பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள்/நாட்டு நலம்

வீரன் தொகு

நாட்டுக்கு ஒரு வீரன்!-செஞ்சிக்

கோட்டைக்கு அதிகாரன்

அந்த நாளில் ஆற்காடு நவாபை

எதிர்த்த ராஜா தேசிங்கு

கதையை நாம் சொல்வோம் இங்கு:


இந்தப்-

பாட்டைக் கேட்டால் பரம்பரை நிலைமை

பளிச்சுப் பளிச்சுன்னு தெரியும்,

வேட்டு பீரங்கி கூட்டத்தில் பாய்ந்து

வெட்டியவன் கதை விபரம் புரியும்...( நாட்டுக்கு )


துள்ளிப் பாயும் குதிரை ஒன்று

டில்லித் துரையிடம் இருந்தது,

கொல்லிச் சாரல் கொங்கு பக்கிரி

சொல்லிப் பரிசாய்த் தந்தது

உள்ளத் துணிவாய் சவாரி செய்ய

எல்லாப் படையும் பாய்ந்தது

உறுதி கொண்டவர் வருக வருகவென

ஓலை எங்குமே பறந்தது (நாட்டுக்கு)


அந்தப் பேச்சைக் காதிலே கேட்டான்

தேரணி மகாராஜா

டில்லிக்குப் போனான் குதிரையைப் பார்த்தான்

தேரணி மகாராஜா அவன்

திகைத்துப் போனதால் சிறையில் தள்ளினான்

டில்லிக்கு மகாராஜா

தேரணி சிங்கை டில்லிச் சிறையில்

தள்ளிய மறுவாரம்

சிங்கக் குழந்தையை ஈன்றுவிட்டது

செஞ்சித் திருநகரம், செஞ்சித் திருநகரம்

சிங்கக் குழந்தையை ஈன்றுவிட்டது

செஞ்சித் திருநகரம்....! (நாட்டுக்கு)


உறையிலிருக்கும் போர்வாள் போலே

அறையிலிருந்தான் தேசிங்கு!

உலக வழக்கம் உணரும் வரைக்கும்

மடியில் வளர்ந்தான் தேசிங்கு!-தாய்

மடியில் வளர்ந்தான் தேசிங்கு!

சிறையிலிருக்கும் தேரணி மன்னன்

சேதியறிந்தான் தேசிங்கு!

புரவியடக்கக் கருதி வடக்கே

புலிபோல் பாய்ந்தான் தேசிங்கு!

அப்பனை விரட்டிய அதிசயக் குதிரையை

அங்கே கண்டானே!

அஞ்சாமலேறி சவாரி செய்து

அரும்புகழ் கொண்டானே....! (நாட்டுக்கு)


வசனம்: தகப்பனை மீட்ட தேசிங்கு ராஜாவுக்கு திருமணம் நடந்தது. அப்போது டில்லி பாதுஷா ஆர்க்காடு நவாபை விட்டு கப்பம் கேட்கச்

சொன்னான். அதைக் கேட்டதும் தேசிங்கு ராஜன் என்ன சொன்னான் தெரியுமா?


செப்புக் காசுக்கூட செஞ்சி நாட்டான்-வட

சீமைக்கு கட்டிட மாட்டான்-டில்லி

சேவடிக்குத் தினம் காவடி தூக்குவோன்-அவன்

தெரிஞ்சும் எப்படிக் கேட்டான்

இப்புவி மக்கள் இருப்பதெல்லாம்-அவன்

அப்பன் வீட்டு நிலமோ?-இந்தக்

குப்பைக் கூளங்களின் தப்புச் செயல்களை

ஒப்புக் கொள்ள வேணுமோ-நான்

கப்பம் கட்ட வேணுமோ? (நாட்டுக்கு)


குன்று நிகர் தேசிங்கு

கண்டபடி ஏசினான்

தண்டலுக்கு வந்தவன்

தலைதெறிக்க ஓடினான்,

அன்று நவாபு சேனை

அத்தனையும் கூட்டினான்,

அழகு செஞ்சி நகரை நோக்கி

ஆனை குதிரை ஓட்டினான்.


அந்தக் காட்சியைக் கண்ணாலே கண்டான்

ராஜா தேசிங்கு!

அகமது பொங்கி முகமதுகானை

அழைத்துவரச்சொன்னான்



வசனம்: அப்போது முகமதுகான் என்ன செய்து கொண்டிருக்கிறான். ஆருயிர்த் தோழன் முகமதுகான் கல்யாண கோலத்திலிருக்கிறான். மண

மகளிடம் முகமதுகான் விடை கேட்கும் கட்டம் காண்க.


வந்தது வந்தது ஓலை

வாளும் தலைகளும் சந்திக்கும் வேளை!

வந்தது வந்தது ஓலை

வாழ்க்கை தொடங்கிடும் வேளை-என்

வார்த்தையைக் கேளுங்கள் போகலாம் நாளை

வாழ்க்கை தொடங்கிடும் வேளை

மானம் பெரிது உயிர் சிறிது-இது

வழி வழி வந்த வழக்கமடி

மானம் பெரிது உயிர் சிறிது-இது

வழி வழி வந்த வழக்கமடி-இதில்

மாற்றம் நடந்தால் என் மார்பின் உதிரம்-நம்

மண்ணை மணப்பதும் உண்மையடி-என்

வண்ணக்கிளியே விடை கொடடி(வந்தது)


நாளை வெற்றியில் திருமணம் இன்றேல்

நடப்பது வேறென்றே

நீலவேணியில் ஏறிப்பாய்ந்தான்

நெஞ்சில் உறுதி கொண்டே


வீரன்வந்ததைக் கண்ணாலே கண்டான்

ராஜாதேசிங்கு!

வெற்றிவந்ததாய் எண்ணி மகிழ்ந்தான்

ராஜாதேசிங்கு!


பாராசாரிக் குதிரை நீல வேணிக் குதிரை

பக்கம் பக்கம் வந்து நின்றன

சிங்க ஏறுபோல் இருவர் ஏறியமர்ந்ததும்

எதிரிப்படை நோக்கிச் சென்றன

அணி வகுத்த படை அதிருது-அங்கு

கனமிகுத்த யானை கதறுது!

ஆர்க்காட்டான் நெஞ்சம் பதறுது-அவன்

அழைத்து வந்தோர் தலை உதிருது

ஓர் கூட்டம் பல கூறாய்ச் சிதறுது-சிலர்

உடம்பும் காலும் சேர்ந்து ஒதறுது

அடிபட்டு,ஒடிபட்டு,மிதிபட்டு,அறுபட்டு

தரைமுட்ட லானவர்கள் எத்தனையோ-தலை

உடைபட்டுக் குடல் கொட்டி

படை விட்டுத் தெறிபட்டு நடைகட்டித்

துணிந்தவர் எத்தனையோ!


சிங்கம் முகமது சிங்கம் எங்கும்

செந்நீர் ஆடி வருகையிலே

செப்புச் சிலைநகர் தேசிங்கு கைவாள்

தீப்பொறி கக்கிச் சுழலையிலே

செக்கா வானமா பூமியா வென்று

சிந்திக்க வைக்கும் வேளையிலே

தீரன் முகமது குண்டடிபட்டு

வீழ்ந்ததைத் தேசிங்கு கண்டானே


வெற்றியினருகில் கையொடிந்தது போல்

மேனி துடித்து நின்றானே

தனித்தனி மதத்தில் பிறந்த நமது

சரித்திரமே ஒரு புதுமையடா!

இணைந்த நம்குரலின் ஒற்றுமை முழக்கம்

என்றுமே அழியாத பெருமையடா!

தங்கத் தூணொன்று குங்குமச் சேற்றில்

சாய்ந்ததோ வென்று அழுதானே....!


நம்குலப்பெயரை நாட்டி விரைவிலே

நானும் வருகிறேன் என்றானே

சுற்றிய சேனை அடங்கலும் வென்றான்

சூரன் நவாபும் ஓடி ஒளிந்தான்

கத்தி எடுத்தே நன்றி மொழிந்தான்

வெற்றி வெற்றியென விண்ணிலெறிந்தான்!

பெற்ற பூமியை வணங்கி நிமிர்த்தினான்

பெரும் படைவாளை மார்பிலேந்தினான்

வற்றாப் புகழோன் செஞ்சியின் தலைவன்

மடிந்ததை யறிந்தாள் மாது ராணியும்


திருமணமாகி ஒரு கணமாகிலும்

திருமுகம் காணாதிருந்தீரே

திரையில் மறைந்ததும் கரந்தனில் முத்தம்

சிந்தியதோடு பிரிந்தீரே!

பெரும்படை வென்று திரும்புவேனென்று

இடும்தடை கடந்து சென்றீரே!

திறம்பட நின்று வரும் பகைகொன்று

களந்தனில் அமைதி கொண்டீரே-என்று

சிரந்தனைமோதி அழுதாளே

தியாக வீரனைத் தொழுதாளே

நடந்த கதை இது மெய்யிலே-உடன்

ராணியும் விழுந்தால் தீயிலே!

(நாட்டுக்கு)

[ரங்கோன் ராதா, 1955]

போருக்கு தொகு

அடியார்கள் உள்ளத்தில் குடிகொள்ளும் தேவதையே!

ஆதரிக்க வேணுமே-என் ஜக்கா தேவி

அடங்காத பேர்களையும் ஆலைவாய்க் கரும்பு போல

ஆட்டிவைக்கும் அம்பிகை நீயே-என் ஜக்கா தேவி

ஆதரிக்க வேணுமே


காகம் பறக்காத தேசமெல்லாம்

கத்தியால் வெட்டுவேன் பாதர் வெள்ளை!-அய்யா

கருவறுத்தவன் பாதர் வெள்ளை


பாதர் வெள்ளையென்ற பேரைக் கேட்டால்

பத்துமாத கர்ப்பம் பறந்துவிடும்!

இலங்கை தேசத்திற்கு இந்திரஜித்து

பாஞ்சால நாட்டிற்கு பாதர் வெள்ளை!

பாஞ்சாலங் குறிச்சியின் பஞ்சவர்ணக்கிளி

வந்தேனே நானும் வந்தேனே


பஞ்சபாணன் துயர் மிஞ்சும் ரூபவதி

வஞ்சியஞ்சிடும் கொஞ்சும் கிளிமொழி

பாதச் சிலம்புக் கொஞ்சி

பத்தினியால் வஞ்சி

வந்தேனே- நானும்

வந்தேனே!


பாதர்: போருக்கு போறேண்டி பாதர் வெள்ளை

போக விடைதாடி வெள்ளையம்மா!


வெள்: போகாதே போகாதே என் கணவா

பொல்லாத சொப்பனம் கண்டதினால்


பாதர்: கண்ட கனவதைச் சொல்லாவிட்டால்

கத்தியால் வெட்டிடுவேன் பாதர் வெள்ளை


வெள்: பிஞ்சு மலருமே சோம்பக் கண்டேன்

பிஞ்சிட்ட வாழையும் சாகக் கண்டேன்


பாதர்: பிஞ்சிட்ட வாழையும் சாகக் கண்டால்

பின்வாங்கேன் சண்டையில் பாதர் வெள்ளை!


வெள்: ஊமத்துரை மாமா கட்டபொம்மு

ஊரை விட்டோடக் கனவு கண்டேன்


பாதர்: ஊரை விட்டோடக் கனவு கண்டால்

ஊக்கத்துடன் சண்டை செய்வேனடி!


ஏறியுட் கார்ந்தோர் குதிரையின் மேல்

இழுத்துப் பிடித்தார் கடிவாளத்தை

வையாளி யோடுதங் காட்டுவழி

வாரி எறியுதாம் பேக்குதிரை!


ஒட்ட ரங்காடு ஒடங்காடு

ஓடிவருகுதாம் பேக்குதிரை!

சில்லாடற்காடு செடிக்காடு

சிட்டாப் பறக்குதாம் பேக்குதிரை!

காலில் அகப்பட்ட கற்களெல்லாம்

பிறண்டு ஓடுதாம் முன்னாலே!


ஓட்டப் பிடாரத்து பாதை வழி

ஓடி வருகுதாம் பஞ்சவர்ணம்

கொக்குப் பறந்ததுபோல் குதிரை

கோட்டையை விட்டுமே கண்டு கொண்டு

குதிரையை விட்டுமே தானிறங்கினான்

கோடையிடி போன்ற பாதர் வெள்ளை!

[குலதெய்வம், 1956]

பொது வாழ்வு தொகு

தூங்காது!கண் தூங்காது!

இருள் சூழும் உலகில்

பொதுவாழ்வு தோன்றும்வரை

தூங்காது; கண் தூங்காது! (தூங்காது)


வேங்கைவாட நரி மேன்மையாவதும்,

வேங்கைவாட நரி மேன்மையாவதும்,

வீரர்மரபு தாழ்வதும் நீங்கும்வரை

தூங்காது; கண் தூங்காது!


ஆதி நீதி முறை ஆட்சி செய்யவே

அன்பு மழை பெய்யவே

சோதி இறையருள் ஆறுபாயவே

பேதம் மறைந்து உய்யவே, காணும்வரை

தூங்காது; கண் தூங்காது


இருள் சூழ்ந்த உலகில்

பொதுவாழ்வு தோன்றும்வரை

தூங்காது; கண் தூங்காது!

[கற்புக்கரசி,1957]

செயல் வீரர்! தொகு

வரும் பகைவர் படைகண்டு

மார்தட்டிக் களம் புகும்

மக்களைப் பெற்றோர் வாழ்க!


மணங்கொண்ட துணைவர்க்கு

விடைதந்து வேல்தந்த

மறக்குலப் பெண்கள் வாழ்க!


உரங்கொண்டு போராடி

உதிரத்தில் நீராடி

அறங்காத்த உள்ளம் வாழ்க!


திறமான புகழ்கொண்ட

திடமான தோள்களும்

செயல் வீரர் மரபு வாழ்க!


[அம்பிகாபதி,1957]

நாங்கள் பிறந்த நாடு தொகு

     ஆண்: துள்ளி வரப் போறேன்
         சுருள் சுருளாய் பாட்டுகளை
         அள்ளி விடப் போகிறேன்
         அய்யா எஞ்சாமிகளே-இந்தப்
         திரையைக் கொஞ்சம் தூக்கிடுங்கோ
         தமிழ்நாடு
         இருவர்: நாங்க பொறந்த தமிழ் நாடு-இது
         நாலு மொழிகளின் தாய் வீடு!
         ஓங்கி வளரும் கலையைத் தலையிலே
         தாங்கி வளரும் திருநாடு! (நாங்க)
         பெண்: மதுரத் தமிழ் வழிந்து
         உதிரத்தொடு கலந்து
         மனதில் துணிவுகொண்டு வாழ்ந்தவர்-சக்தி
         வளரக்கலை பயின்று தேர்ந்தவர்
         ஆண்: அன்று-
         எதிரிப்படை யெழுந்து
         பதறிமிகச் சினந்து
         இமயச்சரிவில் வந்த போதிலே-வெற்றி
         எமக்கென்றே முழங்கிற்று காதிலே!-இது (நாங்க)
         ஆந்திர நாடு


         இருவர்: எங்கள் நாடுஆந்திர நாடு-விசால
         ஆந்திரநாடு
         எந்த நாடும் இதற்கில்லை ஈடு!
         பெண்: பொங்கும் கிருஷ்ணா நதி ஓடும் நாடு
         ஆண்: போகம் மூன்றும் தவறாத நாடு (எங்)
         பெண்: எங்கள் பொழிலும் தோன்றுவளர் கூடு
         ஆண்: என்றும் நீ இதைப் போற்றிக் கொண்டாடு (எங்)
         பெண்: கீர்த்தனை கவிதைகள் ஆயிரம் வளர் நாடு (எங்)
         ஆண்: இதை-நேர்த்தியுடன்
         இருகை கூப்பி வாழ்த்துவமே(எங்)
         கன்னட நாடு
         பெண்: தங்கம் விளையும் பூமி
         எங்கள் கன்னட பூமி
         காவேரி ஆறு பாயும்
         காட்டில் யானைகள் மேயும்
         சாமுண்டி சக்தி மேவும்
         தவறாத பக்தி வாழும் (தங்கம்)
         மலையாள நாடு
         இருவர்: எங்கள் மலையாளம் புகழ்வெகு நீளம்
         வற்றா வளங்கள் அதன் அடையாளம்
         பெண்: அலையாடும் கடல் விளையாடும்
         ஆண்: அக்கம் பக்கம் கொக்குகளும்
         வட்டமிட்டுப் பறக்கும் (எங்கள்)
         பெண்: பாக்குமரத்திலே பாளை சிரிக்கும்-பச்சை
         பட்டாடைபோல் கதலி இலை விரிக்கும்
         ஆண்: தேக்கு மரங்கள்
         விண்ணை இடிக்கும்-இன்னும்
         சித்திரைச் சோலையெல்லாம்
         கண்ணைப்பறிக்கும்
         அழகுக் குயில்கள் வந்து
         பாடிக்கிடும்-தென்னையை
         மிளகுக்கொடி படர்ந்து
         மூடிக்கிடும்
         பெண்: சிலுசிலுக்கும் அருவி
         ஓடிக்கிடும்-மயில்
         சிறகை விரிச்சிகிட்டு
         ஆடிக்கிடும்
         ஆண்: தேனிருக்கும்
         பெண்: பூவிருக்கும்
         பெண்: மானிருக்கும்
         ஆண்: வனமிருக்கும்
         இருவர்: செங்கனிகளுமிருக்கும்
         தின்றால் மிகு இனிக்கும் (எங்கள்)
         [திருமணம்,1958]

நீதி தவிக்குத தொகு

     ஒருவன்: மூளை நெறஞ்சவங்க
         காலம் தெரிஞ்சவங்க
         மூத்தவங்க படிச்சவங்க
         வாழ்கின்ற நாடு!-இது
         மற்றவன்: மூச்சுத் திணறுதுங்க
         முளியும் பிதுங்குதுங்க
         பாத்துக்குங்க கேட்டுக்குங்க
         ஜனங்கள் படும்பாடு!-இது
         ஒருவன்: நெலமை இப்படி இருக்குது
         நீதி கெடந்து தவிக்குது
         கொடுமை மேலே கொடுமை வளர்ந்து
         நெருக்குது - அது
         அருமையான பொறுமையைத்தான்
         கெடுக்குது - ஊர் (நெலமை)
         மற்றவன்: பாதை மாறி நடக்குது,
         பாஞ்சுபாஞ்சு மொறைக்குது
         பழமையான பெருமைகளைக்
         கொறைக்குது-நல்ல
         பழக்கமெல்லாம் பஞ்சு பஞ்சாப்
         பறக்குது - ஊர்ப் (நெலமை)
         ஒருவன்: என்ன இருந்தாலும் மனுசன்
         இப்படி ஆடக் கூடாது
         மற்றவன்: எதுக்கும் ஒரு முடிவிருக்குது
         அதிகநாளு ஆடாது
         ஒருவன்: ஏழைகளை அடிச்சுப் பறிக்கும்
         எண்ணம் உடம்புக் காகாது
         மற்றவன்: காலம் கொஞ்சம் திரும்புச்சுன்னா
         கவனிக்காமெப் போகாது-ஊர் (நெலமை)
         ஒருவன்: அன்பு வளர்ந்த கோட்டைகுள்ளே
         அகந்தை புகுந்து கலைக்குது
         மற்றவன்: வரம்பு மீறி வலுத்த கைகள்
         மக்கள் கழுத்தை நெரிக்குது
         ஒருவன்: விருப்பம் போல நரிகள் சேர்ந்து
         வேட்டையாடிக் குவிக்குது
         மற்றவன்: வெறிநாய்க்கு உரிமை வந்து
         வீட்டுகாரனைக் கடிக்குது-ஊர் (நெலமை)
         [உத்தம புத்திரன்,1958]

கண் தூங்குமோ? தொகு

எங்கே உண்மை என் நாடே

ஏனோ மௌனம் சொல் நாடே

மேலான செல்வம் வீணாகலாமோ?

வீழாமல் மீளாயோ! (எங்கே)


மீறிவரும் குரல் கேளாயோ

வெற்றி வரும் வேகம் பாராயோ

பாராளத் தகுந்தவள் உன் மகளோ

பாதகம் புரிந்திடும் பொய் மகளோ

தாய் வாழ்ந்த வீடும் சாகாத பேரும்

தாழ்ந்தாலுன் கண் தாங்குமோ (எங்கே)


காலமுன்னைக் குறை கூறாதோ

காவியங்கள் யாவும் ஏசாதோ

வாள் வீரம் சூழ்ச்சியை வாழ்த்திடுமோ

போலியைப் பொய்மையைப் போற்றிடுமோ

தாய் வாழ்ந்த வீடும் சாகாத பேரும்

தாழ்ந்தாலுன் கண் தூங்குமோ....?


[இரத்தினபுரி இளவரசி,1959]

வள்ளல் வழி தொகு

     அடியார்க்கு அடியாராய்
         அத்தனையும் கற்றவராய்ப்
         பெரியவராய்ச் சின்னவராய்ப்
         பேசுகின்ற உத்தமரே!
         முடிகள் நரைத்தாலும் மூளை நரைக்காமல்
         முன்னேறி வந்தவரே-ஐயா-உங்கள்
         பொன்மேனி வாழியவே!


         அன்பும் அறிவும் ஆசையும் நெறைஞ்ச
         ஐயா வாழ்க!வாழ்க!
         அம்பது வருஷம் இவரைச் சுமந்த
         அன்னை பூமி வாழ்க! (அன்பும்)
         சின்னக் குழந்தையைப்போலே துள்ளி விளையாடும்
         குணம் வாழ்க!-ஐயா
         குணம் வாழ்க!-ஒரு
         தினை அளவுகூட சுயநலமில்லாத
         மனம் வாழ்க-ஐயா
         மனம் வாழ்க! (அன்பும்)
         காசு பணங்களை கைதிகளாக்கிய
         கை வாழ்க!-ஐயா
         கை வாழ்க!
         காலந் தெரிஞ்சு அதை விடுதலை செய்த
         பை வாழ்க!-ஐயா
         பை வாழ்க!
         அளவுக்கு மீறி சேர்த்து வைப்பதால்
         ஆபத்து வருமென்றே
         அள்ளி அள்ளியே வழங்குகின்றாரிவர்
         வள்ளல் வழி நின்றே-இமய மலையும்
         இவரும் ஒன்றே! (அன்பும்)
         [ஆளுக்கொரு வீடு,1960]

வீரச் செயல் தொகு

     தஞ்சமென்று வந்தவரைத்
     தாய்போல் ஆதரித்து
     வஞ்சகரின் செயல்களுக்கு
     வாள் முனையில் தீர்ப்பளித்து
     அஞ்சாத நெஞ்சில்
     அன்புக்கு இடம் கொடுத்து
     அறங் காக்கும் மக்களிடம்
     பார்த்த விந்தையைச் சொல்லட்டுமா?
     அதிசயம் பார்த்தேன் மண்ணிலே-அது
     அப்படியே நிக்குது எங்கண்ணிலே-நான்
     அதிசயம் பார்த்தேன் மண்ணிலே-அது
     அப்படியே நிக்குது எங்கண்ணிலே
     மூணுபக்கமும் கடல் தாலாட்டுது-தன்
     மானமுள்ள மக்களைப் பாராட்டுது
     வானுயரும் மலையில் அருவி பெருகியே
     வந்துவந்து நிலத்தை நீராட்டுது-பல
     வளம்பெருகி மறவர் பேர்நாட்டுது (அதி)
     மலையைச் செதுக்கிவச்ச சிலையிருக்கு-அதில்
     மனங்கவரும் அழகுக் கலையிருக்கு,
     மானிருக்கு வண்ண மயிலிருக்குச்
     செந்தேனிருக்கு வீரச் செயலிருக்கு (அதி)
     அங்கே-
     சந்தன மரக்கிளையும் தமிழ்க்கடலும்-தழுவி
     சந்தமிசைத்துத் தென்றல் தவழ்ந்து வரும்
     செந்தாழை மலர்தொட்டு மணம்சுமந்து வரும்
     இங்கே-
     தங்கிட நிழலுமில்லை
     பொங்கிடக் கடலுமில்லை-சற்று
     நேரங்கூட வெயில் மறைவதில்லை
     நம்மை தழுவிடத்
     தென்றலெதும் வருவதில்லை.
     [கலையரசி,1965]

குழி பறிக்குது வேரிலே! தொகு

     ஒற்றுமையில் ஓங்கிநின்ற சக்தியாலே-மக்கள்
     உள்ளமெல்லாம் பொங்குதடா வெள்ளம்போலே
     வெற்றியெனும் மேடையிலே அன்புக்காளை....
     வீரநடை போடுதடா இந்தவேளை....
     அன்பிருக்குது அறிவிருக்குது
     பண்பிருக்குது பாரிலே...அதை
     அழிக்க எண்ணித் திருட்டு நரிகள்
     குழிபறிக்குது வேரிலே...
     ஒருவர்: மாமறவர் வழியில் பிறந்து சிறந்து
         மகாவீரன் என விளங்குவேன்
         மற்றவர்: வாளும் திடமுடைய தோளும்
         துணையிருக்க யார்க்கும் உலகில்
         அஞ்சிடேன்
         இருவர்: எண் திசைகளும் கண்டு நடுங்க
         வென்று வாகை சூடுவோம்
         அறிவிலே கலைஞராய் திறனிலே
         தீரராய்
         நாடும் ஏடும் எமைப்பாட
         தொல்லுலகம் உள்ளவரை
         வளர்புகழ் அடைவோம்
         கூட்டம்: இது வீரர் பிறந்த மண்ணு -இதில்
         நாமெல்லாம் ஒண்ணு
         சக்க: அட ஆத்தே நீங்க பெரும்
         வீரர்கள்தான்-உங்களைப்
         பார்த்தே எதிரி ஓடிப்போயிடுவான்
         கூட்டம்: அன்பிருக்குது அறிவிருக்குது
         பண்பிருக்குது பாரிலே-அதை
         அழிக்க எண்ணித் திருட்டு நரிகள்
         குழிபறிக்குது வேரிலே...
         ஒருவர்: வெட்டும்கூர் வாளினைக்
         காட்டிடுவேன்-நாட்டில்
         வேதனை செய்வோரை வாட்டிடுவேன்
         மற்றவர்: எந்தநாடும் இதற்கீடில்லை என்றே-என்
         சொந்த நாட்டைச் சொர்க்க
         மாக்கிடுவேன்
         இருவர்: கற்றவர் நெஞ்சக் கருத்தினிலே ஒன்றி
         ஒற்றுமை கொண்டுல காண்டிடுவோம்
         வெட்டும் கூர்வாளினைக்
         காட்டிடுவோம்-நாட்டில்
         வேதனை செய்வோரை வாட்டிடுவோம்
         கூட்டம்: இது வீரர் பிறந்த மண்ணு-இதில்
         நாமெல்லோரும் ஒண்ணு
         சக்க: அட ஆத்தே நீங்க பெரும்
         வீரர்கள்தான்-உங்களைப்
         பார்த்தே எதிரி ஓடிப்போயிடுவான்
         கூட்டம்: அன்பிருக்குது அறிவிருக்குது
         பண்பிருக்குது பாரிலே-அதை
         அழிக்க எண்ணித் திருட்டு நரிகள்
         குழிபறிக்குது வேரிலே.
         [மர்மவீரன்,1958]

உழைத்து முன்னேறு தொகு

     பையன்கள்: ஓரொண்ணு ஒண்ணு
         ஈரொண்ணு ரெண்டு
         மூவொண்ணு மூணு
         நாலொண்ணு நாலு
         வாத்தியார்: ஓரொண்ணு ஒண்ணு
         உள்ள தெய்வம் ஒண்ணு
         ஈரொண்ணு ரெண்டு
         ஆண் பெண் ஜாதி ரெண்டு
         மூவொண்ணு மூணு
         முத்துத் தமிழ் மூணு
         நாலொண்ணு நாலு
         நன்னிலம் நாலு
         உள்ள தெய்வம் ஒண்ணு
         ஆண் பெண் ஜாதி ரெண்டு
         முத்துத் தமிழ் மூணு
         நன்னிலம் நாலு
         பையன்: அஞ்சொண் அஞ்சு
         வாத்தியார்: அஞ்சுவதற்கு அஞ்சு
         பையன்: ஆறொண் ஆறு
         வாத்தியார்: நல்லறிவுகள் ஆறு
         பையன்: ஏழொண் ஏழு
         வாத்தியார்: இசைக்குலங்கள் ஏழு
         பெண் குழந்தை: ஸரிகமபதநிஸா
         பையன்: ஏழொண் ஏழு
         வாத்தியார்: இசைக் குலங்கள் ஏழு
         பையன்: எட்டொண் எட்டு
         வாத்தியார்: எட்டும் வரை எட்டு
         பையன்: ஒன்பதொண் ஒன்பது
         வாத்தியார்: உயர் மணிகள் ஒன்பது
         பையன்: பத்தொண் பத்து
         வாத்தியார்: பாடல்கள் பத்து
         லாலல்ல லாலல்ல லாலலல்லா
         லாலல்ல லாலல்ல லாலலல்லா
         வாத்தியார்: உன்னையெண்ணிப்பாரு
         உழைத்து முன்னேறு
         உண்மையைக் கூறு
         செம்மை வழி சேரு
         பெண் குழந்தை: உன்னை யெண்ணிப்பாரு
         உழைத்து முன்னேறு
         உண்மையைக் கூறு
         செம்மை வழி சேரு
         வாத்தியார்: அன்புக்கு வணங்கு
         அறிந்த பின் இணங்கு
         பண்புடன் விளங்கு
         பசித்தவர்க் கிரங்கு
         பையன்: அன்புக்கு வணங்கு
         அறிந்தபின் இணங்கு
         பண்புடன் விளங்கு
         பசித்தவர்க் கிரங்கு
         லாலல்ல லாலல்ல லாலலல்லா
         லாலல்ல லாலல்ல லாலலல்லா
         வாத்தியார்: பேதங்கள் தீர்த்து
         பெருமையை உயர்த்து
         நீதியைக் காத்து
         நேர்மையைக் காட்டு
         பெண் குழந்தை: நேர்மையைக் காட்டு
         பொன் மொழி கேட்டு
         பொய்மையை மாற்று
         பொறுப்புகள் ஏற்று
         பொதுப் பணியாற்று
         வாத்தியார்: திருக்குறள் நூலை
         சிறந்த முப்பாலை
         கருத்துடன் காலை
         படிப்பதுன் வேலை
         லாலல்ல லாலல்ல லாலலல்லா
         லாலல்ல லாலல்ல லாலலல்லா
         [மகனே கேள்,1965]

ஆமாம் சாமி ஆசாமிகள் தொகு

ஆண்: ஆறறிவில் ஓரறிவு அவுட்டு-சிலருக்கு

ஆறறிவில் ஓரறிவு அவுட்டு-இருக்கும்

ஐந்தறிவும் நிலைக்குமுன்னா

அதுவுங்கூட டவுட்டு (ஆறறிவில்)

அடக்கமில்லா பெண்கள் சிலர்

நடக்கும் எடக்கும் நடையிலும்

ஆதிகால பண்பைக் காட்டிப்

பறக்க விடும் உடையிலும் (ஆறறிவில்)

தன்ரேகை தெரியாத

பொய்ரேகைக் காரரிடம்

கைரேகைப் பார்க்கவரும் முறையிலும்

அவன் கண்டது போல் சொல்லுவதை

நம்பிவிடும் வகையிலும்

ஏமாறும் மனத்திலும்

ஆமாஞ்சாமி கருத்திலும்

எந்த நாளும் திருந்தாத

மூடத்தனத்திலும்

சோம்பேறி சுகத்திலும்

துடை நடுங்கும் குணத்திலும்

சொந்த நிலையை மறந்து திரியும்

ஈனப் பேச்சிலும்

சிந்திக்காத இடங்களிலும்

தெண்டச் சோத்து மடங்களிலும் (ஆறறிவில்)


[மகனே கேள், 1965]

வம்பு வளர்க்கும் கும்பல் தொகு

பெண்: மட்டமான பேச்சு-தன்

வாளைக் கெடுக்குதுங்க-அது

வெட்டித்தனமாக் கேக்கிறவங்க

காதையும் கெடுக்குதுங்க (மட்ட)


ஆண்: மட்டமான பேச்சு...

இருவரும்: மட்டமான பேச்சு...

சந்திலும் பொந்திலும் வாதம்-அதால்

தலைவலி மருந்துக்கு லாபம்-அந்த

ஜாடையிலே சில கேடிகள் செய்வது

சட்டையின் பைகளைக்

கெடுக்குதுங்க


கும்பல் சேர்த்து வம்பு வளர்த்து

குடும்பத்தைக் கலக்குதுங்க-பெருங்

குழப்பமாக்கியே சண்டைகள் மூட்டி

பொழப்பையும் கெடுக்குதுங்க

புரளியும் வதந்தியும் மூட்டி-ஒரு

பொய்யை நூறாகக் கட்டி-கரும்

பூதமென்றும் சிறு

பேய்களென்றும்-பல


பாதையும் ஊரையும் கெடுக்குதுங்க (மட்ட)

அறையில் வளர்ந்து வௌியில் பறந்து

அவதிப் படுத்துதுங்க-ஊரை

அவதிப் படுத்துதுங்க-அது

அரசியல் வரைக்கும் நாக்கை நீட்டியே

அமைதியைக் கெடுக்குதுங்க


பாழும் பொய்யென்று காட்டி-உடல்

மாயக் கூடென்று கூட்டி-உயர்

வானத்திலே பரலோகத்தைப் பாரென்

மனதையும் அறிவையும்

கெடுக்குதுங்க (மட்ட)


மட்டமான பேச்சு-தன்

வாயைக் கெடுக்குதுங்க-அது

வெட்டித்தனமாக் கேக்கிறவங்க

காதையும் கெடுக்குதுங்க


ஆண்: எது?

பெண்: மட்டமான பேச்சு


[மகனே கேள்,1965]

கலைந்து விடும் காலம் தொகு

ஆண் : மணவறையில் சேர்த்து வைத்து

வாழ்த்துரைக்கும் ஓர் காலம்


மக்களைப் பெற்று மகிழவைக்கும் ஓர் காலம்

மனதிலே பாசங்கள் வளர்ந்து மறைந்தபின்னே

கனவுகண்டு விழிப்பதுபோல் கலைத்துவிடும் ஓர் காலம்


காலம்....காலம்

சூதாட்டம் ஆடும் காலம்-பல

மாறாட்டம் செய்து போகும்

வாதாடி என்ன லாபம்-துயர்

மலிந்தோர்க்கு எதுநியாயம் (சூதாட்டம்)


பெண் : சூதாட்டம் ஆடும் காலம்-பல

மாறாட்டம் செய்து போகும்

வாதாடி என்ன லாபம்-துயர்

மலிந்தோர்க்கு ஏது நியாயம் (சூதாட்டம்)

பேராசை காட்டி மயக்கும்-இணை

பிரியாத அன்பைப் பிரிக்கும்


பெண் : மாறாத இன்பம் போலே-வந்து

மறைந்தோடும் மண் மேலே


ஆண் : இனி வாதாடி என்ன லாபம்-துயர்

மலிந்தோர்க்கு ஏது நியாயம்

சூதாட்டம் ஆடும் காலம்-பல

மாறாட்டம் செய்து போகும்


ஆண் : மக்கள் வேண்டும்; செல்வம் வேண்டும்-என

மறவாமல் உள்ளம் தூண்டும்

மக்கள் வேண்டும் செல்வம் வேண்டும்-என

மறவாமல் உள்ளம் தூண்டும்


மந்தையாக யாவும் கூடும்

சந்தை மாடு போலே ஓடும்-இனி

வாதாடி என்ன லாபம்-உந்தன்

நிலை காண ஏது நேரம் (சூதாட்டம்)


பெண் : வாதாடி என்ன லாபம்-துயர்

மலிந்தோர்க்கு ஏது நியாயம்


ஆண் : சூதாட்டம் ஆடும் காலம்-பல

மாறாட்டம் செய்து போகும்.


[மகனே கேள்,1965]