பஞ்ச தந்திரக் கதைகள்/குருவிக் கூட்டைக் கலைத்த குரங்கு

6. குருவிக் கூட்டைக் கலைத்த குரங்கு

ஒரு காட்டில் ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. அதில் இரண்டு தூக்கணாங் குருவிகள் கூடு கட்டிக் கொண்டு வாழ்ந்து வந்தன.

ஒரு நாள் பெரும் மழை பெய்தது. அந்த மழையில் நனைந்து குளிரினால் ‘ பற்கள். கிட்டிப் போய், உடல் நடுநடுங்கியபடி ஒரு குரங்கு வந்தது. அது அந்த ஆலமரத்தினடியில் வந்து மழைக்கு ஒதுங்கி நின்றது. அதைப் பார்த்து தூக்கணாங் குருவிகளில் ஒன்று மிகவும் இரக்கப்பட்டது.

குரங்கை நோக்கி, "உனக்குக் கை கால் இருக்கும் போது நீ ஒரு கூட்டைக் கட்டிக் கொண்டு இருக்கக் கூடாதா? ஏன் இப்படி மழையில் நனைந்து குளிரில் நடுங்க வேண்டும்?" என்று கேட்டது.

இதைக் குரங்கு தவறாக எடுத்துக் கொண்டு விட்டது. அந்தத் குருவி, தன்னைக் கையாலாகா தவன் என்று. பழிப்பதாக அது நினைத்துக் கொண்டது. ஆகவே மிகவும் ஆத்திரம் கொண்டு, "ஏ ஊசி மூஞ்சிக் குருவியே, மூடத்தனமாக நீ எனக்குப் புத்தி சொல்ல வந்து விட்டாயா? எனக்கா கூடு கட்டத் தெரியாது. இருக்கட்டும். இதோ உன் கூட்டை என்ன செய்கிறேன் பார்!” என்று சொல்லிக் கொண்டே மரத்தில் ஏறிக் குருவிக் கூடுகளைச் சின்னாபின்னமாகப் பிய்த்து எறிந்தது. பாவம் அந்தக் குருவிகளும் மழையில் நனைந்து குளிரால் நடுங்கின. மூடர்களுக்கு அறிவுரை சொன்னால் கேடுதான் வரும்.