பஞ்ச தந்திரக் கதைகள்/சிங்கத்தின் மோசம் அறிந்த நரி

11. சிங்கத்தின் மோசம் அறிந்த நரி


ஒரு நாள் ஒரு சிங்கம் இரை தேடிக் கொண்டிருந்தது. ஒன்றும் அகப்படவில்லை. கடைசியில் ஒரு குகையைக் கண்டது. 'இந்தக் குகை ஏதாவது ஒரு மிருகம் தங்குமிடமாக இருக்கக்கூடும். அந்த மிருகம் தங்குவதற்கு வரும்வரை காத்திருப்பேன். வந்தவுடன் அடித்துக்கொன்று தின்பேன்’ என்று சிங்கம் அதனுள்ளே ஒளிந்திருந்தது.

நெடுநேரம் சென்று அந்தக் குகையில் தங்குகின்ற ஒரு நரி திரும்பி வந்தது. குகை வாசலில் சிங்கத்தின் காலடிச் சுவடுகளைக் கண்ட நரி, விழித்துக் கொண்டது. உள்ளே சிங்கம் இருக்கிறதா இல்லையா என்று தெரிந்து கொண்டு தான் நுழைய வேண்டும் என்று முடிவு செய்து கொண்டது.

நரி, 'ஏ குகையே! ஏ குகையே! என்று கூப் பிட்டது.

பதில் இல்லை.

‘ஏ குகையே! ஏ குகையே!' இன்று ஏன் பேச வில்லை’ என்று நரி, இரண்டாவது முறை கூப்பிட்டது.

அப்போதும் பதில் இல்லை.

எப்போதும் இந்தக் குகை பேசும் போலிருக்கிறது. நாம் இருப்பதால் பயந்து பேசவில்லை

போலும். குகை பேசாவிட்டால் நரி கோபித்துக் கொண்டு திரும்பிப் போய்விட்டால் என்ன செய்வது என்று எண்ணிய சிங்கம், குரலை மாற்றிக் கொண்டு 'ஏன்?' என்று கேட்டது.

அந்தப் பதிலைக் கேட்டதும் நரி தப்பித்தோம் பிழைத்தோம் என்று அங்கிருந்து ஓடி விட்டது.

எதையும் ஆராய்ந்து செய்வது நல்லது.