பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்/அக்னிபுத்திரன் சொன்ன நெருப்பின் கதை



அக்கினி புத்திரன் சொன்ன
நெருப்பின் கதை

"நேற்று கங்காதரன் சொன்ன கதை உங்களுக்கெல்லாம் பிடித்திருந்ததா?’ என்று கேட்டுக் கொண்டே உலகநாதன் தன் சகோதரர்களுடன் அந்தக் கிராமத்துச் சிறுவர்கள் மத்தியில் அமர்ந்தான்.

"ரொம்பப் பிடிச்சிருந்தது அண்ணா," என்று அனைவரும் சேர்ந்தாற்போல் கூறினார்கள்.

"மழையைப் பார்த்திருக்கோம்; மழையிலே நனைஞ்சுக்கிட்டே விளையாடிக்கூட இருக்கோம். மழை ஆகாசத்திலேருந்து கொட்டுதுன்னு மட்டும் தான் எங்களுக்குத் தெரியும். ஆனா ஏன் கொட்டுது, எப்படிக் கொட்டுது; எதுக்காகக் கொட்டுது என்கிறதையெல்லாம் அண்ணன் விளக்கிச் சொல்லிட்டிருந்தப்போ, ஜலதோஷமே பிடிச்சிட்டாப்பிலே இருந்துச்சு" என்று மாடசாமி வேடிக்கையாகக் கூறியபோது அனைவரும் சேர்ந்து சிரித்தனர். "தண்ணின்னா - எங்க கிராமத்து கண்ணாத்தா ஏரிதான் பெரிசுன்னு எண்ணிக்கிட்டிருந்த எங்களை; கண்டம் கண்டமா அழைச்சிட்டுப் போய் எத்தனை பெரிய பெரிய சமுத்திரங்களையும், நம்ம நாட்டிலே உள்ள எவ்வளவு அணைக்கட்டுக்களையும் காட்டிட்டீங்க. அது மட்டுமில்லே-

தண்ணிரோடு அருமை பெருமைகளையும்; அது சுத்தமா இல்லேன்னா மக்கள் எத்தனை கஷ்டப்படு வாங்கன்னும் தெரிஞ்சுக்கிட்டப்போ; எனக்கு எங்க கிராமத்து ஜனங்க மேலே கோவம் கோவமா வருது...” என்று அழகப்பன் கூறிக் கொண்டு வரும்போதே, "ஏன் தம்பி அப்படி?” என்று ஆதரவோடு கேட்டான் உலகநாதன்.

"ஆமாம் அண்ணா! கண்ணாத்தா ஏரித்தண்ணி கல்கண்டு ஆட்டமா இனிப்பா சுத்தமா இருக்கும். எங்க கிராமத்து ஜனங்களுக்கெல்லாம் குடி தண்ணி கொடுத்து உதவறது இந்த ஏரிதான். ஆனா...அந்த ஏரியிலே தான் எல்லாரும் குளிப்பாங்க-வீட்டிலே இருக்கிற அழுக்குத் துணிகளையெல்லாம் கொண்டுவந்து போட்டு தோச்சுக்குவாங்க-

வடக்குக் கரைப் பக்கம் போனா ஒரே ஆடுமாடுதான். எங்க கிராமத்து வயல்லே உழற்ற அத்தனை சாணி மாடுகளையும்; வைக்கோலையும் மண்ணையும் போட்டுத் தேச்சுக் குளுப்பாட்டறது அந்தத் துறையிலே தான்-

எல்லாத்தையும் விட வெட்கக்கேடு-

கிராமத்துக்காரங்க அத்தனை பேரும் காலையிலே எழுந்திருச்சு வெளி வாசலுக்கும் போயிட்டுத் தெற்குத் துறையிலே வந்து கால் கழுவிக்கு வாங்க; மேற்குத் துறையிலே வந்து பல்லு விளக்கிட்டுப் போவாங்க.

ஆண் பிள்ளைகள விடிஞ்சு செய்யற இந்தக் காரியத்தை, கிராமத்துப் பெண்கள் விடியறதுக்கு முன்னியே முடிச்சுப்பாங்க.

'தாயைப் பிழைச்சாலும் தண்ணியைப் பிழைக்கலாகாதுன்னு, நீரின் பெருமையைப்பற்றியும், சுகாதாரத்தைப் பற்றியும் அண்ணன் சொன்னப்போ எனக்கு இந்த ஏரி ஞாபகம்தான் வந்திச்சு.

தெற்கு, வடக்கு, மேற்குன்னு ஒவ்வொரு துறையிலேயும் ஒவ்வொரு பிரிவா ஒட்டுமொத்தமா அசுத்தப்படுத்திட்டு; ஒரு துறையிலேருந்து மட்டும் சுத்தமான தண்ணின்னு குடிக்க எடுத்துட்டுப் போறாங்க நோய்நொடி வராமல் என்ன செய்யும்?. கிராமத்து வைத்தியரை நெல்லும் பணமுமாக கொடுத்து வளர்க்கறாங்க” என்று கூறிக்கொண்டு வரும்போதே அழகப்பனின் குரல் தழுதழுத்தது.

அழகப்பனது முதுகை ஆதரவாகத் தட்டிக் கொடுத்த உலகநாதன், நீதான் ஐந்தாவது வரைப் படித்திருக்கிறாயே; சுற்றுப்புறத்தைத் துரய்மையாக வைத்துக்கொள்வது பற்றியும்; சுகாதாரம் பற்றியும் எல்லோருக்கும் சொல்லக் கூடாதா?’ என்றான்.

உடனே அழகப்பன், "அதெல்லாம் எடுபடாது அண்ணா! பட்டணத்திலே நாலு எழுத்துப் படிக்கறதுக்குள்ளே நமக்கெல்லாம் புத்தி சொல்ல வந்துட்டான்னு எகத்தாளமாப் பேசுவாங்க.

இந்த ஊரிலேயே நிறைய இடம் இருக்கு மொட்டைக் குளத்துக்குப் போய் எல்லாரும் அங்கே மாடு குளுப்பாட்டலாம். தாமரக்குளத்திலே ஆம்பிளை, பொம்பளை, குழந்தைகள் எல்லாரும்கூடக் குளிக்கலாம். அப்படிச் செஞ்சா கண்ணம்மா ஏரித்தண்ணி சுத்தமான குடிநீராக எல்லோருக்கும் பயன்படும். இதையெல்லாம் நான் சொல்லக்கூடாது. எங்க ஊருக்குப் புதிசா ஒரு தமிழ்வாத்தியார் வந்திருக்காரு. ரொம்ப நல்லவரு. அவரை விட்டுத்தான், ஊர் ஜனங்களுக்குச் சொல்லச் சொல்லாம்னு இருக்கேன்” என்றான். "அதுதான் நல்ல யோசனை", என்ற உலகநாதன், வந்திருப்போரை எல்லாம் ஒரு முறை நோட்டம் விட்டு விட்டு, "ஆமாம்..., மாரியப்பனை எங்கே காணோம்?” என்று கேட்டான்.

பக்கத்திலிருந்த பழனிச்சாமி, பட்டென்று கூறினான். 'அவன் தங்கச்சி பாவாடையிலே நெருப்புப் பிடிச்சுக்கிட்டுது. காலெல்லாம் வெந்து போச்சு. டவுன் ஆஸ்பத்திரிக்கு வண்டிலே போயிருக்காங்க. மாரியப்பனும் கூடப் போயிருக்கான்.

பழனிச்சாமியின் இந்தச் செய்தியைக் கேட்ட பிறகு; அந்த மண்டபம் சிறிது நேரம் மெளனத்திலாழ்ந்திருந்தது. ஒருவர் முகத்தை ஒருவர் சோகமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அங்கு நிலவியிருந்த அமைதியை கலைத்துக் கொண்டு அக்கினிபுத்திரன் கூறினான்: "எல்லாம் சரியாகிவிடும். யாரும் கவலைப்படவேண்டாம்; ஆனால் யாருமே நெருப்புடன் விளையாடக் கூடாது. நெருப்பை உபயோகிக்கும்போது. கூடவே நெஞ்சில் கொஞ்சம் பயமும்; ஜாக்கிாதை உணர்வும் தவறாமல் இருக்கவேண்டும்.

ஒவ்வொரு வீட்டிலும் தினசரி அடுப்பு எரிகிறது; சமையல் நடக்கிறது. மின்சார வசதி இல்லாத இடங்களில் மண்ணெண்ணை விளக்கு எரிகிறது.

இது அன்றாடம் நடைபெறுகிற சாதாரண விஷயமாகத் தோன்றலாம். ஆனால் என்றாவது ஒரு நாள்; அல்லது எப்போதாவது ஒரு தடவை சற்று அஜாக்கிரதையாய்ச் செயல்பட்டால்; அடுப்பிலோ; விளக்கிலோ உள்ள சிறு தீ வீட்டுக் கூரைக் குத்தாவி; தெருவையே அழிக்கும் பெரு நெருப்பாகிவிடும். வந்தபின் தடுப்பதைவிட, வருமுன் காப்பது அல்லவா புத்திசாலித்தனம்.

விபத்துக்களைப் பார்த்து யாரும் நெருப்பை வெறுக்க முடியாது. ஏனெனில் விபத்திற்குப் பொறுப்பு நெருப்பு அல்ல; அதை கவனக் குறைவாகக் கையாண்டவரே.

அலட்சியமும், அஜாக்கிரதையுமின்றிக் கவனமாக அடக்கி ஆண்டால்; நெருப்பு ஒரு இன்றியமையாத நல்ல நண்பனே. நெருப்பில்லாமல் மனித. வாழ்க்கை முற்றுப் பெறாது.

நெருப்பு ஒரு அரிய சொத்து. இதைத் தேடி அடைய ஆதிமனிதன் படாத பாடுபட்டான். அக்கினியைத் தெய்வமாக முனிவர்கள் வழிபட்டனர். உலக க்ஷேமத்திற்காக முன்னாளில் காட்டில் வாழும் ரிஷிகள் யாககுண்டம் ஏற்படுத்தி; அதில் அக்கினியை மூட்டி மந்திரம் ஓதி, நெய், தயிர். பால் போன்றவற்றை ஹோம குண்டத்தில் வார்த்து இறைவனை வணங்கினார்கள்.

இந்தக் காலத்தில் நினைத்தமாத்திரத்தில்-ஒரு சாதாரண தீப்பெட்டியின் உதவியினால்கூட நெருப்பை உண்டாக்கி விட முடியும். ஆனால்-ஆதி நாளில் மனிதன் உணவு சமைக்கவும்; கடுங் குளிரிலிருந்து, கணப்பு மூட்டித் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும் படாதபாடு பட்டான்.

வளமான காடுகளில் கோடைக் காலங்களில் மூங்கில்களில் கூடத் தீ மூண்டுவிடும். அப்படி முண்ட தீ-சுற்றிலுமுள்ள மரங்களுக்கெல்லாமே பரவி காட்டை அழித்து விட்டுத்தான் ஓயும்.

ஆதிமனிதன் இதை மனதிற் கொண்டுதான் கட்டையோடு கட்டையை ஊராய்த்தும்; கட்டையைக் கடைந்தும்; சிக்கி முக்கிக் கற்களை ஒன்றோடொன்று மோதியும்; சிறு தீப்பொறியைப் பெற்று; பெரு நெருப்பாக்கிக் கொண்டான்.

இந்த இரண்டு வழிகளில் தான் பலநூறு ஆண்டுகளாக மனிதன் நெருப்பைக் கண்டான்.

நெருப்பை உண்டாக்கியது பற்றி கி. மு. 4000-ம் ஆண்டு, எகிப்து வரலாற்றில் ஒரு குறிப்பு காணப்படுகிறது.

காட்டிலே மரங்கள் ஒன்றோடொன்று ஊராய்ந்து தீப்பற்றி எரியும். அந்தக் காட்டுத் தீமைக் கண்டு, விலங்குகளைப் போல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அஞ்சி ஓடிக் கொண்டிருந்த மனிதன்; மெல்ல மெல்லத் தீயுடன் கூடிப் பழகத் தொடங்கி, தனக்கு உற்ற நண்பனாக்கிக் கொண்டான்.

அதனால்—பல நன்மைகளை அவன் படிப்படியாகத் தீயின் மூலம் அடைந்தான். ஆனாலும் "தீ" என்பதுஎன்ன என்பதுபற்றிய சிந்தனையும்; அதன் ரசாயன மாற்றங்கள் பற்றியும் சமீபகாலமாகத் தான் ஆராயத் துவங்கினான்.

பொருள்களில் அதிவேகமாக உண்டாகும் இரசாயன மாற்றமே தீ. இந்த இரசாயன மாற்றம் நேரும் போது வெப்பமும் வெளிச்சமும் உண்டாகிறது. இந்த ரசாயன மாற்றம் பல வகைகளில் உண்டாகி, அவறறின் மூலம் தீயும் வெப்பமும் வெளியாகின்றன. அதில் ஒருவகை பிராணவாயுவுக்கும், எரிபொருளுக்கும் இடையே உண்டாவதைத்தான் நாம் 'தீ', அல்லது 'நெருப்பு’, ‘அக்கினி' என்று கூறுகிறோம்.

தீயைப் பற்றி இன்னொரு முக்கியமான விஷயம். தீக்கு ஒரு தனியான உருவம் கிடையாது. அதனால் தனித்து இயங்கவும் முடியாது. ஏதாவது ஒரு பொருளிலிருந்து-அல்லது ஏதாவது ஒரு பொருளைச் சார்ந்தே தீ பிறக்க முடியும்.

தீ விடாமல் எரிந்து கொண்டிருக்க வேண்டுமானால், அதற்கு பஞ்சு, விறகு, வைக்கோல், காகிதம், துணி, மற்றும் தாவரப் பொருட்கள் தாவர எண்ணெய், பெட்ரோல், மண்ணெண்ணை, எண்ணை வாயுக்களைப் போன்ற ஏதாவது ஒரு தீனி தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருக்க வேண்டும். இல்லை என்றால் தீ தானாகவே அணைந்துவிடும்.

நாம் உயிர் வாழ பிராணவாயு எவ்வளவு அவசியமோ, அதுபோல், தீ எரிவதற்கும் பிராணவாயு அவசியமாகத் தேவைப்படுகிறது, பிராணவாயு கிடைப்பதில் தடை ஏற்பட்டால் தீ உடனே அணைந்துவிடும்.

ஆனால், எந்தப் பொருளையும் தீ எரித்துச் சாம்பலாக்கிவிடும்; தீயில் உருகாத, அல்லது உருக் குலையாத பொருளே இல்லை என்றிருந்த காலம் மாறி, இப்போது (Fire Proof) - தீப்பிடிக்காத பொருட்களை ஆராய்ச்சி செய்து கொண்டு வந்திருக்கிறார்கள்.

நமது உடலினுன்ளும் ஒரு பெரு நெருப்பு எரிந்து கொண்டே இருக்கிறது. அதன் சக்தியால் தான், நாம் எந்தவகை உணவு உட்கொண்டாலும் ஜீரணமாகி விடுகிறது. இதற்கு 'ஜாடராக்கினி' என்று பெயர்.

இந்த ஜாடராக்கினி நம் உடலினுள் எரிந்து கொண்டிருப்பதற்கும் பிராணவாயு தேவை. அந்தத் தேவையை நாம் சுவாசித்து உள்ளே அனுப்பும் காற்றிலிருந்து பெற்றுக்கொள்கிறது. நாம் மூச்சு இழுக்கும் காற்றிலுள்ள பிராண வாயுவை, நம் நுரையீரலுக்கு வந்து சேரும் ரத்தத்திலுள்ள சிவப்பு அணுக்கள் தங்களுடன் ஏந்திச் சென்று, நம் உடலில் உள்ள கோடிக்கணக்கான உயிர் அணுக்களுக்குக் கொண்டு போய்க் கொடுக்கின்றன.

கிட்டத்தட்ட கி. மு. 2000-ம் ஆண்டு 'தீயும் விறகும்.' என்னும் பொருள் படும்படியாக "ஜெபில்” என்னும் பெயருடன் ஒரு பாபிலோனிய தெய்வத்தைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.

ஆனால்-1669-ம் ஆண்டில், ஜெர்மானிய வேதியல் நிபுணர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்ட "பாஸ்பரஸ்"ஸால்தான் இன்று எளிதாக நெருப்பினைப் பெற உதவும் அரிய சாதனமாகித் தீப்பெட்டி உருவாக முடிந்தது.

1680-ம் ஆண்டு "ராபர்ட் ஃபாயில்” என்பவர், 'சல்பர்' தடவிய ஒரு குச்சியால், 'சல்பர்', தடவிய ஒரு தாளில் உரசினால் நெருப்பு உருவாகும் என்ப தைக் கண்டார். ஆனால் அதைச் செயற்படுத்துவதில் ஒரு தொல்லை இருந்தது. அந்த முறையினால் நெருப்பு எளிதில் தானாகவே பற்றிக்கொள்ளும் அபாயம் இருந்தது. 

தானாக நெருப்புப் பற்றிக் கொள்வதைத் தடுப்பதற்கு அதிகப் பணம் தேவைப்பட்டது. எனவே அந்த முறையில் செயற்பட முடியவில்லை.

காற்றுப்பட்டவுடன் பாஸ்பரஸ் பற்றிக்கொள்ளும் என்கிற உண்மை தெரிந்ததால்; 1780-ம் ஆண்டு பிரான்ஸில் பாஸ்பரஸ் மெழுகுவர்த்தி கண்டுபிடிக்கப்பட்டது. பாஸ்பரஸ்ஸை மெழுகு நூல், அல்லது பேப்பர் இவற்றின் நுனியில் தடவி ஒரு கண்ணாடிக் குழாயில் அடைக்கப்படும்.

அந்தக் குழாய் திறக்கப்பட்டுக் காற்றுப்பட்டவுடன் பாஸ்பரஸ் தடவிய மெழுகு நூல் அல்லது தாள் எரியத் துவங்கிவிடும். இப்படி பாஸ்பரஸ், சல்பர் ஆகியவற்றின் உதவியால் நெருப்பை உண்டு பண்ணும் பற்பல முறைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

1827-ம் ஆண்டு ஆங்கில வேதியல் நிபுணராகிய "ஜான்வாக்கர்’ என்பவர் தீக்குச்சி மூலம் தீ உண்டாக்கும் முறையைக் கண்டுபிடித்தார்.

அந்த தீக்குச்சிகள் மூன்று அங்குல நீளமிருந்தன. அவற்றின் நுனியில் 'ஆண்டிமனி சல்பைட், 'பொட்டாசியம் குளோரேட்', அரபிக் கோந்து’ (Gum Arabic) “ஸ்டார்ச்” “Starch” ஆகியவை தடவப்பட்டிருந்தன. அவற்றில் ஏதாவது சிறிது உராய்ந்தாலும்; தீப்பொறி பறப்பதும்; எப்போதாவது வெடித்து விடுவதும் உண்டு.

இவ்வகையான தீப்பெட்டித் தயாரிப்பாளர் தங்கள் தீப்பெட்டியின் மீது “இத்தீக்குச்சி எரியும் போது வரும் வாயுப்புசையை உட்கொண்டுவிடக் கூடாது", என்று எச்சரிக்கை விட்டனர்.

அந்தக் குச்சிகள் எரியும்போது வரும் நெடி மிகவும் ஆபத்தானது. 1831-ம் ஆண்டு பிரெஞ்சு நாட்டவராகிய “டாக்டர் சார்லஸ் சௌரியா", என்பவர் பாஸ்பரசுக்குப் பதிலாக 'சல்பைட்' பயன்படுத்தினார். இது உலகெங்கிலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.

ஆனால், இதிலிருந்து கிளம்பிய நாற்றம், சுவாசிப்பவரின் உடலைக் கெடுத்து சிலரை முடமாக்கியது; சிலரைக் கொன்றது; பலருக்குப் பற்பல நோயை உண்டாக்கியது.

அதன்பிறகு, "காஹென்', “சேவின்" என்ற இரண்டுபேர் பாஸ்பரசை நச்சு நீக்கிப் பயன்படுத் தினர். அதனால் அவர்களுக்கு-ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் - அவர்களின் தயாரிப்புக்கு 1898-ம் ஆண்டில் விற்பனை உரிமை வழங்கப்பட்டது.

19-ம் நூற்றாண்டின் மத்தியில் புதுப்புது வகையான தீப்பெட்டிகள் விற்பனைக்கு வரத்துவங்கின. "ப்ரோ மதியன்” தீக்குச்சி என்றொரு வகை வந்தது. ஊசி மருந்து அடைக்கப்பட் டுள்ளது போன்ற சிறிய கண்ணாடிக் குமிழிக்குள் 'சல்ப்யூரிக்' அமிலத்தை அடைத்து அக்குமிழின் மேல் பொட்டாசியம் குளோரேட், சர்க்கரை, பிசின் ஆகியவற்றைத் தடவி அதன்மீது ஒரு தாளும் ஒட்டப்பட்டிருக்கும்.

குமிழியை உடைத்ததும் தாளில் தீப்பற்றிக் கொள்ளும்.

1845-ம் ஆண்டில், 'அமார் பஸ் பாஸ்டரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பயனாகத்தான் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த "ஜே. இ. லண்ட் ஸ்ட்ராம்” என்பவரால், இன்றைய பாதுகாப்பான தீக்குச்சி கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த இரசாயனக் கலவையில் ஒரு பகுதிதான் தீக்குச்சியின் நுனியில் இருக்கும். தீப்பெட்டியின் பக்கவாட்டிலுள்ள இருபுறமும் அமார் பஸ் பாஸ் தடவப்பட்டிருக்கும். தீப்பெட்டியின் அந்தப் பகுதியில் குச்சியை உரசினால்தான் தீப்பிடிக்கும்; மற்றப்படி தீ தானாக உருவாகாது.

இந்தப் பாதுகாப்பான தீப்பெட்டியை ஸ்வீடன் நாட்டைச் சார்ந்த "ஜே. இ. லண்ட் ஸ்டார்ம்" என்பவர் 1855-ம் ஆண்டு கண்டுபிடித்தார். அன்றிலிருந்து இதுதான் இன்று வரை உலகெங்கும் உபயோகிக்கப்படுகிறது. 

இப்பொழுதெல்லாம் அதிகமாக நெருப்புப் பெட்டிக்குப் பதில், காஸ் லைட்டர்கள் தான் உபயோகப்படுகிறது என்றாலும், தீப்பெட்டியை அறவே ஒதுக்கிவிட முடியாது. இவற்றில் எதை உபயோகித்தாலும் கவனமாக இல்லாவிட்டால் தீ விபத்தைத் தவிர்க்க இயலாது. அதையும் மீறிச் சில சமயங்களில் மின்சாரத்தில் ஏற்படும் கோளாறு காரணமாகவும் தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே; நாமாகவோ; அல்லது நம்மையும் மீறியோ, தீவிபத்தில் சிக்கிக்கொண்டால் அதிலிருந்து மீளச் சில பாதுகாப்பான வழிகள் உள்ளன. அவற்றை ஒழுங்காகக் கடைப்பிடித்தால் தீ விபத்தையும் நேராமல் தடுக்கலாம்; நம்மையும் நம் உடைமைகளையும் கூடக் காப்பாற்றிக் கொள்ளலாம்.

தீ விபத்திலிருந்து தப்புவதைவிட, முதலில் தீ விபத்து ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்கிறேன். கவனமாகக் கேட்டுக் கொள்ளுங்கள்.

O வீடுகளுக்கு அருகே வைக்கோல் போர்களைப் போட்டு வைத்துக் கொள்ளக் கூடாது.

O வைக்கோல் போர்களை, ரயில் பாதைகள், நடைபாதைகள், பொது இடங்கள், முதலியவற்றிற்கு வெகு தூரத்தில் வைக்கவேண்டும்.

ஏனெனில், ரயிலில் பயணம் செய்கிற ஒருவரோ, அல்லது நடைபாதைவாசி ஒருவரோ. தான் குடித்த பீடி, சிகரெட் இதில் எதையாவது வெளியே வீசி எறியும் போது; அது அருகிலுள்ள உங்கள் வைக்கோல் போர் மீது விழுந்து, தீப்பற்றிக் கொள்ளலாம்.

O படுக்கையில் படுத்துக் கொண்டே புகைபிடிக்கக் கூடாது; புகைத்த பின் அணைக்காமல் பீடி, சிகரெட்டுகளை வெளியே வீசக் கூடாது.

O குழந்தைகளை நெருப்புக்கு அருகிலும், தீப்பெட்டியுடனும் விளையாட அனுமதிக்கக் கூடாது; அவர்களுக்கு எட்டாத உயரத்தில் தீப்பெட்டிகளை வைக்க வேண்டும்.

O தீபாவளி போன்ற விழாக் காலங்களில் குழந்தைகளைத் தனியே பட்டாசு வெடிக்க அனுமதிக்கக் கூடாது. இரவில் தாய்மார்கள் படுக்கைக்கு அருகில் விளக்குகளை வைத்துவிட்டுப் படுக்கக் கூடாது. தூக்கத்தில் நம்மை அறியாமலே கால், கைப்பட்டு, பெரிய தீ விபத்தை அவை உண்டாக்கி விடும்.

O கூரை வீடுகளில் சிம்ணி இல்லாத விளக்குகளை உபயோகிக்கக் கூடாது. O நெருப்போடு கூடிய சமையல் சாம்பலை-குப்பையில் கொட்டக்கூடாது.

இதுபோன்ற கவன உணர்வுடன் நடந்து கொண்டால், கிராம மக்களால் தீ விபத்தைத் தடுத்துவிட முடியும்.

நகரங்களின் தன்மை இதற்கு மாறானது! வைக்கோல் போரும், சிம்ணி விளக்கும் அங்கு இல்லை, ஆயினும் அங்கே அடிக்கடித் தீ விபத்து நிகழ்கிறது. அதற்குக் காரணம் அவர்கள் மின்சாரத்தைக் கவனமாகக் கையாளாததுதான்.

O மின்சாரத்தை உபயோகிக்கும்போது, அளவிற்கு மீறிய மின் இணைப்புக் கம்பியை உபயோகிக்கக் கூடாது. மின்கம்பி, மற்றும் மின் இணைப்புக்களை காலா காலத்தில் பரிசோதிக்க வேண்டும்.

O மின்சார சலவைப் பெட்டிகளை உபயோகித்து முடிந்தபின், ஸ்விட்சை நிறுத்த மறந்து விடக் கூடாது.

O மின்சார நெருப்பு ஏற்பட்டால், தண்ணீரை ஊற்றி அணைக்க முற்படக் கூடாது; எரிகிற பகுதியின் மீது மண்ணைப் போடவேண்டும். தீ எரிவதற்குப் பிராணவாயு தேவைப்படுகிறது. மணலைப் போட்டவுடன், காற்று கிடைப்பது தடைபட்டு தீ அணைந்துவிடும்.

O ஸ்டவ் எரிந்து கொண்டிருக்கும்போது அதில் எண்ணை நிரப்பக்கூடாது. ஸ்டவ் அடுப்பில் நெருப்புப் பிடித்து விட்டால் தண்ணீரில் நனைத்த கோணியைக் கொண்டு மூடி விட்டால் தீ அணைந்துவிடும்.

O மின்சாரக் கம்பிகளில் ஈரத்துணியை உலர்த்தப் போடக் கூடாது. மின்சாரம் தாக்கி உயிருக்கு ஆபத்து ஏற்படும்.

O தீப்பற்றி எரிகிற குடிசையிலோ, வீட்டிலோ உள்ளவர்களைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அவசரப்படாமல்; மீட்கச் செல்லுகிறவர்கள் தகுந்த முன் ஜாக்கிரதையுடன் செல்ல வேண்டும். இது முக்கியமாகக் கடைப்பிடிக்க வேண்டிய விஷயம்.

O தீயின் ஆதிக்கத்தில் சிக்கியிருக்கும் குடியிருப்புக்குள் நுழையும் போது தீவிர வெப்பம், மற்றும் புகை மண்டலம் இவை இரண்டையும் எதிர்க்கும் திறமையும் சக்தியும் பெற்றிருக்க வேண்டும்.

O வெப்பக் காற்றில் அதிக நேரம் இருக்க நேர்ந்தால், உடலிலுள்ள ஈரம் வற்றிப் போகும் விரைவில் களைப்பேற்பட்டுவிடும், சுவாச உறுப்புக்களில் அடைப்புகள் ஏற்பட்டு, தீக் காயங்கள் ஏற்படும். இத்தகை ஆபத்தான சூழ்நிலையில் இதயத்துடிப்பும் மிக அதிகமாகிறது.

மனித சகிப்புத் தன்மைக்கு மீறிய அளவில் வெப்பத்தோடு போராடும் போது, சில சமயம் மரணமும் ஏற்படும். தீப்பிடித்த கட்டிடத்தில் 150 டிகிரி செண்டிகிரேட் வெப்பம்; வரையில் 20 முதல் 40 வினாடிகளுக்குத் தங்கியிருக்க முடியும். அதற்கு மீறினால்-உயிருக்கு ஆபத்து ஏற்படும். 65 டிகிரி செண்டிகிரேடுக்கு மேல் உள்ள இடத்தில் புகுந்து மீட்பு வேலையில் ஈடுபடுவது மிகவும் அபாயமானது.

ஏனெனில்-

புகை மண்டலத்தில் உயிர்வாழ்வதற்கு வேண்டிய பிராண வாயுவின் அளவு குறைவதால் மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது.

◯ காற்றிலுள்ள பிராண வாயுவின் அளவு, 10 முதல் 14சதவிகிதத்துக்குக் குறைந்துவிட்டால்; மனிதன் விழிப்புணர்ச்சியோடு இருந்தாலும், தன்னையறியாமல் தவறான முடிவுகளை எடுக்கிறான்.

◯ கட்டிடத்திற்குள் உள்ள பிராண வாயுவின் அளவு 6 சதவிகிதத்திற்குக் குறைந்து விட்டால், உள்ளே இருப்பவர் 6 முதல் 7 நிமிடங்களுக்குள்ளாக உயிரிழக்க நேரிடும்.

எனவே-

பாதுகாப்பு உடைகள் இல்லாமலோ, மூச்சுக் கருவிகளை உபயோகிக்காமலோ எரிவும் குடிசைக்குள்ளோ, கட்டிடத்திற்குள்ளோ நுழையக் கூடாது.

திடீரென்று ஒருவர் ஆடை மீது தீ பற்றிக் கொள்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்; அவர் உடனே பயந்து அங்குமிங்கும் ஓடக்கூடாது. அப்படி ஓடினால் காற்றிலுள்ள பிராண வாயுவினால் தீ இன்னும் அதிகமாகப் பரவும். ஆகையினால் அவர் உடனே தரையில் படுத்து உருள வேண்டும்.

அதனால் நெருப்புக்கும் தரைக்கும் உள்ள இடைவெளியில் பிராணவாயு கிடைப்பது தடைபடும். பிராணவாயு தொடர்ந்து கிடைக்கா விட்டால் நெருப்பு அணைந்துவிடும். அதோடு தீப் பற்றிய நபரின்மீது தண்ணீரை ஊற்றுவதைத் தவிர்க்கவேண்டும்.

உடனடியாக கம்பளித்துணி, ஈரமான சாக்கு இவற்றால் அந்த நபரை சுற்றினால் தீ அணைந்து விடும்,

அதேபோல் சமையல் செய்யும்போது வாணலியில் தீப்பற்றிக் கொண்டால், தண்ணீரை ஊற்றக் கூடாது. அதற்குப் பதிலாக எண்ணையில் உப்பைப் போட்டால் தீ அணைந்து விடும். உப்பிற்கு, சூட்டைத் தணிக்கிற சக்தி உண்டு.

இப்படி தீயினால் ஆபத்துக்கள் வருகின்றனவே என்று எண்ணினால் அது அறியாமை. தி ஒரு நல்ல நண்பன். இந்த நவீன உலகத்தில் தீ மகத்தான காரியங்களுக்கெல்லாம் இன்றியமையாத ஒன்றாகத் திகழ்கிறது.

பெரிய பெரிய உருக்காலைகள், ரயில்வே தாண்டவாளங்கள்; இஞ்சின்கள், தளவாட சாமான்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இவையெல்லாம் முழுக்க முழுக்கத் தீயை நம்பியே செயல்படுகின்றன.

தீ விபத்திற்குத் தி ஒரு கருவியாகத்தான் விளங்குகிறதே தவிர, 'காரணமாக' அல்ல.

"மாரியப்பனின் தங்கையின் பாவாடையில் தீப்பிடித்துக் கொண்டது கூட அவளுடைய கவனக் குறைவால் ஏற்பட்ட ஒன்றாகத்தான் இருக்குமே தவிர-தீயின் குற்றமாக இராது. அதோ! மாரியப்பன் நம்மை நோக்கி ஓடி வருகிறானே. அவனையே கேட்டுப் பாருங்கள்” என்று அக்னிபுத்திரன் கூறிக் கொண்டிருக்கும் போதே, மாரியப்பன் மூச்சிறைக்க ஓடி மண்டபத்திற்கு வந்தான்.

வந்ததும் வராததுமே, "கதையெல்லாம் சொல்லி முடிச்சாச்சா?" என்று ஆவலோடு கேட்டான்.

“கதை இருக்கட்டும். உன் தங்கை சாந்திக்கு இப்ப உடம்பு எப்படி இருக்கு? அதை சொல்லு," என்று அழகப்பன் அவசரமாகக் கேட்டான்.

"அது ஒண்ணுமில்லே. பாவாடையிலே தீப்பிடிச்சதும் பயந்து போய் அங்கேயும் ஓடிக் கத்தியிருக்கா. அதுக்குள்ளே, பெரியப்பா அவ மேலே தண்ணியக் கொட்டி தீயை அணைச்சிட்டாரு.

நல்ல வேளை கால்லே தான் லேசா காயம் டாக்டரு பார்த்துட்டு தண்ணீரை ஊத்தினது தப்புன்னு சொல்லி; மருந்து, ஊசி எல்லாம் போட்டாரு.

உடையிலே தீப்பிடிக்கிற போது உடம்பு வழக்கத்தைவிட அதிகச் சூடான நிலையிலே இருக்கும். அப்போது தண்ணியை ஊத்தினா- திடீர்ன்னு உடம்பு குளிர்ந்து-ஜன்னி வந்துடும். நல்ல வேலை சாந்திக்கு ஒண்ணும் ஆகல்லேன்னு மருந்து போட்டு, கையிலே மாத்திரையெல்லாம் குடுத்து, 'வீட்டுக்குப் போகலாம்னு,' அனுப்பிட்டாரு," என்று மாரியப்பன் விபரமாகக் கூறிக் கொண்டிருக்கும் போதே அழகப்பன் இடை மறித்து, "ஆமாம், சாந்தி பாடையில் எப்படித் தீ பிடிச்சுதாம்?" என்று கேட்டான்.

உடனே மாரியப்பன், "அம்மா, கீழே அடுப்பு மூடடிச் சோறு வெச்சிருக்காங்க. சாந்தி அடுப்புக்குப் பக்கத்திலேயே ஸ்டுலைப் போட்டுக்கிட்டு, பரணை மேலே வெல்ல டப்பா எங்கே இருக்குன்னு தேடியிருக்கா. கீழே அடுப்பிலேருந்த நெருபபு சாந்தியோடு பாவடையிலே பிடிச்சுடுச்சு" என்றான்.

எல்லோரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

"இப்போது புரிந்ததா?" என்று கேட்கிற, பாவனையில் பார்த்த அக்கினிபுத்திரன் சிரித்தபடி "நாளை சந்திப்போம்” என்று கூறி விடைபெற்றுக் கொண்டனர். மறுநிமிஷம் தேவகுமாரர்கள் மாயமாய் மறைந்தனர்.