்கேயிருக்கிறது?’ என்று பதில் சொல்லியது ஆண் சிட்டு.
'கடற்கரையில் முட்டையிட்டு வைத்தால் அலையடித்து கடல் எடுத்துக் கொண்டு போய் விட்டால் என்ன செய்வது?’ என்று பெண் சிட்டுக் கலங்கியது.'போடி, போ! பெண் புத்தி என்பது சரியாக இருக்கிறது. நாம் இன்னார் என்று நினைத்துப் பார்க்காமல் அந்தக் கடல் நம் முட்டைகளை எடுத்துக் கொண்டு போனால், அது படும்பாடு நாயும் படாது!’ என்று அந்த ஆண் சிட்டுக்குருவி வீராப்புப் பேசியது.
'என்ன புத்தியோடு இப்படிப் பேசுகிறாய்? வாயடக்கமில்லாத ஆமை இறந்த கதை உனக்குத் தெரியாதா? அந்த ஆமையின் கதையும் மூன்று மீன்
களுடைய கதையும் தெரிந்தால் நீ இப்படிப் பேச மாட்டாய்! என்று பெண் சிட்டுக் கூறி அந்தக் கதைகளையும் விளக்கமாகச் சொல்லியது.
'அது கிடக்கட்டும், நமக்குள்ள இடம் இதுதான்! இங்கேதானே நீ உன் முட்டைகளை யிடு' என்று கட்டாயமாகக் கூறியது ஆண் சிட்டு.இதைக் கேட்டுக் கொண்டிருந்த கடலரசன் ‘ஓகோ! இவற்றின் சமர்த்தைப் பார்க்கலாம்!’ என்று மனத்திற்குள் நினைத்துக் கொண்டது.
பெண் குருவி யிட்டு வைத்த முட்டையை அலையடித்துக் கொண்டு போய் விட்டது.
இதைக் கண்ட ஆண் சிட்டுக்குருவி கடலைப் பார்த்து, 'ஏ, கடலே, இப்போதே என் முட்டையைத் திருப்பிக் கொண்டு வந்தால் சும்மா விட்டு விடுகிறேன். இல்லாவிட்டால் உனக்குத் துன்பம் ஏற்படச் செய்வேன்’ என்று கூறியது.
கடல் அதற்குப் பதில் ஒன்றும் பேசவில்லை.
சிட்டுக்குருவி, உடனே பறந்து சென்று எல்லாச் சிட்டுக்களையும் அழைத்தது. சிட்டுக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்த பின் மற்ற பறவைகளை எல்லாம் அழைத்துக் கொண்டு பறவை அரசனை நோக்கிப் பறந்தது அந்த ஆண் சிட்டு. பறவையரசன் கருடன் முன் போய், கருடதேவா, பறவைக் குலங்களுக்கே பெரிய பழி ஏற்பட்டு விட்டது. கடலரசன் எங்கள் முட்டைகளை யடித்துக் கொண்டு போய் விட்டான். இக்கணமே அதைத் திரும்பப் பெறாவிட்டால், யாரும் நம் குலத்தை மதிக்க மாட்டார்கள்’ என்று வருத்தத்துடன் கூறியது.
கருடன் உடனே திருமாலிடம் பறந்து சென்று முறையிட்டது. திருமால் உடனே கடலரசனை அழைத்து,' ஏன் முட்டையை எடுத்துச் சென்றாய்? இப்பொழுதே கொண்டு வந்து அந்தச் சிட்டுக் குருவியிடம் கொடுத்துவிடு. இல்லை என்றால் என் கோபத்துக்கு ஆளாவாய்’ என்று கட்டளை யிட்டார்.
கடவுளின் கட்டளையைக் கேட்ட கடலரசன் பயந்து நடுங்கி உடனே முட்டைகளைக் கொண்டு வந்து சிட்டுக் குருவிகளிடம் கொடுத்து விட்டான்.
கூட்டு முயற்சியால் ஆகாத காரியம் உலகத்தில் என்ன இருக்கிறது? எதுவுமே இல்லை.